Ad

சனி, 26 டிசம்பர், 2020

திருச்சி: வீடுபுகுந்து திருட முயன்ற கேரள இளைஞர்களைத் தாக்கிய மக்கள்! ஒருவர் உயிரிழப்பு

திருச்சியில் வீடுபுகுந்து திருட முயன்ற கேரள இளைஞர்களை விரட்டிப் பிடித்து கிராம மக்கள் தாக்கினர். இதில், ஒருவர் உயிரிழந்தநிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடனைத் தாக்கிய பொதுமக்கள்

திருச்சி ஜீயபுரம், அல்லூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது வீட்டில் இன்று காலை இரண்டு திருடர்கள் சுவர் ஏறிக் குதித்துத் திருட முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இதனைக் கண்டதும் வெங்கடேசன், அதிர்ச்சி அடைந்து சத்தம் போடத் தொடங்கியிருக்கிறார். சத்தம் போட்டால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய திருடர்கள் வெங்கடேசன், அவரது மனைவி ஆகியோரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த திருடன்

அவர்கள் சத்தம் போட்டதும் கிராம மக்கள் ஒன்று திரண்டு இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது இருவரில் ஒருவன், தன் கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி, `என்னைப் பிடிப்பவர்களைக் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், கத்தியைத் தட்டிவிட்டு அவனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

Also Read: திண்டுக்கல்: திருடிக்கொண்டிருக்கும்போதே வந்த போலீஸார்! - சிக்கிய கடப்பாரைத் திருடன்

இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே, இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்த திருடனை, அங்கிருந்த ஒரு மினி லாரியில் ஏற்றி திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, போலீஸார் முன்னிலையில் இளைஞர்கள் மீண்டும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்திய போலீஸார், திருடனைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட திருடன்

என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்.``கேரள மாநிலைத்தைச் சேர்ந்த தீபு, அரவிந்த் என்பவர்கள் இங்கு வேலைசெய்து வந்திருக்கிறார்கள். தீபு என்ற இளைஞர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மாங்காட்டுகரவர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது நண்பனான அரவிந்த், கிருஷ்ண கிருபா பகுதியைச் சேர்ந்த பாபுல்லேயன் எனபவரது மகன் என்பதும் விசாரணையில் தெரியவந்ததது.

போலீஸார்

இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்தவர்களைத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தோம். இதில், தீபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது குறித்து அல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/people-got-2-youth-in-robbery-attempt-beat-them-one-died-near-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக