``அ.தி.மு.க கூட்டணிக்குள் அடுத்த சிக்கல் உருவாகிவிட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எடப்பாடியில் கரையேறுவது கஷ்டம் என்பதால், வரும் தேர்தலில் தொகுதி மாறும் திட்டத்தில் எடப்பாடி இருக்கிறார் ” என்று புதிய குண்டைத் துாக்கிப் போடுகிறார்கள் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணி நீடிக்கும் என்று அ.தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டுவந்தது. குறிப்பாகக் கடந்த மாதம் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்பாகவே அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், `வரும் தேர்தலிலும் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி தொடரும்’ என்று அறிவித்தார். ஆனால், அதன்பிறகு அரசியல் களத்தில் நடந்துவரும் பல்வேறு மாற்றங்களால் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Also Read: எடப்பாடி பழனிசாமியை கொதிக்கவைத்த சீட் பேரம்..! - முருகன் கொளுத்திய `முதல்வர் வேட்பாளர்' சர்ச்சை
குறிப்பாக ரஜினியின் அரசியல் என்ட்ரி தமிழக அரசியல் களத்தில் புதிய பாதைக்கு வழி வகுத்திருக்கிறது. அ.தி.மு.க மட்டுமே தங்களுக்கு வாய்ப்பாகக் கருதி வந்த கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியின் அரசியல் என்ட்ரி இருக்கப்போகிறது. ஏற்கெனவே ரஜினியை அரசியலுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது பா.ஜ.க தரப்பு. இப்போது ரஜினியின் அரசியல் என்ட்ரி உறுதியாகிவிட்டதால், அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைமை தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்யாமல் இருக்கிறது.
மற்றொருபுறம் அ.தி.மு.க-வுக்குப் பலமாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் உறவு. வட மாவட்டங்களில் கணிசமான வாக்குவங்கியை வைத்திருக்கும் பா.ம.க-வைத் தங்கள் பக்கம் தக்கவைக்க அ.தி.மு.க எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், சமீப நாள்களாக பா.ம.க- அ.தி.மு.க இடையே கூட்டணி வேண்டுமா என இரண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பேச்சு எழுந்துள்ளது என்கிறார்கள். அதற்குக் காரணம், கூட்டணிக் கட்சி என்கிற மாண்பே இல்லாமல் அ .தி.மு.க அரசின் மீதே பல்வேறு விமர்சனங்களை ராமதாஸ் முன்வைத்துவருவதுதான் என்கிறார்கள். அதோடு வன்னியருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடுப் போராட்டம் நடத்தி, சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு சிக்கலை ஏற்படுத்தியது எடப்பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதன்பிறகு பா.ம.க தரப்பும் ரஜினியுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகச் செய்திகள் வெளியானது.
இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி முதல்வர் பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். பழனிசாமியின் இந்த அறிவிப்பு அ.தி.மு.கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகளிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் எடப்பாடியின் இந்த பிரசார அறிவிப்புக்கு எதிராக அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள், தங்கள் வருத்ததைத் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், தனது கண்டனத்தை நேரடியாகவே பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறார். இதன்பிறகு அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் அவசர ஆலோசனை நடத்தினார்கள். அந்த ஆலோசனையின் படி அ.தி.மு.க-வின் தேர்தல் பிரசாரம் முறைப்படி டிசம்பர் 27-ம் தேதி அன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலிருந்து தொடங்கும் என்று அறிவித்தார்கள். அத்தோடு தேர்தல் பிரசாரத்தின் தொடக்கக் கூட்டத்தில் தங்கள் கூட்டணிக் கட்சிக்களையும் மேடையேற்றலாம் என அ.தி.மு.க முடிவெடுத்தது.
இதற்காக முறையான அழைப்பு விடுக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு அமைச்சர்கள் கே.பி அன்பழகன், தங்கமணி ஆகியோர் சென்றனர். ஆனால், அந்தச் சந்திப்பு அ.தி.மு.கவுக்கு சாதகமாக இல்லை என்கிறார்கள். ராமதாஸிடம் அமைச்சர்கள் தரப்பு,``27-ம் தேதி அன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும். தி.மு.க தரப்பு கூட்டணியை பலத்துடன் வைத்துள்ளது. நமது கூட்டணி ஒற்றுமையை வெளிகாட்டும் வாய்ப்பாக இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று சொல்லியுள்ளனர். அதற்கு ராமதாஸ் தரப்பு, ``நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், எங்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் 31-ம் தேதி நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில்தான் வரும் தேர்தல் கூட்டணி பற்றியும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதைப் பற்றியும் பேச இருக்கிறோம். அதற்குப் பிறகு கூட்டணி குறித்து எங்கள் முடிவைச் சொல்கிறோம்” எனப் பதில் அளித்துள்ளனர். அதாவது வரும் தேர்தலில் அ.தி.மு.கவுடன் பா.ம.க கூட்டணி தொடருமா என்பதைச் சந்தேகத்துடனே சொல்லியிருக்கிறார் ராமதாஸ். இதனால் பேச்சுவார்த்தைக்குச் சென்ற அமைச்சர்கள் வருத்தமாகியுள்ளனர்.
அதன்பிறகு பா.ஜ.க தலைவர்களையாவது தங்கள் பிராசார மேடையில் ஏற்றிவிடலாம் என்று திட்டமிட்டது அ.தி.மு.க தரப்பு. கடந்த 24-ம் தேதி அன்று பா.ஜ. கவின் மூத்த தலைவர்களிடம் அ.தி.மு.க தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்கள். ஆனால் பா.ஜ. க தரப்பிலிருந்து வந்த பதிலோ வேறு மாதிரியாக இருந்துள்ளது. ``அகில இந்தியத் தலைமை உத்தரவு இல்லாமல் எங்களால் எந்த முடிவும் எடுக்கமுடியாது. அதனால் உங்கள் கூட்டத்தில் பங்கேற்பது கஷ்டம்” என்று கையை விரித்துள்ளனர். இந்த இரண்டு கட்சிகளின் எதிர்மறையான பதிலால் வருத்தமான எடப்பாடி, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தே.மு.தி.க-வுக்கு அழைப்பே விடுக்கவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம்,``ஒருவேளை நம் அழைப்பினை ஏற்று தே.மு.தி.க தரப்பில் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஒப்புக்கொண்டால், பா.ஜ.க, பா.ம.க நமது கூட்டணியில் இல்லை என்கிற செய்தி பரவிவிடும். அதனால் இந்த பிரசாரக் கூட்டத்தை நமது கட்சியின் பிரசார கூட்டமாகவே நாம் நடத்திக் கொள்ளலாம்”என்று நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார்.
ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட பிறகு பொறுமையாகத் தனது கட்சியின் வியூகத்தை வகுத்துக்கொள்ளும் எண்ணத்தில் எடப்பாடி இப்போது இருக்கிறார். அதைத்தாண்டி பா.ம.க, அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்காமல் போனால், அது தனக்கு ஆபத்து என்று எடப்பாடி எண்ணுகிறாராம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக வன்னியர் வாக்குகள் உள்ளன. அங்கு பா.ம.க-வும் வலுவாக உள்ளது. ஒருவேளை பா.ம.க தங்களது கூட்டணியில் இடம்பெறாவிட்டால், தனது வெற்றிக்கும் அது சிக்கலாகிவிடும் என்று கருதுகிறார் எடப்பாடி.
பா.ம.க, தங்கள் பக்கம் இல்லாமல் போனால் தனது எடப்பாடி தொகுதியை விட்டு வேறு தொகுதிக்குச் செல்லும் மனநிலையில் எடப்பாடி இருக்கிறார். சமீபத்தில் கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசும்போது, ``பா.ம.க இல்லாவிட்டால் நான் வேறு தொகுதிக்கு மாறிவிடுவேன். அம்மா நின்ற காங்கேயம் தொகுதியில் நான் போட்டியிடலாம் என்று எண்ணுகிறேன்” என்று ஓபனாகச் சொல்லியுள்ளார். காங்கேயம் தொகுதியில் அ.தி.மு.க வெற்றிகுறித்து உளவுத்துறை மூலம் சில அறிக்கைகளை வாங்கியுள்ளார். ஒரு சில நிர்வாகிகள் மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடலாம் என்று கருத்துச் சொல்லியுள்ளனர். ஆனால், எடப்பாடியிலிருந்து மடத்துக்குளம் தொகுதிக்கான தொலைவு கூடுதலாக இருக்கிறது. அதனால் காங்கேயத்தையே தனது சாய்ஸ் என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார்.
டிசம்பர் 25-ம் தேதி சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரிடம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கருத்துக் கேட்டபோது, ``கட்சித் தலைமை அதுகுறித்து அறிவிக்கும். முதல்வர் வேட்பாளர் பற்றியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே அறிவிப்பு வெளியிடும்'' என்று சொல்லியுள்ளார். அதாவது அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகிக்கிறதா என்கிற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளோடு களம் இறங்கினாலே அ.தி.மு.க வெற்றி பெறக் கடுமையாகப் போராடவேண்டிய நிலையில் உள்ளது. இப்போது கூட்டணிக் கட்சிகளும் கழன்றுகொள்ளும் நிலையில் இருப்பதால், கடும் அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-alliance-talks-update-over-tn-election-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக