Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

புதுச்சேரி: ’41 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர்!’ கவனம் ஈர்க்கும் ரங்கசாமி அமைச்சரவை.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமயிலான கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆறு இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., சபாநாயகர், துணை முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகளைக் கேட்டு முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த ரங்கசாமி ஒருகட்டத்தில், சபாநாயகர் பதவியையும், இரண்டு அமைச்சர் பதவிகளையும் பா.ஜ.க-வுக்கு தாரைவார்த்தார். அதனால் 50 நாள்களைக் கடந்து அந்த இழுபறி முடிவுக்கு வந்து, பா.ஜ.க-வின் முதல் புதுச்சேரி சபாநாயகராக மணவெளி தொகுதியின் எம்.எல்.ஏ செல்வம் பதவி ஏற்றார். அதேபோல முதன்முறையாக அமைச்சரவையிலும் இடம்பெறவிருக்கிறது அக்கட்சி.

புதுச்சேரி அரசு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவைப் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார் முதல்வர் ரங்கசாமி. அதையடுத்து புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். நீண்ட இழுபறிக்கு பின் வரும் 27-ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குடியரசுத் தலைவர் அனுமதி அளித்திருக்கும் அந்தப் பட்டியலில் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணக்குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதன் மூலம் பா.ஜ.க தரப்பில் நமச்சிவாயம், சாய் சரவண குமார் ஆகியோரும், என்.ஆர்.காங்கிரஸில் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்க இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் முக்கிய அம்சமாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்.எல்.ஏ ஒருவருக்கு புதுவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார். அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா, ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

Also Read: ``முரண்டு பிடிக்கும் பா.ஜ.க, அமைதி காக்கும் ரங்கசாமி!” என்ன நடக்கிறது புதுச்சேரி அரசியலில்?

இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள். இவர் இரண்டாவது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். பா.ஜ.க சார்பில இடம்பெற்றுள்ள நமச்சிவாயம், வில்லியனூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றுவந்தவர், இந்தச் சட்டப்பேரவை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றுள்ளார். தற்போது நான்காவது முறையாக மீண்டும் அமைச்சராகிறார். அதேபோல் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார் ஆகியோர் இரண்டாவது முறையாக அமைச்சர்கள் ஆகின்றனர். அதேபோல பா.ஜ.க தரப்பில் சாய் சரவணகுமார் முதன்முறையாக வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம்பெறவிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/after-41-years-woman-candidate-appointed-as-a-minister-in-puducherry-assembly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக