Ad

சனி, 26 டிசம்பர், 2020

அ.தி.மு.க-வில் அங்கீகாரம் இருக்கிறதா என்பது தேர்தல் நேரத்தில் தெரியும்! - நடிகர் செந்தில்

புதுக்கோட்டைப் பேருந்து நிலையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்ட பிக்பாஸ் சூப்பர் மார்க்கெட்டை நகைச்சுவை நடிகர் செந்தில் திறந்து வைத்தார். தொடர்ந்து, முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்திற்குச் சென்றவர், அங்குள்ள சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், ``தயாரிப்பாளர்கள் வட்டிக்குப் பணம் வாங்கி படங்களைத் தயாரித்த நிலையில், கொரோனா பிரச்சினையால், தியேட்டர்கள் மூடப்பட்டதால், வேறுவழியின்றி தாங்கள் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டிக்கொண்டிருக்க முடியாது என்பதால்தான் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

நடிகர் செந்தில்

திரைத்துறையில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எளிதல்ல. பெண் நகைச்சுவை நடிகர்கள் குறைந்து வருகின்றனர். பெண்கள் பலரும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க முன்வர வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அனைத்து வகையான நடிகர்களுக்கும் வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்னும் நிறையச் செய்திருப்பார். ஜன நாயக நாடு, நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லையே.

Also Read: தமிழ்நாடு நாள், எழுவர் விடுதலை, 7.5% இட ஒதுக்கீடு; அ.தி.மு.க-வில் இணையக் காரணம் - கல்யாண சுந்தரம்

நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும். இப்போது உள்ள எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பலருக்கும் பிரச்சாரம் செய்தேன். எல்லாருக்கும் ஒருநாள் தான் பிரசாரத்தில் பேசியுள்ளேன். புதுக்கோட்டை அமைச்சருக்கு மட்டும் இரண்டு நாள் பிரசாரம் செய்திருக்கிறேன். வரும் தேர்தலைப் பொறுத்தவரை எப்போது பிரசாரம் செய்ய உள்ளேன். யாருக்குச் செய்ய உள்ளேன் என்பது குறித்து ஜனவரி மாதத்தில் தெரிவிப்பேன்.

நடிகர் செந்தில்

அ.தி.மு.க-வில் எனக்கு உரிய அங்கீகாரம் இடம் உள்ளதா என்பது குறித்துத் தேர்தல் வரும்போது தெரியும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போது நடுநிலையாகத்தான் இருக்கிறேன்" என்றார்.

இதற்கிடையேதான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/actor-senthil-speaks-about-recognition-in-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக