ஏறக்குறைய கடந்த ஒரு வருட காலமாக ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது. 2021-ம் ஆண்டிலாவது `கொரோனா ஃப்ரீ உலகம் செய்திடுவோம்' என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் `தொற்று ஏற்பட்டு மீண்டவருக்கு மறு தொற்று', `இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ்' என அடுத்தடுத்து வரும் அதிர்ச்சி செய்திகள் `வேணாம்... வலிக்குது... அழுதுடுவேன்...' மனநிலைக்கு நம்மைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
உலக நாடுகள் பலவும் `தடுப்பூசி' ஆராய்ச்சியிலும் தயாரிப்பிலும் முழு முனைப்புடன் இறங்கியுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து சில முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கொரோனா தடுப்பூசிக்கான ஆர்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் ஃபைஸர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகளை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் மாடர்னா (Moderna), ஃபைஸர்-பயோ என்டெக் (Pfizer-BioNTech) உள்ளிட்ட சில தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளைக் கடந்து சில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வரும் இவ்வேளையில் கொண்டுவரப்படும் தடுப்பூசி யாருக்கெல்லாம் அத்தியாவசியம், யாருக்கு முதலில் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரையைத் தமிழகத்தைச் சேர்ந்த தொற்று நோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) துணை இயக்குநர் சௌமியா ஸ்வாமிநாதனுக்குக் கடிதமாக எழுதியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் அப்துல் கஃபூரிடம் விரிவாகப் பேசினோம். இவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
``கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் பணி இந்தியாவில் பரவலாக்கப்படும் பட்சத்தில், அது முதலில் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை ஒன்றை உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளேன். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத `ஏசிம்ப்டமடிக் (Asymptomatic)' நிலையிலிருந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், ஆரம்பத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி அதிகாரபூர்வமாகக் கொண்டுவரப்பட்டால் அது முதலில் வழங்கப்பட வேண்டியது, இதுவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கே! குறிப்பாகத் தொற்றுக்கு உள்ளாகாத மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், இவர்களுக்குத்தான் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும். இந்த ஆன்டிபாடிகள் எட்டு மாத காலம் வரை வீரியத்துடன் இருக்கும் என்று உறுதியாகியுள்ளது. அதனால் ஒருமுறை தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. இதன் காரணமாகத்தான் இதுவரையில் தொற்று ஏற்படாதவர்களுக்கே தடுப்பூசி அத்தியாவசியமாகிறது.
ஒருவருக்குத் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்பு அவருக்கு கொரோனவுக்கான ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்க வேண்டும். யார் யார் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளன என்பதைக் கண்டறிய இந்த டெஸ்ட் உதவுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் ஏசிம்ப்டமடிக் வகையினர். இவர்களுக்கும் உடலில் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புரதம் உற்பத்தியாகியிருக்கும் என்பதால் தடுப்பூசி தேவையில்லை. யாரெல்லாம் ஏசிம்ப்டமடிக் நிலையிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பதைக் கண்டறியவும் ஆன்டிபாடி டெஸ்ட் உதவுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை இல்லாதபட்சத்தில் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவர்களும் அதை எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.
கொரோனாவுக்கான தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் போட்டுக்கொள்ளலாமா என்ற கேள்வியை மருத்துவரின் முன் வைத்தோம்.
``இதுவரையில் கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான டிரையல்களில் கர்ப்பிணிகள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை. ஃபைஸர் நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியைக் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டது. அதனால் கர்ப்பிணிகள் கொரோனவுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வதை இப்போதைக்குத் தவிர்க்கலாம். ஏனெனில், ஒரு புதிய தடுப்பூசியை முதல் முறையாகச் செலுத்திக் கொள்ளும்போது அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்த விளைவுகள் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படும் வரையில் கர்ப்பிணிகள் யாரும் இதை எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்கிறார் மருத்துவர் அப்துல் கஃபூர்.
source https://www.vikatan.com/health/healthy/should-pregnant-women-get-the-covid-19-vaccine-doctor-explains
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக