Ad

சனி, 26 டிசம்பர், 2020

கிறிஸ்துமஸ் வாழ்த்து: கொரோனாவைக் குறிப்பிடாத ட்ரம்ப்... பெருந்தொற்றின் வலியைப் பேசிய ஜோ பைடன்

கிறிஸ்துமஸ் தினத்தை உலகமெங்குமுள்ள மக்கள் மத வேறுபாடுகளின்றி கோலாகலமாக கொண்டாடினர். இம்முறை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் குறைந்தே காணப்பட்டன. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் மக்களுக்கு தங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கொரோனா சூழலில் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தினர்.

அந்த வகையில், அமெரிக்காவின் தற்போதைய அதிரான டொனால்டு ட்ரம்ப்பும், அடுத்த அதிபரான ஜோ பைடனும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வாழ்த்துக் கூறினர்.

ஜோ & ஜில் பைடன் வாழ்த்து:

ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து வெளியிட்டகிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோவில், ``நாட்டு மக்களாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தார் அனைவரும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமென நானும் என் மனைவி ஜில் பைடனும் வேண்டிக்கொள்கிறோம். இந்த ஆண்டு நம் அனைவருக்கும் மிகவும் சவாலான ஆண்டாக இருந்துவிட்டது. இந்தாண்டு பண்டிகையை நமது நம்பிக்கையாலும், மனிதநேயத்தாலும் நிரப்புவோம்.

ஜோ பைடன்

தற்போதைய சூழலில் பலர் தங்களின் வேலைகளை இழந்து அன்றாட உணவுக்கே போராடி வருகின்றனர். பலர் தங்களின் குடியிருப்புகளுக்கு வாடகை கொடுக்க சிரமப்படுகின்றனர். ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கே நாம் இந்த பூமியில் வாழ்ந்து வருகிறோம். அதனால், உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் உதவுங்கள்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய ஜோ பைடன் அமெரிக்காவில் நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்த தனது வருத்தத்தினைப் பதிவு செய்தார், ``வழக்கமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று எங்கள் வீட்டில் இருபதிலிருந்து இருபத்தைந்து உறவினர்கள் ஒன்றாகக் கூடுவோம். இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதுபோன்ற நிகழ்வுகளை நடத்தவில்லை. எங்களின் குடும்பத்தினரை இந்நேரத்தில் பிரிந்திருந்தாலும் அவர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகாமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

ட்ரம்ப் & மெலனியா வாழ்த்து:

தனது மனைவி மெலனியாவுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பகிர்ந்துகொண்ட டொனால்டு ட்ரம்ப், இந்தாண்டு அமெரிக்காவைப் பெரிதும் பாதித்த கொரொனோ அச்சுறுத்தல் குறித்த எந்தவொரு கருத்தைதையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, இந்தாண்டு கொண்டாட்டமானது வழக்கத்தைவிட வேறுபட்டிருக்கும் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப் - மெலனியா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் போன்றே இந்தாண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவோம். இந்த நன்னாளில் கடவுளுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, நமது நண்பர்களைச் சந்தித்து அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவோம். அத்தோடு மட்டுமல்லாமல் முன்களப் பணியாற்றிவரும் மருத்துவ துறையினருக்கும், ராணுவத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

ஜோ பைடனின் வெற்றியையும் அமெரிக்க அதிபர் தேர்வாணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டதால். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராகப் பதவியேற்கப்போவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இருவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அந்நாட்டு ஊடகங்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

அதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய தினம் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் இணைந்து வெளியிட்ட வீடியோவில், ``நாட்டில் நிலவி வரும் கொரோனா சூழலை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அவை விரைவில் இந்தக் கொள்ளை நோய்க்கு முடிவு கட்டும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/international/trump-barely-mention-covid-19-in-his-christmas-message

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக