தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்படும்’ என்று கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஓர் உதவியாளர் அதில் இடம்பெறுவார்கள் என்றும் காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாகச் சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு இந்த மினி கிளினிக்கில் மருந்துகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
`முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக தமிழகத்தில் 630 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து பல இடங்களிலும் புதிய கிளினிக்குகள் துவக்கப்பட்டு வருகிறது.
காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 - 8 மணி வரையிலும் தினமும் இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமையாக தெரிவித்துவர. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், `கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் செந்தில் - கவுண்டமணி வாழைப்பழ காமடியோடு ஒப்பிட்டு, மினி கிளினிக் ஏமாற்று வேலை’ என்று தெரிவித்துவருகிறார். இந்நிலையில் மினி கிளினிக் திறப்பு விழாவில் தி.மு.க., அ.தி.மு.க இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட வேலங்குடி, எஸ்.சேவல்பட்டி, ஆத்தங்குடி, மேலவண்ணாயிருப்பு, முசுண்டம்பட்டி உள்ளிட்ட ஐந்து இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்க திட்டமிடப்பட்டிருந்தன.
முசுண்டம்பட்டியில் நடந்த திறப்பு விழாவில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், திருப்பத்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பெரியகருப்பன், முன்னாள் அ.தி.மு.க எம். பி செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மினி கிளினிக் திறப்பு விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவரும் அ.தி.மு.க நிர்வாகியுமான பொன்.மணி பாஸ்கரன் பேசியபோது, ``உலகம்பட்டி முதல் மட்டாங்காடு சாலை எங்களது முயற்சியில் கொண்டு வரப்பட்டது” என்று கூறினார்.
அப்போது பாதியில் குறுக்கிட்ட பெரியகருப்பன், "இந்த ரோடு என்னுடைய முயற்சியில் போடப்பட்டது" என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த இடமே பதட்டமான சூழல் நிழவியது. அவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் கதர் மற்றும் கிராம வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் விழாவில் பேசாமல் பாதியில் சென்றார். இதனால் விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு முன்பாகவே திருப்பத்தூர் தொகுதியில் பதட்ட சூழல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேல் இடத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/because-of-admk-dmk-issue-mini-clinic-opening-was-stopped-in-middle
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக