திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவரை, தன்னுடைய மாருதி 800 காரில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில், பார்க்கிங் பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த காரை காணவில்லை.
Also Read: சென்னை: 10 ரூபாயால் துப்பு துலங்கிய திருட்டு வழக்கு... நம்பிக்கை துரோகம் செய்த தம்பதி!
அதிர்ச்சியடைந்த ஜெகதீஷ், உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கார் திருடு போனது உறுதியானது.
இதனிடையே கருமத்தம்பட்டி அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த மாருதி 800 கார் ஒன்றை நிறுத்தி விசாரித்தனர். கார் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸார் சந்தேகமடைந்தனர். விசாரணையில்,அந்த நபர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆரோக்கிய சகாய தர்மராஜ் (56) என்பதும்,
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து காரை திருடி வந்ததும் தெரியவந்தது. இந்தத் தகவல் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரேஸ்கோர் போலீஸார், ஆரோக்கிய சகாய தர்மராஜை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
ஆரோக்கிய சகாய தர்மராஜிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்தது உறுதியானது. திருடும் வாகனங்களை ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (65) என்பவருடன் இணைந்து தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனால், பழனிச்சாமியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்குகள் மற்றும் 2 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆரோக்கிய சகாய தர்மராஜ் மீது சென்னை, திருப்பூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
source https://www.vikatan.com/government-and-politics/crime/coimbatore-police-arrested-old-man-for-vehicle-theft
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக