Ad

திங்கள், 28 ஜூன், 2021

EURO 2020 : உலக சாம்பியன் பிரான்ஸை வெளியேற்றிய ஸ்விட்சர்லாந்து... குரோஷியாவிடம் போராடிய ஸ்பெயின்!

களத்துக்கு வெளியே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு நடுவரின் விசிலுக்காக காத்திருக்கிறார்கள் ஸ்பெய்ன் வீரர்கள். விசில் சத்தம் கேட்டதும் உலகையே வென்ற படைத்தளபதிகளைப்போல் துள்ளிக்கொண்டு களத்துக்குள் நுழைகிறார்கள். அவர்கள் உலகையோ, உலகக் கோப்பையையோ வென்றிருக்கவில்லை.

நடுவரின் விசில் சத்தம் வெளியே கேட்க முடியாத அளவுக்கு கரகோஷங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. எழுந்து நின்று தங்கள் வீரர்களுக்கு கைதட்டி, வாழ்த்துப்பாடி மரியாதை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் குரோஷிய ரசிகர்கள். அவர்கள் வீரர்கள் எதையும் வென்றுவரவில்லை.

இந்த இரு நாடுகளுக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும் ஒவ்வொரு கால்பந்து ரசிகனும் விடாமல் துடித்துக்கொண்டிருக்கும் தன் இதயத்தைத் தொட்டுப் பார்க்கிறான். அந்த விசில் சத்தம் கேட்டபோது, தன் கண்களுக்கு முன்னால் அந்த 120 நிமிடங்கள் நடந்தது எதையும் அவர்களால் நம்ப முடியாமல் திக்கற்று நிற்கிறான். இன்னும் இதயத்துடிப்பு சீராகவில்லை. அவன் எந்த யுத்தத்தையும் பார்த்திடவில்லை.

Croatia players

ஆனால்... ஆனால்... டென்மார்க்கின் தலைநகர் கோப்பன்ஹேகனில் ஒரு யுத்தம்தான் அரங்கேறியது. 120 நிமிடங்கள் ஒரு மாபெரும் போர் நடந்து முடிந்திருந்தது. 34 வீரர்கள் தங்கள் வியர்வையை, ரத்தத்தை, உயிரைக் கொடுத்திருந்தார்கள். யூரோ 2020 என்ற பெயரில் நடந்த யுத்தத்தைத்தான் கால்பந்து ரசிகர்கள் கண்டிருந்தார்கள். பல்வேறு தருணங்களில் தோல்விக்கு முன்பே நின்றிருந்தாலும் கடைசி நொடி வரைப் போராடி தங்கள் மக்களின் மதிப்பை வென்றிருந்தார்கள் குரோஷிய வீரர்கள். தவறுகள் செய்தபோதும், வெற்றியைத் தவறவிட்டபோதும், உலகமே விமர்சித்துக்கொண்டிருந்தபோதும் மீண்டு வந்து உலகையே வென்றிருந்தார்கள் ஸ்பெய்ன் வீரர்கள். ஒரு சாதாரண ரவுண்ட் ஆஃப் 16 கால்பந்து ஆட்டம்தான். ஆனால், அது சாதாரண ஆட்டமாக இருக்கவில்லை. ஒரு யுத்தம்தான். ஆனால், யாரும் தோற்றிருக்கவில்லை. கால்பந்தின் மகத்தான ஒரு ஆட்டம் நேற்றிரவு அரங்கேறியிருந்தது.

போட்டி தொடங்கும்போது ஸ்பெய்ன் வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. குரூப் பிரிவில் ஓரளவு சுமாராகவே ஆடியிருந்த குரோஷிய அணி, கொரோனா காரணமாக நட்சத்திர வீரர் பெரிசிச்சையும், சஸ்பென்ஷன் காரணமாக சீனியர் டிஃபண்டர் லோவ்ரனையும் இழந்திருந்தது. போட்டியை வழக்கம்போல் தங்கள் பாணியில் கூலாகத் தொடங்கியது ஸ்பெய்ன். ஆனால், அந்த அணுகுமுறையே அவர்களுக்கு எமனாக அமைந்தது. மிட்ஃபீல்டில் இருந்து கோல்கீப்பர் உனாய் சிமோனுக்கு பாஸ் செய்தார் பெட்ரி. அதை கன்ட்ரோல் செய்ய கொஞ்சம் அசால்ட்டாக வந்த சிமோனின் டச் படுமோசமாக இருக்க, பந்து கோல் போஸ்டுக்குள் நுழைந்தது. இந்த யூரோவின் ஒன்பதாவது 'ஓன் கோல்' வாயிலாக முன்னிலை பெற்றது குரோஷியா.

Unai Simon's mistake gave Croatia an early lead

அந்த ஒரு கோல் குரோஷியாவின் நம்பிக்கையைப் பலமடங்கு அதிகரித்தது. ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், என்னதான் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒரு தவறு, ஒரு சிறு தவறு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அப்படித்தான் 38-வது நிமிடத்தில் ஒரு சிறு கவனக்கோளாறால் கோல் வாங்கியது குரோஷியா. இடது பக்கமிருந்து ஜோஸே கயா அடித்த பந்தை அற்புதமாகத் தடுத்தார் குரோஷிய கோல்கீப்பர் லிவகோவிச். ஆனால், அவர் தடுத்த பந்து பாக்ஸுக்கு அருகே காத்துக்கொண்டிருந்த பாலோ சராபியாவுக்குச் சென்றது. யாரும் அவரை மார்க் செய்யாமல், பிரஸ் செய்யாமல் போக அதை கோலாக்கினார் பாலோ சராபியா. முதல் பாதி 1-1 என முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியை மாற்றத்தோடு தொடங்கியது குரோஷியா. ஸ்ட்ரைக்கர் பெட்கோவிச்சுக்குப் பதில் கிரமாரிச் உள்ளே வந்தார். முதல் சில நிமிடங்கள் குரோஷியா ஆதிக்கம் செலுத்தினாலும், மீண்டும் இன்னொரு தவறின் காரணமாக இரண்டாவது கோல் வாங்கியது. வலது விங்கில், டிஃபன்ஸிவ் ஏரியாவில் பந்தைப் பெற்ற ஆஸ்பிலிகியூடா பந்தை அட்டகாசமாக ட்ரிப்பிள், கட் இன் செய்து உள்ளே வந்தார். அதை பெட்ரிக்கு அவர் பாஸ் செய்ய, இடது விங்கில் இருந்த ஃபெரன் டாரஸுக்கு அதை அனுப்பினார் அந்த 18 வயது இளம் பார்சிலோனா வீரர். டாரஸ் அதை பெனால்ட்டி ஏரியாவுக்குள் அனுப்ப, அந்த மூவைத் தொடங்கிய ஆஸ்பிலிகியூடாவே பாக்சுக்குள் நுழைந்து ஹெட்டர் செய்து அதை கோலாக்கி முடித்துவித்தார். 2-1.

Azpilicueta scored his first goal for Spain

அந்த இரண்டாவது கோல் ஸ்பெய்னுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக, முதல் பாதியில் கோலுக்குக் காரணமாக இருந்த உனாய் சிமோன், தன் தவறுகளுக்குப் பிராயசித்தம் தேடினார். 67-வது நிமிடத்தில் குவார்டியோலின் ஷாட்டை சேவ் செய்தவர், அடுத்த இரண்டாவது நிமிடம் கிரமாரிச் அடித்த ஷாட்டை அற்புதமாக தடுத்தார். குரோஷியா கம்பேக் கொடுக்குமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பௌ டாரஸ் வேகமாக ஒரு ஃப்ரீ கிக் எடுத்து, வலது விங்கில் இருந்து ஃபெரான் டாரஸுக்கு லாங் பால் அனுப்ப, அதை அட்டகாசமாக கன்ட்ரோல் செய்து கோலாக்கினார் டாரஸ். 3-1.

கடைசி கட்டத்தில் கோல் வேண்டுமென்பதற்காக பல அட்டாகிங் மாற்றங்களைச் செய்தார் குரோஷிய மேனேஜர் ஸ்லாட்கோ டாலிச். கடைசி சில நிமிடங்களில் அது அவர்களுக்குப் பெரிய அளவில் உதவியது. தொடர்ந்து பாக்ஸை முற்றுகையிட்டனர். விடாமல் முயற்சி செய்துகொண்டே இருந்தனர். 85-வது நிமிடத்தில் வலது விங்கில் இருந்து உள்நுழைந்து மோட்ரிட், பாக்ஸுக்குள் சென்று பெனால்ட்டி ஏரியாவுக்குள் பந்தை அனுப்பினார். ஒருசில குழப்பங்களுக்கு நடுவே மிஸ்லேவ் ஓர்ஸிச் அடித்த பந்து கோலானது. 3-2.

Croatia came back alive with the help of Goal Line Technology

அந்த கோல் குரோஷிய வீரர்களுக்கு குளுக்கொஸ் ஏற்றியதுபோல் அமைந்தது. இன்னும் வேகமாக கோலை முற்றுகையிட்டனர். கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடம். சில நிமிடங்கள் முன்பு கோலடித்த ஓர்ஸிச், இடது விங்கில் இருந்து கிராஸ் செய்ய, மிட்ஃபீல்டர் பசாலிச் அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார். 3-3. ஆட்டம் அனல் பறக்கத் தொடங்கியது. 90 நிமிடங்கள் முடியும்போது ஆட்டம் சமநிலையில் இருக்க, எக்ஸ்ட்ரா டைம் தொடங்கியது.

இரண்டாவது பாதியின் கடைசி கட்டத்தில் குரோஷியா செய்த மாற்றங்கள் இங்கு அவர்களுக்குப் பாதகமாக அமைந்தது. டிஃபண்டர் யுரனோவிச்சுக்குப் பதிலாக விங்கர் பிரெகலோவை கொண்டுவந்ததால் ஒரு டிஃபண்டர் குறைவாக இருந்தது. அது இரண்டு முறை அவர்களை சோதித்தது. முதலில், வலது விங்கில் இருந்து டேனி ஓல்மா கொடுத்த கிராஸை பெனால்ட்டி ஏரியாவுக்குள் இருந்த மொராடா அற்புதமாக கன்ட்ரோல் செய்து இடது காலில் அடித்து கோலாக்கினார். பிரெகலோவால் அவரை சரியாக மேன் மார்க் செய்ய முடியவில்லை. அடுத்த மூன்று நிமிடங்கள் கழித்து ஓல்மாவிடமிருந்து இன்னொரு கிராஸ். இப்போது அதை ஒயர்சபால் கோலாக்கினார். அவரையும் யாரும் சரியாக மார்க் செய்யவில்லை. 5-3 என முன்னிலை பெற்றது ஸ்பெய்ன்.

Morata's incredible finish!

எக்ஸ்டிரா டைமின் இரண்டாவது பாதியில் குரோஷியா எவ்வளவோ போராடிப் பார்த்தது. ஆனால், அவர்களால் இன்னொருமுறை கம்பேக் கொடுக்க முடியவில்லை. போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெய்ன்.

ஒரு மிகச் சிறந்த போட்டியை பரபரப்போடு பார்த்து முடித்து ஆசுவாசமடைந்திருந்த ரசிகர்களின் இதயத்தை மறுபடியும் வேகமாகத் துடிக்கச் செய்தது ரொமானியாவில் நடந்த யுத்தம். பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்தை வீழ்த்திவிடும் என்றுதான் பெரும்பாலானவர்கள் நம்பினர். ஆனால், இங்கும் டிராமாக்கள் நடந்தன. டென்மார்க்கில் நடந்தது போலவே, எதிர்பாராத அணி முன்னிலை பெற்றது. செவரோவிச் செய்த ஹெட்டரால் முன்னிலை பெற்றது ஸ்விட்சர்லாந்து.

55-வது நிமிடத்தில் இரண்டு கோல் முன்னிலை பெற ஸ்விட்சர்லாந்துக்கு வாய்ப்பு கிடைத்தது. பெனால்ட்டி. ஆனால், ரிக்கார்டோ ராட்ரிக்ஸ் அடித்த ஷாட்டை அற்புதமாகத் தடுத்தார் பிரான்ஸ் கேப்டன் ஹூகோ லோரிஸ். அடுத்த சில நிமிடங்களில் ஸ்பெய்னைப் போலவே அடுத்தடுத்து கோல்கள் அடித்தது பிரான்ஸ். இரண்டு நிமிட இடைவெளியில் பென்சிமா இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை ஏற்படுத்த, அட்டகாசமாக பாக்ஸுக்கு வெளியே இருந்து ஒரு கோலடித்தார் போக்பா. அந்தப் போட்டியைப் போலவே 3-1 என்ற சூழ்நிலை. மறுபடியும் ஒரு வேற லெவல் கம்பேக். 81-வது நிமிடத்தில் செஃபரோவிச் மீண்டும் ஒரு கோல் அடிக்க, 90-வது நிமிடத்தில் காவ்ரனோவிச் கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார்.

Mbappe missed the decisive penalty for France

ஆனால், இந்த டிராமாவோ எக்ஸ்ட்ரா டைம் தாண்டியும் தொடர்ந்தது. கூடுதல் நேரத்தில் இரண்டு அணிகளும் கோலடிக்காததால், ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது. இரு அணி வீரர்களும் மாறி மாறி கோலடித்தனர். முதல் 4 வாய்ப்புகளை இரு அணி வீரர்களுமே கோலாக்கினர். 4-4. அத்மிட் மெஹ்மதி ஐந்தாவது ஷாட்டையும் கோலாக்க, கடும் நெருக்கடிக்கு மத்தியில் தன் ஷாட்டை எடுக்க வந்தார் பிரான்சின் இளம் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எடுத்த அவரால், அதை கோலாக்க முடியவில்லை. 4-5. ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றது. உலக சாம்பியன் வெளியேறியது. கால்பந்தின் மிகச் சிறந்த தினம் இப்படியாக நிறைவுற்றது!



source https://sports.vikatan.com/football/spain-and-switzerland-enters-the-last-eight-of-euro-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக