Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

தோர்கன் ஹசார்ட்டின் ஒற்றை கோல்... கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகலை வெளியேற்றிய பெல்ஜியம்!

யூரோ கோப்பையின் நடப்பு சாம்பியனான போர்ச்சுகலை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது பெல்ஜியம். வரலாற்று சாதனைகளோடு காலிறுதிக்கு போர்ச்சுகலை அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீரோடு விடை பெற்றிருக்கிறார்.

ஸ்பெயினின் செவில்லி நகரில் ரவுண்ட் ஆஃப் 16 நாக் அவுட் போட்டியில் நேற்று நள்ளிரவு போர்ச்சுகல் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. நடப்பு சாம்பியனாக போர்ச்சுகல் இருந்தாலும், மிகவும் பலம் வாய்ந்த உலகின் நம்பர் 1 அணியாக இப்போது பெல்ஜியமே இருகிறது. நடப்பு யூரோ கோப்பைத்தொடரிலும் லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலுமே பெல்ஜியம் வென்றது. ஆனால், மறுபக்கமோ போர்ச்சுகல் ஹங்கேரியை மட்டுமே 3-0 என வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியிடம் 2-4 எனத் தோற்ற போர்ச்சுகல், பிரான்சுக்கு எதிராக 2-2 என ஆட்டத்தை டிராவாக்கி தப்பிப்பிழைத்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது.

போர்ச்சுகலுக்காக 109 கோல்கள் அடித்திருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் ஒரு கோல் அடித்தால் ஒரு நாட்டுக்காக அதிக கோல்கள் அடித்தவர் என உலக சாதனைப்படைப்பார் என்கிற எதிர்பார்ப்புடன் இப்போட்டி நேற்றிரவு தொடங்கியது. ஆனால், ‘பாதுகாத்து தாக்கு' என்கிற வியூகத்துடன் களமிறங்கிய பெல்ஜியத்தின் முன் ரொனால்டோ அண்ட் கோ-வின் ஆட்டம் பலிக்கவில்லை.

தோர்கன் ஹசார்ட்
ரூ பேட்ரிசியோ

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் 25 யார்ட் தூரத்தில் இருந்து தோர்கன் ஹசார்ட் அடித்த கோல் போர்ச்சுகல் கோல் கீப்பர் ரூ பேட்ரிசியோவை ஏமாற்றி கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது. இதன்பிறகு போர்ச்சுகல் அணி கோல் அடிக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் ஒன்றும் பலனிக்கவில்லை. இறுதியில் பெல்ஜியம் 1-0 என வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

"நாக் அவுட் போட்டிகளில் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஒரு கை அல்ல, இரு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். போர்ச்சுகல் கோல்கீப்பர் நான் கோல் போஸ்ட்டின் இன்னொரு கார்னரில் பந்தை உதைப்பேன் என எதிர்பார்த்தார். ஆனால், நான் அவரின் கணிப்பை பொய்யாக்கி இன்னொரு கார்னரில் அடித்தேன். பந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது. மகிழ்ச்சி'’ என்று வெற்றிக்குப்பின் பேட்டியளித்தார் தோர்கன் ஹசார்ட்.

பெல்ஜியத்தைவிட அதிக கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிய போர்ச்சுகலால் இறுதிவரை எதையுமே சரியாக நிறைவேற்ற முடியவில்லை. தோர்கன் ஹசார்டின் ஒற்றை முயற்ச்சியால் பெல்ஜியம் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது.

பெல்ஜியம் அணி இந்த யூரோ கோப்பையின் தகுதி மற்றும் இறுதிச்சுற்றுப் போட்டிகள் என இதுவரை விளையாடியிருக்கும் 14 போட்டிகளிலுமே வெற்றிபெற்றுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 கோல்கள் அடித்து தோர்கன் ஹசார்ட் பெல்ஜியத்தின் டாப் ஸ்கோரராக இருக்கிறார்.

ரொனால்டோ

மறுபக்கம் கடைசியாக ஒன்பது யூரோ கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியிருக்கும் போர்ச்சுகல் முதன்முறையாக ஒரு கோல்கூட அடிக்காமல் வெளியேறியிருக்கிறது.

தோல்வியால் துவண்டுபோன போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீருடன் விடைபெற்றார். 2024-ல் ஜெர்மனியில் நடைபெற இருக்கும் யூரோ கோப்பையின்போது ரொனால்டோ 39 வயதைத் தொட்டிருப்பார். அதனால், அவர் அடுத்த யூரோ கோப்பையில் விளையாடுவது சந்தேகமே என்பதால் வருத்தத்தில் இருக்கிறார்கள் ரொனால்டோ ரசிகர்கள்.

பெல்ஜியம் வரும் வெள்ளிக்கிழமை காலிறுதிப்போட்டியில் இத்தாலியை சந்திக்கிறது. இத்தாலியும், பெல்ஜியத்தைப்போலவே இதுவரை ஒரு தோல்வியும் சந்திக்காமல் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



source https://sports.vikatan.com/football/belgium-beats-euro-cup-defending-champions-portugal-cristiano-ronaldos-team-exits-euro-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக