இந்தியாவிலுள்ள நிலக்கரி அனல் மின் நிலையங்கள், 2015-ம் ஆண்டுக்கான நீர் பயன்பாட்டு விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகத் தற்போது வெளியாகியுள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Centre for Science and Environment) புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
அதிக நீரைப் பயன்படுத்துகிற நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி துறை, அந்த நீரைப் பயன்படுத்துவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட அனல்மின் நிலையங்கள் ஒரு மெகாவாட்டுக்கு 3.5 கன மீட்டர் நீரைப் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால், 2017, ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு அமைக்கப்பட்ட அனல் மின் நிலையங்கள் ஒரு மெகாவாட்டுக்கு 3 கன மீட்டர் நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதோடு, பூஜ்ஜிய திரவ வெளியீட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று 2015-ம் ஆண்டு விதிமுறைகள் கூறுகின்றன. மேலும், நன்னீரைச் சார்ந்துள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் குளிர்விப்பு கோபுரங்களை அமைக்க வேண்டும் என்றும் அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது, அனல் மின் நிலையங்கள் அதைப் பின்பற்றுவதற்கு 2017, டிசம்பர் மாதம் வரையிலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதேபோலத்தான், கரிம வாயு உமிழ்வுக்கான விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டன. அந்த விதிமுறைகள், 2017 மற்றும் 2021 என்று இரண்டு முறை திருத்தப்பட்டது.
ஆனால், அனல் மின் நிலையங்கள், நீர் பயன்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, அதற்கு உடன்படுகிறார்களா என்பது பற்றி அரசு கவனிக்கத் தவறிவிட்டது. இதனால், நாடு முழுவதும் மின் உற்பத்தி நடைபெறும் பகுதிகள் நீர் பற்றாக்குறையையும் அனல்மின் நிலையக் கழிவுகளால் நிகழும் நீர் மாசுபாட்டையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இதுகுறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட ஆய்வில், பல அனல்மின் நிலையங்கள் மேற்கூறிய விதிமுறைகளுக்கு இன்னும் உடன்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் நீர் பயன்பாட்டு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்த அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், மின் உற்பத்தி நடக்கும் பகுதிகளிலுள்ள நீராதாரங்களில் அவர்கள் எடுக்கும் நீரின் அளவு குறித்த தரவுகளைச் சேகரித்தனர். சில மாநிலங்களில் கள மதிப்பாய்வுகளையும் நடத்தினார்கள். கூடுதலாக, அனல்மின் நிலையங்களின் ஆண்டு சுற்றுச்சூழல் அறிக்கைகள் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியங்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் இந்த ஆய்வில் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின்போது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மேற்கூறிய தரவுகளைத் தொகுத்து, 154 ஜிகாவாட் மின் உற்பத்தியில் பங்கு வகிக்கும் 132 அனல்மின் நிலையங்களைப் பகுப்பாய்வு செய்துள்ளார்கள். இவை இந்தியாவிலுள்ள மொத்த அனல்மின் நிலையங்களில் 75 சதவிகித நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியை மேற்கொள்கின்றன. அதில் கடல் நீரைப் பயன்படுத்தும் நிலக்கரி அனல் மின் நிலையங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தபோது, பாதிக்கும் அதிகமான அனல்மின் நிலையங்கள் 3.5/3 கனமீட்டர் என்ற நீர் பயன்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதில், விதிகளை முறையாகப் பின்பற்றிச் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை 55. நீர் பயன்பாட்டு விதிகளை மீறிச் செயல்படும் மின் நிலையங்களின் எண்ணிக்கை 54. இவற்றோடு, குளிர்விப்புக் கோபுரங்களை அமைக்காத மின் நிலையங்களின் எண்ணிக்கை 36. இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட 132 அனல்மின் நிலையங்களில் கடல் நீரைப் பயன்படுத்தி மின் உற்பத்தியில் ஈடுபட்டவை 17 சதவிகிதம். அதைத் தவிர்த்துவிட்டு, நன்னீர் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களைப் பகுப்பாய்வு செய்தபோது, அதில் 41 சதவிகித நிறுவனங்கள் நீர் பயன்பாட்டு விதிகளை மீறியுள்ளது தெரியவந்தது.
அதிலும் குறிப்பாக, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில்தான் இந்த விதிமீறல்கள் அதிகம் நடந்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள 65 சதவிகித மின் உற்பத்தி நிலையங்கள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள 34 சதவிகித அனல்மின் நிலையங்கள் விதிகளை மீறிச் செயல்படுகின்றன. தனியார் வசம் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் 53 சதவிகித நிறுவனங்களில் விதிமீறல் நடந்துள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மின் நிலையங்களில், விதிகளை மீறி அதிகளவு மின்சார உற்பத்தியை மேற்கொள்வதில், உத்தரப் பிரதேச ராஜ்ய வித்யுத் உத்படன் நிகாம் லிமிடட் (UPRVUNL), மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி கார்பரேஷன் (MahaGENCO), ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்படன் நிகாம் லிமிடட் (RRVUNL), குஜராத் மாநில மின்சார உற்பத்தி நிறுவனம் (GSECL), சத்தீஸ்கர் மாநில மின் உற்பத்தி நிறுவனம் (CSPGCL), ஆந்திரப் பிரதேச மின் உற்பத்தி நிறுவனம் (APGenco), தெலங்கானா மாநில மின் உற்பத்தி நிறுவனம் (TSGenco), மத்தியப் பிரதேச மின் உற்பத்தி நிறுவனம் (MPPGCL) ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள 20 சதவிகித நிறுவனங்களும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள 27 சதவிகித நிறுவனங்களும்தான் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன.
இதுமட்டுமன்றி, இந்த ஆய்வின்போது ஆண்டு சுற்றுச்சூழல் அறிக்கையில் பல தவறான தரவுகளை அனல் மின் நிலைய நிறுவனங்கள் குறிப்பிட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நீர் பயன்பாடு தரவுகளைப் பொறுத்தவரை, செயல்முறை, குளிரூட்டல், கழிவு மேலாண்மை, சாம்பல் கழிவுகளைக் கையாளுதல் என்று அனைத்து விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தப்படும் நீர் குறித்த தரவுகளைப் பதிவேற்ற வேண்டும். ஆனால், மின் உற்பத்தி செயல்முறைக்காகப் பயன்படுத்தும் நீர் குறித்து மட்டுமே சுற்றுச்சூழல் அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.
Also Read: ``காடுகளை பழங்குடிகளிடம் கொடுங்கள்; பல்லுயிரியம் பாதுகாக்கப்படும்!"- ஆய்வறிக்கை சொல்லும் உண்மை
அதன்மூலம், குறைந்த அளவு நீரே தங்களுடைய அனல் மின் நிலையத்தில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அது, மற்ற வேலைகளுக்கு எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாகத் தெரிந்துகொள்வதைச் சிக்கலாக்குகிறது.
அனல் மின் நிலையங்களின் சுய தரவுப் பதிவேற்றம் எந்தவொரு சுதந்திரமான அமைப்புகளாலும் சரிபார்த்து, உறுதி செய்யப்படுவதில்லை. இதனால், தரவுகளைத் தங்கள் வசதிக்குக் கையாளுவதும் தவறான தரவுகளைப் பதிவேற்றுவதும் எளிதில் நடைபெறுகிறது. இந்தத் தரவுகளைச் சரிபார்த்து உறுதி செய்வதற்கென மூன்றாவதாக ஒரு சுதந்திரமான அமைப்பு இருந்திருந்தால், இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்காது என்பதை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை அடிப்படையாக வைத்து, 2015-ம் ஆண்டின் நீர் பயன்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்துவதோடு, மேலும் சில பரிந்துரைகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு முன்மொழிந்துள்ளது. அவை,
நீர் பயன்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த கால வரையறை நிர்ணயிப்பதோடு, அதை அனல் மின் நிலையங்கள் அமல்படுத்துகின்றனவா என்பதை மேற்பாவை செய்ய வேண்டும். அதோடு, பூஜ்ஜிய திரவ வெளியீட்டுக்கான விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
நீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
மிகவும் பழைமையான, குறைந்த செயல்திறனுடைய நிலையங்கள் செயல்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும்.
சுதந்திரமான மூன்றாவது அமைப்பை நிறுவி, நீர் பயன்பாட்டு தரவுகளைச் சரிபார்ப்பதோடு, ஒவ்வோர் ஆண்டும் அந்த அமைப்பு நீர் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நீர் மீட்டர்களில் அளவுத் திருத்தம் மேற்கொள்ளும் வேலைகளை சீரான இடைவெளியில் நடத்த வேண்டும்.
Also Read: மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே பூமியைக் காப்பாற்றிவிட முடியுமா? - `இல்லை' என்கிறது இந்த ஆய்வு!
இந்த அறிக்கையின்படி, நாட்டிலுள்ள 48 சதவிகித அனல் மின் நிலையங்கள் நீர் பற்றாக்குறை அதிகமுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ளன. நாக்பூர், சந்திரபூர், ராய்ச்சூர், கோர்பா, பர்மேர், பரன், கம்மம், தெலங்கானா, கடலூர் என்று நீர் பற்றாக்குறை ஆகிய நீர் பற்றாக்குறை மிகுந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அனல் மின் நிலையங்கள் மற்ற துறைகளைவிட அதிகமான நீரைப் பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கிறது இந்த அறிக்கை.
அந்தப் பகுதிகளின் நீர் பற்றாக்குறையைச் சரி செய்வதில், 2015-ம் ஆண்டு நீர் பயன்பாட்டு விதிமுறைகளைக் கடுமையான முறையில் அமல்படுத்துவது முக்கியப் பங்கு வகிக்கும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் இந்த அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/environment/indias-thermal-power-plants-continuously-violating-water-norms-says-cse-study
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக