Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

ஜம்மு:`வெடிகுண்டுகளை சுமந்து வந்த ட்ரோன்; விமானப்படை தளத்தை குறி வைத்து தாக்குதல்'- நடந்தது என்ன?

ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ட்ரோன் மூலமாக இரண்டு வீரியம் குறைவான வெடிகுண்டுகள் வீசப்பட்டு வெடித்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருக்கிறது.

ட்ரோன் மூலமாக தாக்குதல் நடப்பது இதுவே முதல் முறை என்று விமானப்படை தரப்பில் கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமும், பெரியளவிலான பொருட் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், ஜம்மு விமானப்படைத் தளத்தில் பணியிலிருந்த விமானப்படை வீரர் ஒருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், வெடிகுண்டு வெடித்ததில் விமானப்படைத் தளத்தின் மேற்கூரை சேதமடைந்து விட்டதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது.


சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் குறைந்த அளவிலான தகவல்களை மட்டும் அறிவித்திருக்கிறது. அதில், ``சக்தி குறைந்த 2 வெடிகுண்டுகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் வெடித்திருக்கிறது. அதில், ஒரு குண்டு மேற்கூரையில் விழுந்து வெடித்திருக்கிறது. மற்றொன்று காலி மைதானத்தில் வெடித்துள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த தகவல் தேசியளவில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் மற்றொரு தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டது. அதில், ``எந்த வித பொருட்ச் சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து செய்தி நிறுவனங்களும் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாகத் தீவிர விசாரணையில் களமிறங்கின. அதில் இந்த சம்பவத்தில் 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தங்களின் வட்டார தகவலின் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இந்திய விமானப்படை துணை தளபதி ஆரோராவுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைப்பேசியில் பேசியதாகவும், விசாரணையைத் தீவிரப்படுத்தி, பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கூறியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், ஜம்முவின் தற்போதைய நிலையை ஆராய விமானப்படைத் தளபதி விக்ரம் சிங் சம்பவ இடத்துக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு விமானப்படைத் தளத்தில் வெடிகுண்டுகள் வெடித்த மாத்திரத்தில் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு சோதனை மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் விரைந்தன. அவர்களின் முதற்கட்ட சோதனையில் தான் ட்ரோன் மூலம் வீசப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் வீரியம் குறைந்தவை என்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ள விமானப்படைத் தளத்தில் பயணிகள் விமானம் மற்றும் பாதுகாப்புப் படை விமானங்கள் என இரண்டும் இயக்கப்படுவதால் இந்த தாக்குதல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனால், உயிரிழப்புகள் எதுவும் நேரிட வில்லை என்று விமானப்படை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

அதே போல், விமானப்படையின் தொழில்நுட்ப பகுதியில் வெடிகுண்டுகள் திட்டமிடப்பட்டு வீசப்பட்டுள்ளதால் சம்பவத்தை அவ்வளவு எளிதில் கடந்து போய் விட முடியாது என்று பாதுகாப்புத் துறை தரப்பில் பேசப்பட்டு வருகிறது. விமானப்படைத் தளத்தில் பொதுவாக இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று நிர்வாக பகுதி மற்றொன்று தொழில்நுட்ப பகுதி. இதில், தொழில்நுட்ப பகுதியில் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் பாகங்கள் மற்றும் விமானப்படையின் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். அதே போல், இந்த தளத்தில் மி 17 ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் இருந்துள்ளன.எனவே, இந்த பகுதியில் தாக்குதல் அரங்கேறியுள்ளதால் தாக்குதலின் இலக்கு பெரிதாக இருந்திருக்கிறது. ட்ரோன் மூலம் வீசப்பட்ட 2 வெடிகுண்டுகளில் ஒன்று ஹெலிகாப்டர் தளத்திற்கு மிக அருகில் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் வெடிகுண்டு தொழில்நுட்ப பகுதியில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்திருக்கின்றனர். அவர்கள் அங்கு விரைந்த சில நொடிகளில் மற்றொரு வெடிகுண்டும் வெடித்திருக்கிறது. அதன் காரணமாக, இரண்டு வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ட்ரோன் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் அரங்கேறியுள்ளது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறைவாக இருப்பினும், ட்ரோன் மூலம் வெடிகுண்டுகளைக் கையாண்ட விதம் விமானப்படை அதிகாரிகளை அலற வைத்திருக்கிறது. இதுவரை, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு வெடி பொருட்கள் மட்டுமே ட்ரோன் மூலமாக விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த தாக்குதல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் முன்னேற்றம் அடைய வில்லை என்பதால் இஸ்ரேலிலிருந்து பிரத்தியேக ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பமான "SMASH 2000 PLUS”-ஐ இந்தியாவுக்குக் கொள்முதல் செய்வது தொடர்பாக இந்தியக் கடற்படை சமீபத்தில் இஸ்ரேல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், இத்தகைய ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் விரைவில் விமானப்படையிலும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தின் மூலம் வலுப்பெற்றிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/two-drone-bombs-exploded-in-the-indian-air-force-highly-secured-technical-airport-in-jammu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக