Ad

புதன், 30 ஜூன், 2021

வீட்டிலிருந்து இனி கோவிட் சிகிச்சை பெறுபவர்களும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யலாம்; எப்படி?

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ செலவுகள் காரணமாக சிரமப்படும் சூழல் நிலவுகிறது. திடீர் மருத்துவ செலவுகளிலிருந்து ஒருவரை காப்பதில் மருத்துவ காப்பீடு பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் மருத்துவ காப்பீடு எடுப்பவர்களின் விகிதாச்சாரம் கணிசமாக உயர்ந்துள்ளது என்று இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) வெளியிட்ட தரவுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

மருத்துவக் காப்பீடு பெற்ற ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோய் சிகிச்சை பெற்றால் மட்டுமே காப்பீட்டின் பலனை அடைய முடியும். ஆனால், கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பெருவாரியான மக்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டனர். இதற்கு முக்கிய காரணமாகப் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி போதிய அளவில் கிடைக்காதது காரணமாக உள்ளது.

Quarantine | தனிமைப்படுத்தப்பட்டவர் - Representational Image

Also Read: ஹெல்த் இன்ஷுரன்ஸ் இருந்தாலும் அவசர கால நிதி அவசியம்தான்... ஏன்? - ஆலோசகரின் அட்வைஸ்

பல பிரபல தனியார் மருத்துவமனைகளும் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வசதிகளை வாடிக்கையாளருக்கு அளித்தன. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர் மருத்துவமனையின் மருத்துவர் உடன் தொடர்பில் இருப்பார். இதுபோன்ற சிகிச்சைக்கு மருத்துவமனைகள் குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாவிட்டாலும் இந்த வசதிக்கான கட்டணம், சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கான கட்டணம், மருந்துகளுக்கான கட்டணம் போன்றவற்றை நோயாளி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், காப்பீட்டு திட்டத்தின் விதிமுறைகளின்படி வீட்டிலிருந்து பெறப்படும் சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது. இது பல வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு எடுத்திருந்தாலும் காப்பீட்டின் பயன் கிடைக்காத சூழ்நிலையை ஏற்படுத்தியது.

கொரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட நூறு நபர்களில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனால் பெருவாரியான மக்களுக்கு காப்பீட்டின் பயன் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு ஐ.ஆர்.டி.ஏ.ஐ, காப்பீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டாலும் அதையும் காப்பீட்டில் சேர்த்துக்கொள்ளும் புதிய வழிமுறைகளை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் காப்பீடு எடுக்கும்போது சிறிது அதிக பிரீமியம் செலுத்தினால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்தாலும் காப்பீட்டின் பலனை அடைய முடியும்.

ஏற்கெனவே காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து இருப்பவர்கள், அட் ஆன் பாலிசி (Add on cover) என்கிற முறையில் இந்த வசதியைப் பெற முடியும். புதிதாக பாலிசி எடுக்கும்போதோ, பாலிசியை நீட்டிக்கும்போதோ இந்த வசதியையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

Insurance

Also Read: கோவிட் 19 சிகிச்சை: இன்ஷூரன்ஸில் அதிக க்ளெய்ம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த விதிமுறை நிச்சயம் பெரும்பாலான வாடிக்கையாளருக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதியைப் பெறுவதற்கு சிறிது அதிக பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கலாம்.

இந்த வசதியை எவ்வாறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க இருக்கின்றன என்று தெளிவாகத் தெரியவில்லை. அதனால் இந்த வசதி தேவைப்படும் பாலிசிதாரர்கள் தாம் காப்பீடு எடுத்துள்ள நிறுவனத்தைத் தொடர்புகொண்டு இது பற்றிய மேலும் விவரங்களைத் தெரிந்துகொண்டு அந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.



source https://www.vikatan.com/business/insurance/now-you-can-get-home-treatment-coverage-for-covid-19-in-health-insurance-add-ons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக