சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கொரோனா ஊரடங்குக்கு பிறகு கடந்த சில வாரங்களாக திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சபரிமலை மண்டல மகரவிளக்கு காலங்களில் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டும். சபரிமலை செல்லும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வந்துவிட்டுதான் திரும்புவார்கள். இதனால், நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி 20-ம் தேதிவரை கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால், கொரோனா நோய்த் தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கன்னியாகுமரியிலும் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் திறக்கப்பட்டதால் கடற்கரையில் கடை விரித்துள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் நெருக்கமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்புக் கம்பி, தகர ஷீட்கள் மூலம் நூற்றுக்கணக்கான கடைகள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காரப் பொருட்கள், பேன்சி பொருட்கள், நறுமணப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கைவினைப் பொருட்கள், துணி வகைகள் என பலவகை கடைகள் கன்னியாகுமரி கடற்கரையில் நெருக்கமாக உள்ளன.
Also Read: குற்றங்கள் குறையக் காவடி எடுத்த போலீஸ்... கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பர்யத் திருவிழா!
இந்த நிலையில் இன்று அதிகாலை வேளையில் கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கடைகளில் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கன்னியாகுமரி கடற்கரை புகை மண்டலமாகவே காட்சி அளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் சுமார் 69-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும், சில கடைகளில் உள்ள பொருட்கள் கருகிய நிலையில் காணப்படுகின்றன. இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இழப்புகள் குறித்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது. கடைகள் எரிந்து நாசமானதால் வியாபாரிகள் சோகத்தில் உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கன்னியாகுமரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/accident/fire-accident-in-kanyakumari-shore-69-shops-damaged
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக