Ad

வியாழன், 24 ஜூன், 2021

`தி ஃபேமிலிமேன்-2 தொடரை நீக்குக.!’ -லண்டன் அமேசான் அலுவலகத்தில் ஒலித்த புலம்பெயர் தமிழர்களின் குரல்

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருக்கும் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் டீஸர் கடந்த மே 19-ம் தேதி வெளியானது. அப்போதே இந்த வெப் சீரிஸூக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி இந்த வெப் சீரிஸ் திட்டமிடப்பட்ட நாளில் வெளியிடப்பட்டது.

லண்டன் போராட்டம்

“தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தியுள்ளனர். ராணுவ சீருடைய அணிந்த தமிழ்ப் பெண் ஒருவர், பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்திருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காட்சிகளைக் கொண்டிருக்கும் இந்த வெப் சீரிஸ், தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது. தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்” என்பது இந்த வெப் சீரிஸூக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனம்.

எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் வெளியிடப்பட்டது. தலைவர்களின் கண்டன அறிக்கைகளோடு தமிழ்நாட்டில் எதிர்ப்பு நின்றுவிட்ட நிலையில், ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரை அமேசான் பிரைமில் இருந்து நீக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள அமேசான் தலைமையகம் முன்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜூன் 21-ம் தேதி நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமேசான் தலைமையகத்தின் அதிகாரி ஒருவரிடம் அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், “அமேசான் பிரைம் நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையிலிருந்து ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் நீக்கப்பட வேண்டும், இனிவரும் காலங்களில் ஈழ விடுதலைப் போராட்டத்தையோ, தமிழர்களின் வாழ்வியலையோ, தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையோ இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட வெப் தொடர்களை, திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது” என்று வலியுறுத்தியிருந்தனர்.

சந்திரிகா

லண்டனில் நடைபெற்ற போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான லண்டனைச் சேர்ந்த சந்திரிகாவிடம் பேசினோம்.

“தமிழ் இனத்தையும் தமிழ்ப் பெண்களையும் மிக இழிவாகச் சித்தரித்துள்ள ‘தி ஃபேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் எங்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்துவம் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஈழத் தமிழர்களையும் பெண்களையும் மிக மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழினத்தின் உரிமைகளுக்காகப் போராடிய எங்கள் ஈழத் தமிழ் உறவுகள், சொந்த நாட்டை இழந்து நிறைய வலிகளோடும் துயரங்களோடும் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். 2009-ல் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா-வில் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது.. அதன் விளைவாக, எங்களது நியாயத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து வருகிறது. இப்படியான நேரத்தில், ஈழத் தமிழர்களைப் பயங்கரவாதிகள் போலச் சித்தரித்து இந்த வெப் தொடரை எடுத்திருப்பதன் நோக்கம் என்ன? இது எங்களுக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை இந்த வெப் தொடரைத் தயாரித்தவர்களுக்குத் தெரியுமா?

உண்மைக்கு மாறாகவும், வரலாற்றைத் திரித்தும் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப் தொடரை ஏதோ ஓர் உள்நோகத்துடனே எடுத்திருப்பதாக நினைக்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு ஐ.எஸ்.ஐ உடன் தொடர்பு இருந்ததாக சித்தரித்திருப்பது, பயங்கரவாதம் என்று சொல்லிக்கொண்டு எங்களை அழிக்க நினைக்கும் முயற்சியா என்று கேள்வியை எழுப்புகிறோம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் உள்பட இந்தியாவில் எத்தனையோ சமூகப்பிரச்னைகள் இருக்கின்றன. அவை குறித்து வெப் தொடர்களையும் திரைப்படங்களையும் எடுக்கலாமே? பணம் சம்பாதிப்பதற்காக எங்கள் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

லண்டன் போராட்டம்

தமிழ்ப் பெண்களை மோசமாக சித்தரித்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. ஈழத்தில் பெண்களெல்லாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தோம் என்பதை பத்திரிகையாளர் அனிதா பிரதாப் உள்பட அங்கு வந்த பலரும் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். இன உரிமைக்கான போராட்டத்தில் பங்கெடுத்த ஈழத் தமிழ்ப் பெண்களின் போராட்டத்தை உலகமே பாராட்டியது. ஆனால், இந்த வெப் தொடரில் எங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். எங்களின் போராட்ட வரலாறு எங்களின் அடுத்த தலைமுறையினருக்கு தவறாக சொல்லப்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறோம். ஆனால், ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரைப் பார்க்கும் எங்கள் எதிர்கால சந்ததிகள் ஈழப் பெண்களைப் பற்றியும் போராளிகளைப் பற்றியும் தவறாக நினைத்துவிடமாட்டார்களா?இது எங்கள் கௌரவப் பிரச்னையும்கூட. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் தொடர்களோ, திரைப்படங்களை வந்துவிடக்கூடாது. எனவேதான், இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

Also Read: ஜம்மு காஷ்மீர்: தேர்தல், சிறப்பு அந்தஸ்து? காஷ்மீர் தலைவர்களுடன் ஆலோசனை; மோடியின் திட்டமென்ன?

தமிழ்நாட்டிலிருந்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதே நேரத்தில், கொரோனா பெருந்தொற்று பிரச்னை காரணமாகவோ என்னவோ, தமிழ்நாட்டிலிருந்து பெரிய அளவுக்கு இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் எழுவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதிகள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழ்த் திரையுலகிலிருந்து எதிர்ப்புகள் வந்தபோதிலும் பெரிய அளவிலான எதிர்ப்பாக அது எழுவிலலை. தமிழ்த் திரைப்படங்களுக்கு வெளிநாடுவாழ் தமிழர்கள்தான் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களை வைத்துதான் தமிழ்த் திரையுலகினர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, எங்களுடைய உணர்வுகளைத் தமிழ்த்திரையுலகினர் புரிந்துகொள்ள வேண்டும்.

அமேசான் நிறுவனத்தின் அதிகாரியிடம் கோரிக்கை மனு

தமிழர்களையும் தமிழினத்தையும் இழிவுபடுத்துகிற தொடர்களிலோ, திரைப்படங்களிலோ தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். இந்த வெப் தொடருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமேசானைப் புறக்கணிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். அமேசான் அக்கவுன்ட்களிலிருந்து நிறையப் பேர் வெளியேவந்துவிட்டோம். கனடா உள்பட மற்ற நாடுகளிலும் இத்தகைய போராட்டத்தை புலம்பெயர்த் தமிழர்கள் நடத்தவிருக்கிறார்கள்” என்றார் சந்திரிகா.



source https://www.vikatan.com/news/politics/tamil-diaspora-hold-protest-in-london-against-the-family-man-2-web-series

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக