புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தாராளமாகக் கஞ்சா கிடைப்பதாகப் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான், அறந்தாங்கி பொற்குடையார் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக அறந்தாங்கி டி.எஸ்.பி ஜெயசீலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்ற போலீஸார் அங்கு மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கஞ்சாவை கை மாற்ற முயன்ற போது, அவர்களை அறந்தாங்கி போலீஸார் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அறந்தாங்கி களப்பக்காடு பகுதியைச் சேர்ந்த மதன்குமார்(30), சகுந்தலா(33), எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(26), காந்தி நகரைச் சேர்ந்த மணிமாறன்(19),பச்சலூரைச் சேர்ந்த முருகன்(24) ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் விசாரணையில், முக்கியக் குற்றவாளியான மதன்குமார் அ.தி.மு.க மாவட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு துணைச் செயலாளராக உள்ளார் என்பதும், மதன்குமார் தான் அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தாராளமாகக் கஞ்சா விற்பனை நடைபெறும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா தாரளமாகக் கிடைப்பதால் விற்பனை களைகட்டி வருவதாகவும், இதனைத் தடுக்க போலீஸார் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/sale-of-cannabis-five-persons-including-an-aiadmk-leader-were-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக