Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

``அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை பற்றி புரிதல் இல்லை"- நத்தம் விசுவநாதன் பேட்டி

``தமிழகத்தில் மின் வெட்டுக்குக் காரணம் மின்துறை பற்றி, மின்சாரத் துறை அமைச்சருக்கு புரிதல் இல்லாததுதான். தி.மு.க-வும் மின்சார வெட்டையும் பிரிக்க முடியாது" என முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.

Also Read: மின் வாரியம்: பல்லாயிரம் கோடி சூறையாடல்; ஒரு லட்சம் கோடி கடன்! இந்தநிலைக்கு என்ன காரணம்?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய நத்தம் விசுவநாதன், ``தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின் வெட்டுக்குக் காரணம் அத்துறையைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாததுதான். பிரச்னையைத் தீர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆட்சி வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது, தி.மு.கவும் மின்வெட்டும்தான். தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பராமரிப்புகளை நான்கு தினங்களில் சரிசெய்துவிடலாம்.

ஆனால் இப்போது தி.மு.க ஆட்சி சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் முன்பு தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு இருந்ததுபோல அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மின்வெட்டுக்கு இன்றைய ஆட்சியில் அணில் என்று சப்பையான காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏழு வருடங்களாக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த எனக்கு மின்வெட்டுக்குக் காரணம் அணில் தான் என்று தெரியவில்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட ஒழுங்கும் பிரச்சனைகள் கெட்டுவிடும். அதேபோல் தி.மு.க-வையும் அராஜகத்தையும் பிரிக்க முடியாது. தி.மு.க-விற்கு என ஒரு கலாச்சாரம் உள்ளது. அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் என இருக்கும். நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியதற்குக் காரணம், கட்சி எடுத்த யுக்திகளும் வியூகங்களுமே காரணம்.

Also Read: ``அணில் விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்”: சொல்கிறார் செல்லூர் ராஜூ

அது அவர்களுக்குச் சாதகமாக மாறிவிட்டது. அ.தி.மு.க-வை மக்கள் வெறுத்து ஒதுக்கவும் இல்லை. தி.மு.க-வை விரும்பி ஏற்றுக் கொள்ளவும் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து. தேர்தல் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி எறிந்தனர். ஆனால் முக்கியமான கோரிக்கையான பெண்களுக்கு நிதி உதவி, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியம் திட்டம் ஆகியவை ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. கூட்டுறவுத் துறையில் 5 பவுன் நகை தள்ளுபடி மற்றும் நீட் தேர்வு ரத்து பற்றியும் எவ்வித அறிவிப்பும் இல்லை. நீட் தேர்வில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு, மாணவர்களின் வருங்கால வாழ்க்கையில் சூனியமான ஆபத்தான போக்கைக் கையாளுகிறது" என்றார்



source https://www.vikatan.com/news/politics/senthil-balaji-has-no-understanding-tneb-says-ex-minster-natham-viswanathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக