காவிரி வங்கக் கடலோடு கலக்குமிடமான பூம்புகாரில் காவிரியின் கடைசி அணையான சட்ரஸ் பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை (28.06.2021 ) காவிரி நீர் வந்தடைந்தது. இதனை விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் கிளம்பும் காவிரி, தமிழகத்தின் தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களுக்கு விவசாயம் செழிக்க நீர்வளம் தந்து, இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் (காவிரிபூம்பட்டிணம்) பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார். இந்தத் தண்ணீர் பல மாவட்டங்களை கடந்து,கடந்த திங்கட்கிழமை அதிகாலை காவிரி கடலோடு கலக்குமிடமான பூம்புகார் பகுதியை வந்தடைந்தது.
இதனையொட்டி சட்ரஸ் பகுதியில் அமைந்துள்ள காவிரியின் கடைசி கதவணையில் காவிரி நீருக்கு பால், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றை கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனை காட்டபட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெட்சிணாமுர்த்தி, சீர்காழி ஒன்றிய கழகத் தலைவர் கமல ஜோதிதேவேந்திரன்,முன்னோடி விவசாயி தனமூர்த்தி உள்ளிட்ட பலர் மலர்த்தூவி வரவேற்றனர்.
முதற்கட்டமாக பல கிராம விவசாயிகளுக்கு நீர்பாசனம் அளிக்கும் சுமார் 800 ஏக்கர் பரப்பிலான பெருந்தோட்டம் மற்றும் சுமார் 700 ஏக்கர் பரப்பிலான திருவாலி ஏரிகள் நிரப்ப ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.கடைமடை பகுதிக்கு இவ்வளவு விரைவாக காவிரி நீர் வந்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/cauvery-river-water-arrived-at-poombukar-people-excited-and-worship-it
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக