கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்?
- ஜான் துரைராஜ் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
``யுகேவில் 50,000 நபர்களை வைத்து நடத்திய ஆய்வொன்றில் ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தினமும் அரை மணி நேரம் அல்லது வாரத்துக்கு 6 மணி நேரத்துக்குமேல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்களில் யாருக்கெல்லாம் கோவிட் தொற்று வந்ததோ, அவர்கள் யாருமே ஐசியூவுக்குச் செல்லவில்லை என்கிறது அந்த ஆய்வறிக்கை. தீவிர நிமோனியாவை கூட அது ஓரளவு தடுத்திருக்கிறது. ஆனால் கொரோனாவிலிருந்து குணமானவர்கள் மீண்டும் உடற்பயிற்சிகளைத் தொடர நினைக்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மைல்டு, மாடரேட், சிவியர் என கோவிட் நோயில் பல நிலைகள் உள்ளன. மைல்டான, நிமோனியா பாதிக்காதவர்களுக்குப் பெரிய பிரச்னைகள் வருவதில்லை. நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும்போதே அவர்களுக்கான சுவாசப் பயிற்சிகள் உள்ளிட்டவற்றைச் சொல்லிக்கொடுத்துதான் அனுப்புவோம். தீவிர பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் கைகால்களை பலப்படுத்தும் பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்தே அனுப்புகிறோம்.
ஒருவர் தன் நுரையீரலின் செயல்திறனுக்கு மேல் உடலை வருத்தி உடற்பயிற்சிகள் செய்யும்போதுதான் பிரச்னை வருகிறது. கோவிட் நோயைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் லெவல் குறையும் ஹைப்பாக்ஸியா பாதிப்பைப் பார்க்கிறோம். சிலருக்கு அது 85 என்ற அளவைவிட குறையும்போதுகூட அறிகுறிகளைக் காட்டாது. அந்த நிலையில் அது தெரியாமல் உடலை வருத்திக் கொண்டால், கடகடவென ஆக்ஸிஜன் அளவு குறைந்து பிரச்னை தீவிரமாகக்கூடும்.
ஆரோக்கியமாக உள்ள எல்லோருமே ஓரளவுக்கு உடற்பயிற்சிகள் செய்யலாம். மிகக் குறைவான பாதிப்புகளுடன் கோவிட் நோயிலிருந்து குணமானவர்களும் உடற்பயிற்சி செய்யும்போது மூச்சு வாங்குவது மாதிரியான அசௌகர்யங்களை உணர்ந்தால் உடனே நிறுத்திவிட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டும். மிதமான பாதிப்புள்ளவர்களும், தீவிர பாதிப்புள்ளவர்களும் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக காய்ச்சல் இருக்கும்போது உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. காய்ச்சல் குறைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.
கோவிட் குணமானபிறகும் சிலர் இறந்து போவதைக் கேள்விப்படுகிறோம். கோவிட் குணமான பிறகு ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதமும், தொற்றுகளுமே அதற்கான முக்கிய காரணங்கள். அதனால்தான் டிஸ்சார்ஜ் செய்யும்போது ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளைப் பரிந்துரைத்து அனுப்புகிறோம். ரிஸ்க் அதிகமுள்ளவர்களுக்கு மாரடைப்பு வருகிறது. தீவிர ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது அரித்மியா எனப்படும் இதய பாதிப்போ, மாரடைப்போ ஏற்பட்டு உயிர் போகலாம். அந்த நிலைக்குச் செல்ல உங்கள் உடலுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. பலநாள்களாக உடற்பயிற்சிகளே செய்யவில்லை, படுத்த படுக்கையாக இருந்து மீண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் திடீரென உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இது விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும். ஓட்டப்பந்தய வீரருக்கு கோவிட் வந்து நுரையீரலில் 50 சதவிகிதம் தொற்று ஏற்பட்ட நிலையில் மாராத்தானில் ஓட நினைப்பது சரியா?
Also Read: Covid Questions: ஆரோக்கியமான டயட்; வெளியேவும் செல்வதில்லை; நானும் தடுப்பூசி போடவேண்டுமா?
கொரோனா நோயாளிகளைப் பொறுத்தவரை குணமான பிறகு உடற்பயிற்சிகளைச் செய்யலாமா என்பதை அவர்களது உடல் முடிவு செய்யட்டும். நாமாக உடலுக்கு அழுத்தம் கொடுப்பது கூடாது. அதற்காக ரெஸ்ட் என்ற பெயரில் படுத்துக்கொண்டேவும் இருக்கக்கூடாது. ஆக்ஸிஜன் அளவையும் இதயத் துடிப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மூச்சுப் பயிற்சியில் ஆரம்பித்து, பிறகு மற்ற பயிற்சிகளை மெள்ள மெள்ள தொடரலாம்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-covid-recovery-persons-do-workouts-what-expert-says
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக