புதுவையின் காரைக்கால் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சித் திருவிழா நடைபெற்றது. சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்து செல்லும் நிகழ்வு இனிதே சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன்சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிகாரிகாபட், கோயில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் மற்றும் தருமபுரம் ஆதீன 27-வது குருமகா தேசிக சந்நிதானம், ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிஞான சம்பந்த சுவாமிகள் மற்றும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்று காரணமாக இக்கோயிலில் ஆன்லைன் மூலம் தரிசன அனுமதி வசதியை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் நேரடி தரிசனத்துக்காக ஆன்லைன் மூலம் சுமார் 17,000 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று அதிகாலை சனிப்பெயர்ச்சி என்பதால், விழாவில் கலந்துகொள்ள முதல்நாளே ரயில்கள், பேருந்துகள், கார்கள் மூலம் பக்தர்கள் திருநள்ளாறை வந்தடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காரைக்கால் வந்த புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,
"கோயிலுக்குள் பணியிலிருக்கிற அரசு ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சனிபகவான் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கிற பக்தர்கள் கொரோனா தொற்றில்லாத சான்றுடன் வந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்ச்சியைப் பதிவு செய்கிற பத்திரிகையாளர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று அறிவித்தார்.
பத்திரிகையாளர்களுக்கு நேரு நகரில் உள்ள நோய்த்தடுப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா சோதனை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. வெளியூரிலிருந்து ஆன்லைன் மூலம் முன் அனுமதி பதிவுடன் வந்த பக்தர்களை, "கொரோனா சோதனை செய்தவர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி, பரிசோதனை சான்றுடன் வராதவர்களை அனுமதிக்க மாட்டோம்" என்று கோயில் ஊழியர்கள் கறாராகக் கூறிவிட்டனர். காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்த பக்தர்கள் நேற்று காலை முதல் அரசு மருத்துவமனையில் காத்திருந்தனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சோதனை செய்யப்படும். வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் திரும்பிப் போய் அந்தந்த மாநிலங்களிலிருந்து கொரோனா சான்றுடன் வர வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏமாற்றம், அதிர்ச்சி, விரக்தியால் உந்தப்பட்ட பக்தர்கள் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை என்று ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். சனிப்பெயர்ச்சித் திருவிழா ஏற்பாடுகளை அனுபவமற்ற அதிகாரிகளை விட்டு செய்யச் சொன்னதால் இப்படி நடைமுறைக் குளறுபடிகள் நடந்துள்ளன. அதன்பின் தரிசனத்திற்கு கொரோனா சான்று தேவையில்லை என்று அறிவிக்கவே போராட்டம் கைவிடப்பட்டது.
இத்தனை குளறுபடிகளைத் தாண்டி இன்று சனிப்பெயரச்சி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/spiritual/news/thirunallar-sanipeyarchi-darshan-done-by-devotees-despite-corona-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக