Ad

திங்கள், 28 ஜூன், 2021

Ghost Town: தப்பிக்க நினைச்சா மரணம்; வாழ நினைச்சா துயரம்! - மிரட்டும் மிதக்கும் நகரம்! | பகுதி 6

இன்றைய உலகின் ”டெக்னாலஜி தந்தை” என அழைக்கப்படும் நாடு ஜப்பான். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திற்கு சென்று, ஏதோ ஒரு பொருளைக் காட்டி இது “மேட் இன் ஜப்பான் “ ( Made in Japan ) என்று சொன்னால் இன்றும் அதற்கென ஒரு தனி மதிப்பு இருக்கத் தான் செய்யுது. அப்படியான ஜப்பானில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு தீவு நகரம் உருவாக்கப்பட்டது. ஒரு சின்ன மணற்திட்டை தன் டெக்னாலஜி மூளைக் கொண்டு ஒரு பெரிய தீவு நகரமாக மாற்றியது அன்றைய ஜப்பான். அப்படி உருவாக்கப்பட்ட அந்த தீவில் மனிதர்கள் வாழ்ந்து 45 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஒரு அழிந்துப் போன நகரமாக, மிச்ச சொச்சங்களோடு கடலுக்கு நடுவே தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கிறது ஹஷிமா ( Hashima ) என்ற அந்த நரக நகரம்.

உலகின் மோசமான துயரக் கதைகள் கொண்ட நகரங்கள்ல ஒண்ணு நாகசாகி. அணு விதைக்கபப்ட்ட பூமி. அந்த நாகசாகி மாகாணத்தில், தென் ஜப்பான் கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நகரம் தான் ஹஷிமா. ஹஷிமா உருவான கதையை அறிந்துக் கொள்ள, நாம் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கி போக வேண்டியிருக்கும்.

இன்றைய ஹஷிமாவிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் ஒரு தீவு “டகஷிமா” ( Takashima ). 18 மற்றும் 19ம் நூற்றாண்டில், ஃபுக்கோஹ்ரி (Fukahori ) எனும் வம்சாவளியினர் கட்டுப்பாட்டில் தான் இந்தப் பகுதிகள் இருந்தன.

அந்தத் தீவு பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் நிறைய கறுப்பு கற்கள் கிடைத்தன. அந்தக் கற்களுக்கு ஒரு எரிசக்தி தன்மை இருக்கிறது என்பதை அந்தத் தீவின் இளைஞர் “கொஹிடா” ( Goheita ) கண்டுபிடித்தார். அதனால், அந்தத் தீவுவாசிகள் அந்த எரியும் கல்லை கொஹிடா என்றே அழைத்தார்கள். நாம் அந்தக் கறுப்பு கல்லை நிலக்கரி என்று சொல்வோம்.

1850களில் நாகசாகி முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக மாறியது. பல நாட்டுக் கப்பல்களும் அங்கு வந்து போக ஆரம்பித்தது. அன்றைய கப்பல்களில் பெரும்பாலானவை “நீராவி இன்ஜின்” கொண்டவை. அதற்கு நிறைய நிலக்கரி தேவைப்பட்டது. நீண்டதூர கடல் பயணங்களை மேற்கொள்ளும் கப்பல்கள், நாகசாகி துறைமுகத்துக்கு வந்து நிலக்கரி வாங்கிச் செல்வார்கள். இதனால், அந்தப் பகுதியில் நிலக்கரிக்கான தேவை பெருமளவு இருந்தது.

நிலக்கரியின் தேவைக்குப் பின்னர், பெரும் லாபம் இருப்பதை உணர்ந்த ஃபுக்கோஹ்ரி குடும்பம், நிலக்கரி சுரங்கத்தை அமைக்க முடிவெடுத்தது. தங்கள் ஆளுகைக்கு கீழ் இருந்த மக்களை அடிமைகளாகப் பிடித்துவந்து, நிலக்கரி எடுத்து பெரும் லாபத்திற்கு விற்க ஆரம்பித்தது ஃபுக்கோஹ்ரி குடும்பம்.

நிலக்கரி அதிகம் இருக்கும் பகுதியிலேயே, அந்த அடிமைகளை குடியமர்த்த திட்டமிட்டது ஃபுக்கோஹ்ரி குடும்பம். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த சின்ன மணற் திட்டை ஒரு தீவு நகரமாக மாற்றியது. அங்கு அந்த அடிமைகள் குடியமர்த்தப்பட்டனர்.

கடலுக்கடியில் சென்று நிலக்கரி எடுக்கும் இந்த முயற்சியில் தொழிலாளர்கள் உயிரிழப்பது சகஜமான ஒன்றாக மாறிப்போனது. இதற்கு என்ன தீர்வு என ஆராய்ந்த ஃபுக்கோஹ்ரி குடும்பம், 1869யில் பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் க்ளோவர் ( Thomas B Glover ) எனும் பொறியாளரை வரவழைத்தார்கள். அவர் அன்றைய காலகட்டத்தின் அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களை பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்தார். அந்த இயந்திரங்கள் கொண்டு கடலில் 150 அடி ஆழம் வரை சென்று பாதுகாப்பாக நிலக்கரி எடுக்க முடிந்தது.

19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தத் தீவையும் சுரங்கத்தையும் மிட்ஸுபிஷி ( Mitsubishi ) நிறுவனத்துக்கு விற்றது ஃபுக்கோஹ்ரி குடும்பம். இன்று நாம் பார்க்கும் இந்தக் கான்கிரீட் தீவு நகரத்தை உருவாக்கியது மிட்ஸுபிஷி நிறுவனம் தான். இந்த சுரங்கத்தின் மூலம் மிட்ஸுபிஷி நிறுவனம் மிகப்பெரிய லாபத்தைப் பார்த்தது. 16.5 மில்லியன் டன் அளவிற்கான நிலக்கரி இங்கிருந்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

1960களில் ஜப்பான் முழுக்கவே நிலக்கரிக்கான தேவை குறைய ஆரம்பித்தது. தொழிநுட்பம் மாற்று எரிசக்திகளை நோக்கி மக்களைத் தள்ளியது. அரசாங்க எரிசக்தி கொள்கைகளும் மாற்று எரிசக்தியை ஆதரிக்க, நிலக்கரிக்கான தேவையே இல்லாமல் போனது. நிலக்கரிக்கான தேவை இல்லாததால், ஹஷிமா நகரின் தேவையும் இல்லாமல் போனது. 1974 ஜனவரி மாதம் ஹஷிமா மொத்தமாக காலியானது.

இது தான் ஹஷிமாவின் தோற்றம் மற்றும் மறைவு . ஆனால், இந்த வரலாறு ஜப்பானின் பக்கம் நின்று எழுதப்பட்டது. இதற்கு மற்றொரு பக்கம் இருக்கிறது. அது மரணங்களாலும், துயரங்களாலும் கண்ணீராலும், சித்திரவதைகளாலும் எழுதப்பட்டது. அது கொரிய அடிமைகளின் வரலாறு.

இந்த சுரங்கங்களில் வேலை செய்ய பல கொரியர்களை அடைமைகளாகப் பிடித்து வந்தது ஜப்பான். அவர்களுக்கு எந்த அடிப்படை தேவைகளும் கொடுக்காமல், சரியான உணவில்லாமல், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை வேலை வாங்கிப் பிழிந்தெடுத்தது.

தீவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் 18 கி.மீ நீந்தி கரையை அடைய வேண்டும். பல கொரியர்களும் தப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், உடலில் வலு இல்லாததால் பலரும் பாதி வழியிலேயே கடலில் மூழ்கி இறந்து போனார்கள். நேர்மையாக சுரங்கங்களில் வேலை செய்தவர்களுக்கும், சரியான ஊதியம் கிடைக்கவில்லை, வரவேண்டிய ஊதியத்தை ஜப்பானிய மேலதிகாரிகள் திருடிக் கொண்டார்கள். உணவும் இல்லாமல், ஊதியமும் இல்லாமல் உழைப்பை மட்டுமே கொடுத்து, கொடுத்து உயிர் உருகிப் போன கொரியர்களின் பிணங்கள் மேல் தான் ஹஷிமா எழுப்பப்பட்டிருக்கிறது.

ஜப்பானின் பொறியியல் ஆச்சர்யம், அதிவேக தொழிற்புரட்சியின் அடையாளம் இந்த ஹஷிமா, இதற்கு யுனெஸ்கோவின் ( UNESCO ) உலகப் பாரம்பரிய சின்னம் ( World Heritage Site ) எனும் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று 2009யில் கோரிக்கை விடுத்தது ஜப்பான்.

இது சர்வாதிகாரத்தின் அடையாளம், பல உயிர்களின் நினைவுச் சின்னம், உழைப்பிற்கு மரணத்தை ஊதியமாகப் பெற்ற எங்கள் மூதாதையர்களின் ரத்த அடையாளம் இந்த நகரம். இதற்கு ஒருபோது இப்படியான அந்தஸ்தை வழங்கக்கூடாது என்று வாதிட்டது தென்கொரியா.

ஆனால், 2015ம் ஆண்டு யுனெஸ்கா இந்த நகரத்தை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

கடல் அரிப்பிலிருந்து தடுத்து இந்த நகரைப் பாதுகாக்க ஒரு பொறியாளர் குழுவை அமைத்திருக்கிறது ஜப்பான்.

அந்த நகரத்தில் அடிமைகளாக வேலை செய்த கொரிய தலைமுறை, அந்நகரை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

KIM Hyung Soeb - Age, 97

முன்னாள் ஹஷிமா நகரவாசி

“எனக்கு அதைப் பற்றி பேச துளியும் விருப்பமில்லை. அங்கு நான் பட்ட சித்திரவதைகளை இன்றளவும் என்னால் மறக்கவில்லை. அந்தப் பசி இன்னும் என்னுள் இருக்கிறது… அந்தக் காயங்களின் வலி இன்னும் என்னுள் இருக்கிறது…

சந்தேகமே இல்லை… அது ஒரு நரகம் தான். என் நண்பர்கள் பலர் அந்த நரகத்தை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அது கூட ஒரு வகையில் பரவாயில்லை தான்… அந்த நரகத்தில் வாழ்வதற்கு பதில் இறந்து போவது எவ்வளவோ மேல்…”

பகுதி 5க்கு செல்ல....

Also Read: Ghost town: Chernobyl - உலகின் மிகப்பெரிய சவப்பெட்டியைக் கொண்ட நகரம்! | பகுதி 5



source https://www.vikatan.com/news/international/story-speaks-about-japans-hashima-city

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக