காஞ்சிக்கு அடுத்தபடியாக விண்ணளவிய கோபுரங்களும், ஆலயங்களும் தன்னகத்தேகொண்டது, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை நகரம். ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் இந்த ஊருக்கு மற்றொரு பெருமையும் இருக்கிறது. தென்னிந்தியாவிலேயே முதல் பயணிகள் ரயில் சேவையும் வாலாஜாபேட்டை ரயில் நிலையத்திலிருந்துதான் தொடங்கப்பட்டது. இதே நாளான, 1856-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம் வரை முதல் ரயில் இயக்கப்பட்டது.
அந்த வகையில், பழைமையும், பெருமையும் வாய்ந்த வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம், 165-வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே 1866-ல் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக தொடங்கப்பட்ட சிறப்பும் வாலாஜாபேட்டைக்கு உண்டு. இந்த நிலையில், ‘‘வாலாஜாபேட்டை ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும்’’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்மிடம் பேசிய ரயில் பயணிகள் சிலர், ‘‘காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்புகளுக்கு மத்தியில் வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம் இருக்கிறது. முக்கிய வழித்தடம் என்றாலும் பல ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. தொழில் நகரங்களான ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களும், கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி வட இந்தியா செல்லும் வாராந்திர ரயில்களும் வாலாஜாபேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்கின்றன.
இங்கிருந்து மட்டும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், சித்தூர், சோளிங்கர், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கல்வி, வேலை, வியாபாரத்திற்காகப் பயணிக்கிறார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த வாலாஜாபேட்டை ரயில் நிலையத்தில், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட சரிவர செய்து தரப்படவில்லை. எனவே, இந்த ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி பாரம்பரியச் சந்திப்பு நிலையமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகிறோம். தி.மு.க ஆட்சியிலாவது, பாரம்பரிய நிலையமாக வாலாஜாபேட்டையை அறிவிக்க வேண்டும். அதேபோல், ஆங்கிலேயர் காலத்தில் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாபேட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/walajapet-railway-station-is-now-165-years-old
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக