சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா பரவலின் ஆரம்ப காலகட்டத்தில், தொற்று ஏற்பட்ட ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர். தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாக குறைந்த பின்னர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்களால் மீண்டும் தொற்று வேகமாக பரவியது. இதனால் கூடுதல் கட்டடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை தொகுதி நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகஸ்ட் 6-ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 80% க்கும் மேலாக நுரையீரல் பாதிப்பு இருந்ததால் மருத்துவமனை முதல்வர் இரத்தினவேல் தலைமையில் மருத்துவ குழுவினர் மணிகண்டனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். அரசு வழிகாட்டுதல்படி 20 நாட்கள் செயற்கை சுவாச கருவி (சி.பி.ஏ.பி) மூலமும், பின்னர் 40 நாட்கள் உயர் ஓட்ட ஆக்ஸிஜன் கருவி (high flow nasal oxygen) மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளார். சுமார் 84 நாட்கள் சிகிச்சைக்கு பின் மணிகண்டன் பூரண குணமடைந்துள்ளார். 80 சதவீத பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து பூரண குணமடைய வைத்த அரசு மருத்துவமனைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இது குறித்து நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன்..., ``நான் சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் அசோசியேசன் தலைவராக உள்ளேன். அதனால் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அவர்கள் உங்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் என கூறி எனக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் எனக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் அரசு மருத்துவமனை சென்றேன் அங்கு கொரோனா சிகிச்சை அளித்தனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
தொடர்ந்து மருந்து, மாத்திரை ஆக்ஸிஜன் கொடுத்து சிகிச்சை அளித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் டீன் சார் பார்த்து நம்பிக்கையும் தெரிவித்தனர். பின்னர் 84 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்ததுள்ளேன். தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என தெரிவித்தார்.
80% சதவீதம் கொரோனோ பாதிப்பு ஏற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் 84 நாட்களுக்கு பின் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியது அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது!
source https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-village-head-recovered-from-corona-after-84-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக