Ad

சனி, 19 நவம்பர், 2022

Wonder Women Review: ஆரோக்கியமானதொரு விவாதத்தைப் பிரசவிக்கிறதா அஞ்சலி மேனனின் எமோஷனல் சினிமா?

கர்ப்பகால பயிற்சி மையத்தில் பல்வேறு பின்னணி கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் சந்தித்துக்கொண்டால் என்னவெல்லாம் நடக்கும்? இதுதான் சோனி லைவ்வில் வெளியாகியுள்ள ‘வொண்டர் விமன்’ (Wonder Women) படத்தின் ஒன்லைன்.

பிரசவத்திற்கு முந்தைய காலகட்டத்தில் கர்ப்பிணிகள் தங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எப்படியெல்லாம் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற பயிற்சி வகுப்பை நடத்துகிறார் நதியா. கணவரின் அன்பு கிடைக்காமல் மாமியாரின் துணையுடன் பயிற்சி வகுப்புக்கு வரும் பத்மபிரியா, விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு நிறைமாத கர்ப்பிணியாக வரும் பார்வதி, தாய்மை அடைந்திருந்தாலும் தனது லட்சியத்தை அடையத் துடிக்கும் நித்யா மேனன், வயதான நிலையில் கர்ப்பிணியாக வரும் அம்ருதா சுபாஷ், லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும் சயனோரா, அதே பயிற்சி மையத்தில் பணிபுரிந்துகொண்டே கர்ப்பகால பயிற்சியை மேற்கொள்ளும் அர்ச்சனா பத்மினி என இப்படி ஆறு பெண்கள் பயிற்சி மையத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள், உரையாடுகிறார்கள்.

Wonder Women Review

பார்வதி தனது கணவருடன் மீண்டும் சேர்ந்தாரா, நித்யா மேனனின் ஆசை நிறைவேறியதா, பல வருட சிகிச்சைக்குப்பின் இந்த முறை அம்ருதா குழந்தை பெற்றாரா... இப்படி அவர்களது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான் 'வொண்டர் விமன்' படத்தின் மீதிக்கதை.

பார்வதி, நித்யா மேனன், பத்மபிரியா, நதியா எனப் பல முன்னணி நடிகைகள் நடித்திருந்தாலும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக ஸ்கோர் செய்து சபாஷ் போட வைக்கிறார் ஜெயாவாக நடித்திருக்கும் அம்ருதா சுபாஷ். வயதான காலகட்டத்தில் கர்ப்பம் தரித்த பெண்ணின் மனநிலையை யதார்த்தமாகப் பிரதிபலிக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக பார்வதியும் கவனம் ஈர்க்கிறார். மற்றபடி நித்யா மேனன், பத்மபிரியா, நதியா தங்களின் வழக்கமான டெம்ப்ளேட்டில் நடித்திருக்கிறார்கள்.

பேன் இந்தியா படம் போலவே பயிற்சி வகுப்புக்கு வரும் ஒவ்வொருவரும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என ஒவ்வொரு விதமான பின்னணியிலிருந்து வருகிறார்கள்; ஒன்று சேர்ந்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்காக விவாதிக்கிறார்கள். வெவ்வேறு மாநிலம், வெவ்வேறு மொழி என்றாலும் கர்ப்பிணிப் பெண்கள், அம்மாக்கள் சந்திப்பது ஒரே பிரச்னைதான் என்பதைக் காட்டி ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முழு படமாகவே எடுத்துள்ளார் இயக்குநர் அஞ்சலி மேனன்.

"இந்தக் குழந்தைக்கு அப்பா யாரு?" என்று கேட்கும் பத்மபிரியாவின் மாமியார், அதன் பிறகு பேசும் வார்த்தைகள் ஒவ்வொரு ஆணும் கவனிக்கவேண்டியவை. இப்படியொரு மாமியார் தனக்கும் இருக்கலாமே எனப் பெண்களை ஏங்கவைக்கும் காட்சி அது. அந்த இடத்தில் ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணாகத் துணை நின்று அவர் பேசுவது நெகிழ்ச்சி டானிக்.

Wonder Women Review

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் பயிற்சி மையம் நடத்தும் நதியா, ஆரோக்கியமான சமூகத்துக்கான முன்னெடுப்புகளையும் தன்னுடைய உரையாடல்களில் புகுத்தியிருக்கிறார். குழந்தை பெறுதல் என்பது ஏதோ பெண்ணுக்கானது என்று கடந்துபோகாமல், அந்தக் காலகட்டத்தில் கணவர்களின் மிக முக்கியமான பங்கு என்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது படம்.

தமிழ், மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகள் பேசுபவர்களாக ஆறு கர்ப்பிணி கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக ஆங்கிலத்திலேயே நகர்கிறது திரைக்கதை. குறிப்பாக, அம்ருதா சுபாஷ், "இந்தி தேசிய மொழிதானே... அதில், பயிற்சியை நடத்துங்கள்" என்கிறார். "இந்தியும் அலுவல் மொழிதானே தவிரத் தேசிய மொழி அல்ல" என்பதைத் தமிழ்க் கதாபாத்திரமான பத்மபிரியா மூலம் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் இயக்குநர்.

அதேநேரத்தில், அதே அம்ருதா சுபாஷுக்கும் அவரது கணவருக்குமான பேரன்பு நெகிழவைத்துவிடுகிறது. லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பிலும் குழந்தைப் பெற்றுக்கொள்வது, கர்ப்பிணிகள் வளையல் அணிவதை பார்வதி மறுப்பது போன்றவையும் கவனிக்க வைக்கின்றன. ஆறு கர்ப்பிணிகளைத் தாண்டி இவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் நதியாவுக்கும் பின்னணியில் ஒரு வலி நிறைந்த ஃப்ளாஷ்பேக் வைத்திருப்பது அந்தக் கதாபாத்திரத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. 'பிரசவத்தின்போது கர்ப்பிணியுடன் அட்டெண்டர் ஒருவரும் உடன் இருக்கலாம்' என்பது போன்ற மருத்துவச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் படத்தில் புகுத்தப்பட்டுள்ளது.

கோவிந்த் வசந்தாவின் இசையும் மணீஷ் மாதவனின் ஒளிப்பதிவும் சற்றே மெதுவாகச் செல்லும் திரைக்கதைக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி வலுசேர்க்கின்றன.

அம்ருதா சுபாஷ், நித்யா மேனன்

அதே சமயம் படம் நெடுக அனைத்து கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டே இருப்பது ஒருவித நாடகத்தன்மையைக் கொடுக்கிறது. இப்படிப் பல காட்சிகளை வெறும் வசனங்களாலேயே நிரப்பியிருக்கிறார்கள். கர்ப்பகால பயிற்சி மைய வளாகம், பத்மபிரியாவின் வீடு, மருத்துவமனை எனப் படத்தில் வரும் லொகேஷன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எளிமையான தாய்மார்களுக்கும் பொருந்தும்படியாக படம் இருக்கவேண்டும் என்றுதான் பலதரப்பட்ட பெண்கள் மையபாத்திரங்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதையும் மீறி, திரைக்கதையில் ஒரு எலைட் தன்மையும், சில விஷயங்களில் மேம்போக்குத்தனமும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்தப் படம் சென்று சேருமா என்பது கேள்விக்குறியே!

படம் கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் மட்டுமே என்பதால் அனைத்து கதாபாத்திரங்கள் குறித்தும் அழுத்தமாகப் புரிந்துகொள்ள இங்கே அவகாசமே இல்லை. இதனாலேயே ஒரு நீண்ட குறும்படம் பார்த்த எஃபெக்ட் மட்டுமே மிஞ்சுகிறது. ஒருபக்கம் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இன்னொரு பக்கம் தமிழர் என்பதைக் காண்பிக்கக் குறிப்பிட்ட சமூகத்தினரை அடையாளம் காட்டிப் பயணிக்கிறது திரைக்கதை.

அதேபோல், மருமகள் பத்மபிரியாவிடம் "சாதிப்பெயரைச் சேர்த்து சொல்லு, பயிற்சியாளருக்குச் சாதியே இல்லையாம்" எனப் பேசும் மாமியார் கதாபாத்திரம் சட்டென முற்போக்காக மாறுவதும் பேசுவதும் நம்பும்படியாக இல்லை.

ஆனால் ஆண்களுக்காக, பெண்களே எழுதி, பெண்களே நடித்த படம் என்பதாலும், படம் தொடங்கி வைக்கும் ஆரோக்கியமான உரையாடலுக்காகவும் நிச்சயம் இந்த `Wonder Women'-ஐ கொண்டாடலாம்.


source https://cinema.vikatan.com/movie-review/sony-liv-original-wonder-women-movie-is-a-light-hearted-story-about-pregnant-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக