Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

கலர் ஜெராக்ஸ் ரூபாய்த்தாள்; ஆயிரங்களில் 'ஆடு' மோசடி-திருத்தணியில் தப்பி ஆந்திராவில் சிக்கிய கும்பல்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (55). விவசாயியான இவர் சொந்தமாக 30 ஆடுகளை வைத்திருக்கிறார். அவற்றை மேய்த்து, வளர்த்து, விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்திவருகிறார். இந்தநிலையில், பக்ரீத் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதால், ஆடு மேய்ச்சலில் அதிக அளவில் ஈடுபட்டுவரும் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் கடந்த சில தினங்களாக ஆடு விற்பனை செய்துவருகின்றனர்.

முனுசாமி

அந்தவகையில், கடந்த 22-ம் தேதி வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முனுசாமியிடம் ஆட்டோவில் வந்திறங்கிய ஒரு பெண் உட்பட மூன்று பேர், பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் தேவைப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். நான்கு ஆடுகளுக்கு முனுசாமி ரூ.70,000 கேட்ட நிலையில், அவர்கள் 64,000 ரூபாய்க்குப் பேரம் பேசி முடித்துவிட்டு, கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2,000 ரூபாய்த் தாள்களை முனுசாமியிடம் கொடுத்துவிட்டு, ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். மர்ம நபர்கள் கொடுத்த கள்ள ரூபாய்த் தாள்களை உண்மையென்று நம்பிய முனுசாமி, அதைக் கூட்டுறவு வங்கியில் தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக ஊழியர்களிடம் அளித்திருக்கிறார். முனுசாமி கொடுத்த ஜெராக்ஸ் தாள்களைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அவை போலியென்று கண்டறிந்த ஊழியர்கள், முனுசாமியிடம் விவரத்தைக் கூறி விசாரித்திருக்கின்றனர். அப்போதுதான், முனுசாமிக்கு ஆட்டோவில் வந்த கும்பல் நூதன முறையில் தன்னிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து, கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் முனுசாமி கண்ணீர்மல்க கலர் ஜெராக்ஸ் தாள்களுடன் சம்பவம் குறித்து புகார் அளித்தார். முனுசாமியிடமிருந்து போலி ரூபாய்த் தாள்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார், கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய்த் தாள்களைக் கொடுத்துவிட்டு, ஆடுகளை ஓட்டிச் சென்ற மோசடிக் கும்பலை வழக்கு பதிவு செய்து தீவிரமாகத் தேடிவந்தனர். இதற்கிடையில், ஆற்காடுகுப்பத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரும், அதே மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பலின் நூதன மோசடிக்கு சில ஆடுகளை இழந்திருக்கிறார். அடுத்தடுத்து, ஒரே பகுதியில் கைவரிசையைக் காட்டிய மோசடிக் கும்பலால் திருத்தணிப் பகுதியில், வியாபாரிகளும் விவசாயிகளும் அச்சத்தில் அறிமுகமில்லாத நபர்களிடம் ஆடு விற்பதையே தற்காலிகமாக நிறுத்திவிட்டனர்.

Also Read: திருவள்ளுர்: `பக்ரீத் பண்டிகைக்கு 4 ஆடுகள் வேணும்’ - கலர் ஜெராக்ஸ் தாள்; முதியவரை ஏமாற்றிய கும்பல்!

இந்தநிலையில், திருத்தணியில் கலர் ஜெராக்ஸ் தாள்களைக் கொடுத்து ஆடுகளை ஏற்றிச் சென்ற மோசடிக் கும்பல், அந்தப் பகுதியில் அனைவரும் உஷாராகிவிட்டதால் அங்கிருந்து ஆந்திராவுக்குப் படையெடுத்திருக்கிறது. ஆந்திர மாநிலம், கே.வி.பி.புரம் கிராமத்துக்குச் சென்ற அந்தக் கும்பல், அங்கும் இதேபாணியில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு கலர் ஜெராக்ஸ் தாள்களை மஞ்சள்பையில் வைத்துக்கொண்டு ஆடு மேய்பவர்களிடம் பேரம் பேசியிருக்கிறது. ஆனால், அவர்கள் கையில் வைத்திருப்பது போலி ரூபாய்த் தாள்கள் என்பதை அறிந்துகொண்ட கிராம மக்கள், அவர்கள் மூவரையும் பிடித்து வைத்துக்கொண்டு கே.வி.பி.புரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மோசடிக் கும்பலைக் கைதுசெய்து, காவல் நிலையதுக்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கின்றனர். விசாரணையில், மோசடிக் கும்பல், ஏற்கெனவே திருத்தணியில் கைவரிசையைக் காட்டிவிட்டு தற்போது ஆந்திரா வந்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சிக்கிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீஸார் அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ மற்றும் கலர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட 2,000 ரூபாய்த் தாள்களைப் பறிமுதல் செய்துவிட்டு, தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/andhra-police-arrested-a-gang-of-3-persons-who-cheated-shepherds-by-handling-counterfeit-rupee-notes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக