ஜூன் 30... இன்று உலக சமூக ஊடக தினம். இந்த உலகையே உள்ளங்கையில் அடக்கி, மனித சிந்தனையை அவனது கட்டை விரலுக்குள் சுருக்கியது நம் மொபைலில் இருக்கும் கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்ட்டாகிராம், யூ-ட்யூப், மெசஞ்சர் போன்ற அப்ளிகேஷன்கள்தான் என்று செல்லலாம்.
உலகில் நடக்கும் செய்திகளை மக்கள் அறிய பெரிதும் உதவியாயிருப்பது ஊடகங்கள். ஆனால், இப்போதெல்லாம் செய்தித்தாள், தொலைக்காட்சிகளை விட செய்திகள் வேகமாக மக்களைச் சென்றடைய, சமூக ஊடகங்கள்தான் பெரிதும் உதவுகின்றன. உலக மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3.1 பில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதுடன், ஒவ்வொருவரும் சராசரியாக நாளொன்றுக்கு குறைந்தது இரண்டரை மணிநேரமாவது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
இந்த கோவிட் லாக்டெளனில் இது இன்னமும் அதிகரித்து, இப்போது 4.2 பில்லியன் மக்கள் ஒருநாளில் மூன்றே முக்கால் மணிநேரத்தை இணையத்தில் செலவிடுவதாகச் சொல்கிறார்கள்.
சமூக ஊடகங்களிலும் இரண்டு வகை உண்டு. லிங்ட்-இன், வைன், ஸ்நாப்-சாட் போன்றவை தொழில் ரீதியானவை என்றால், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்றவை இயல்பான மக்களுக்கானவை.
இந்த இரண்டிற்கும் பின்னால் இருப்பது வியாபாரம்தான் என்றாலும், தனிமனிதர்களை இணைத்து, தனிப்பட்டவர்களின் கருத்தையும், திறமைகளையும் உலகறியச் செய்யும் நமது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம், ஆகியவற்றிற்கு, இன்றைய சமூக ஊடகங்கள் தினத்தன்று நன்றி நவில நம் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறது இணையம்.
என்னதான் மக்களுக்கு இவை உதவுகின்றன என்றாலும், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்களில் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இந்நிலையில் இந்த நிறுவனங்களைப் பற்றியும், இவற்றின் நிறுவனர்கள் நமக்கு என்ன சொல்கிறார்கள் என்பதையும் சற்று பார்ப்போம்.
முதலில் ட்விட்டர்...
ட்வீட்... பறவையின் ஒலிபோல குறுகிய நேரத்தில், குறைந்த சொற்களுடன் (140 எழுத்துகள்) கருத்தைத் தெரிவிக்கும் ட்விட்டர் சேவை, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், ஈவான் வில்லியம்ஸ் மற்றும் பிஸ் ஸ்டோன் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களால், "இணையம் வழியான இலவச எஸ்எம்எஸ் சேவை" என்ற எண்ணத்துடன் 2006-ல் தொடங்கப்பட்டது. பின்னர் அதில் இணைந்த ஜேக் டார்சி செய்த மாற்றங்களால் வெகுவேகமாக வளர, 2008-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பராக் ஒபாமா ட்விட்டரைப் பயன்படுத்தியதும், 2010ல் FIFA போட்டிகளின் தொடர் ட்வீட்களும் ட்விட்டரை மக்களிடையே தவிர்க்க முடியாததாக மாற்றின.
தொடர்ந்து ட்விட்டர் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி, ஒரேநாளில் ட்விட்டரில் 1.6 பில்லியன் தேடல்கள் என உயர்ந்தது. இந்த 15 வருடங்களில் ஹாஷ்டேக்ஸ், ட்விட்டர் ட்ரெண்டிங், போலிங், வெரிஃபைட் அக்கவுன்ட், 280 எழுத்துகள், ஸ்பேசஸ், விளம்பரங்கள் என மக்கள் தனித்துவமாகப் பயன்படுத்தும் அறிவுசார்ந்த தளமாகிவிட்டது ட்விட்டர். இதன் நிறுவனர் ஜேக் டார்சியின் முக்கியமான வரி இது தான் 'The best thinking time is just walking!'
அடுத்து யூட்யூப்...
ஸ்டீவ் சென், சாட் ஹர்லி, ஜாவட் கரீம் ஆகியோரால், 2005-ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடங்கப்பட்ட இந்தத் தளம் காணொளிகளுக்கானது. ஆரம்பித்த ஆறு மாதங்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள், ஒரு வருடத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் என்று உயர, 2006-ம் ஆண்டு, இதை 1.65 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய கூகுள் நிறுவனம், அதன்மூலம் தனது வருவாயைக் கூட்டியதோடு, பதிவேற்றம் செய்பவர்களுக்கும் தனது வருவாயில் பங்குகொடுத்து பொதுமக்களையும் தனது வளர்ச்சியில் பார்ட்னர் ஆக்கிக்கொண்டது.
லைவ் ஸ்ட்ரீமிங், நிகழ்படங்கள், அரசியல் விவாதங்கள், குறும்படங்கள், இசை காணொளிகள் என இன்று ஒரு நிமிடத்தில் 100 மணிநேர காணொளிகளை யூட்யூபர்கள் பதிவேற்ற, அவற்றை ஒருநாளில் மட்டும் ஒரு பில்லியன் மணிநேரம் பயனாளர்கள் பார்வையிடுகின்றனர். பார்வையாளர்களைப் பொறுத்து வரும் விளம்பரங்களின் வாயிலாக வருவாயையும், புகழையும் யூட்யூபர்களுக்குப் பெற்றுத்தரும் இந்த வலைதளம், உண்மையில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பல கதவுகளைத் திறந்திருக்கிறது எனலாம்.
கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் பயனாளர்களைக் கொண்ட இந்த 'ரியல் ரியாலிட்டி' நிறுவனத்தின் தற்போதைய சிஈஓ சூசன் வோஜ்சிக்கி சொல்வது இதுதான்..."Tech is an incredible force that will change our world in ways we never anticipate.''
இறுதியாக ஃபேஸ்புக்...
இன்றைய தலைமுறையினர் எது இல்லாமல் இருந்தாலும், தங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லாமல் இருக்கமாட்டார்கள் என்றளவிற்கு மனிதர்களோடு ஒன்றுகலந்து விட்ட இந்த ஃபேஸ்புக் என்ற முகநூல் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களான மார்க் சக்கர்பெர்க், டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், கிறிஸ் ஹியூக் ஆகியோரால், அவர்களது கல்லூரி நண்பர்களை இணைக்கும் தளமாக 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கல்லூரி நண்பர்களை இணைத்தபிறகு அதனை அந்த ஊர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இணைக்கும் இடமாக மாற்ற எண்ணிணார் மார்க் சக்கர்பெர்க். அதற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டதும் தனது படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமும் இயங்கி, ஜூன் 2004-ல் எல்லோரும் பயன்படுத்தும் விதமாக முகநூல் நிறுவனத்தை மாற்றினார். ஆரம்பித்த அந்த வருட இறுதிக்குள்ளாகவே ஒரு மில்லியன் பயனாளர்களையும், ஐந்தாண்டுகளில் 350 மில்லியன் பயனாளர்களையும் பெற்றுத்தந்து வெற்றிகரமான நிறுவனமாக மாறியது முகநூல்.
ஒத்த ரசனையுடைய முகமறியா நண்பர்களுக்கானது ட்விட்டர் என்றால், முகமறிந்த நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று ஒன்றிணைப்பது முகநூலின் பாணி. இன்று, நியூஸ் ஃபீட் என்ற முக்கியமான முகநூல் பக்கத்தைத் தவிர, மார்கெட்-ப்ளேஸ், ஜாப்ஸ், ஈவென்ட்ஸ், மெமரீஸ், சமீபத்திய ஸ்டோரீஸ் என அனைவரையும் ஈர்த்து, விளம்பரங்களை உட்புகுத்தி, உலகின் முன்னணி வலைதள நிறுவனமாக விளங்கும் முகநூல் தற்போது தன்னோடு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் ஒன்றிணைத்து மக்களின் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது.
உலகின் இளவயது பில்லியனர், இளவயது தொழிலதிபர், மிகுந்த செல்வாக்கு பெற்றவர், ரிச்சஸ்ட் டெக்கி என்று இணையத்தில் புகழப்படும் முகநூலின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சொல்லவது இதுதான். "The question I ask myself almost every day is: 'Am I doing the most important thing I could be doing?' ".
இந்த அதிநவீன, அதிவிரைவு உலகில் தினசரி நிகழ்வுகள் உட்பட பல்வேறு தகவல்களைத் தந்துகொண்டிருக்கும் இந்த ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூட்யூப் ஆகியவற்றை இணையத்தில் இயக்கி, நம்மையும் இயக்கும் உலகின் மிகப்பெரிய தேடல் தளமான கூகுளின் சிஈஓ சுந்தர் பிச்சை நமக்கு சொல்லும் செய்தி என்ன தெரியுமா?
"அதிகாலையில் விழித்திடுங்கள். உங்களது நாளை அட்டவணை இடுங்கள்... அடுத்து என்ன என்பதை சிந்தியுங்கள். சிந்தனையை செயலாக்குங்கள். அனைத்திற்கும் மேலாக, அழுத்தமான நேரங்களில், அனைத்தையும் விடுத்து, அமைதியாக அமர்ந்து உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைக் கொஞ்சம் வாசியுங்கள்" என்கிறார்.
சமூக ஊடகங்களில் அறிவுசார்ந்தவர்கள் நம்மை வலியுறுத்துவதும் அதுதானே?
#SocialMediaDay
source https://www.vikatan.com/news/general-news/why-people-are-celebrating-social-media-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக