Ad

சனி, 26 டிசம்பர், 2020

வடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட்? - உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்

ஜனவரி 3-ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இக்கூட்டத்துக்கு அதிகமான அளவில் வட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினரை அழைத்து வரும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

அழகிரி அறிக்கை

`பா.ஜ.க-வில் இணைய உள்ளார், ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறார், தனிக்கட்சி தொடங்க உள்ளார்’ என்று பலவித தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அதற்கு பட்டும்படாமலும் பதில் அளித்து வந்தார் மு.க.அழகிரி.

Also Read: `அழகிரி தமிழகத்தின் ஒவைசியா... பின்னணியில் பா.ஜ.க?’ - தனிக்கட்சி தகவலால் தகிக்கும் மதுரை

இந்த நிலையில் அழகிரி கடந்த 25-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். வரும் ஜனவரி 3-ம் தேதி மாலை மதுரை பாண்டி கோயில் துவராகா பேலஸில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில், தமிழகம் முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் கலந்து பங்கேற்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'’ என்று தெரிவித்துள்ளார்.

அழகிரி ஆதரவாளர்களின் வடமாவட்ட விளம்பரம்

தி.மு.க-வில் இணையும் எண்ணமில்லை என்று சென்னையில் தெரிவித்தவர், ஜனவரி 30-ம் தேதி தன்னுடைய பிறந்த நாளில் தனி இயக்கம் பற்றி அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. இந்தசூழலில், `அதுவரை காத்திருக்க முடியாது, ஜனவரி 3 -ம் தேதி மதுரை ஆலோசனைக் கூட்டம் முடிந்து, புதிய இயக்கத்தை அறிவிக்க உள்ளார் அழகிரி’ என்று சொல்கிறார்கள்.

Also Read: மிஸ்டர் கழுகு: “பங்கைப் பிரி... பங்கைப் பிரி!” - விரைவில் அழகிரி போர்க்கொடி

அழகிரிக்கு தென் மாவட்டங்களில் மட்டும்தான் ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்று தி.மு.க-வில் பொதுவான கருத்து இருக்கிறது. அதை உடைக்கும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கடலூர் பகுதிகளில் இருந்து தி.மு.க நிர்வாகிகளை அழைத்துவரத் திட்டமிட்டுள்ளனர். அப்பகுதி தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை வளைத்துப் பிடித்து மதுரைக்குக் கொண்டு வர பி.எம்.மன்னன் தலைமையிலான குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

அழகிரி

அது மட்டுமில்லாமல் எப்போதும் அழகிரி பிறந்த நாளுக்கு மதுரையைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் மட்டும்தான் விளம்பரம் செய்வார்கள். இந்த முறை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளனர். தற்போது வட மாவட்டங்களில் மதுரை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசனைக் கூட்டங்களை அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகிறார்கள்.

அழகிரி நடத்தும் கூட்டத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஒத்துழைக்க ஆளும் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இக்கூட்டத்துக்கு தேவையான மீடியா ஆதரவுக்கு தேசியக் கட்சியின் முக்கியப் புள்ளிகள் உதவி வருவது மட்டுமில்லாமல், அழகிரியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

அழகிரி ஆதரவாளர்களின் வடமாவட்ட விளம்பரம்

அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தை அவருடைய ஆதரவாளர்களை விட அ.தி.மு.க - தி.மு.க-வினரே அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்.



source https://www.vikatan.com/news/politics/mk-alagiris-supporters-gears-up-for-jan-3-madurai-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக