Ad

சனி, 26 ஜூன், 2021

திருச்சி: ஏர்போர்ட்டை நோட்டமிடும்`மீன்கள்'; தங்கம் கடத்தும் 'குருவிகள்'; நடப்பது என்ன?!

பல சிறப்புகளைக் கொண்ட திருச்சி சர்வதேச விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் மையமாக மாறி வருகிறது. கடந்த ஐந்து நாட்களில், 11 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல்காரர்கள் ஏன் திருச்சியை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்? அதுவும் பின்தங்கிய குடும்பத்தினரை வலைவிரிக்க என்ன காரணம், என்ன நடக்கிறது திருச்சி விமானநிலையத்தில்?

திருச்சி விமானநிலையம்

திருச்சி சர்வதேச விமானத்தில், கடந்த 22ம் தேதி சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளன. இதைத்தொடர்ந்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது நடந்த விசாரணையில், 5 பயணிகள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். அவர்களை முழுமையாக பரிசோதனை செய்ததில் ஒருவர் பெல்ட்டிலும் மற்றொருவர் செல்போன் கவர், இன்னொருவர் கட்டிங் ப்ளேடு வெவ்வேறு வழிகளில் ஐந்து பேர் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து 4 கிலோ 435 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விமான நிலையத்தில், ஆண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 1.796 கிலோ கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டது.

கடத்தல் தங்கம்

அதே போல், (23 - ஆம்தேதி) சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நம்பிராஜன், சிவகங்கையைச் சேர்ந்த பழனிச்சாமி, பெரம்பலூரைச் சேர்ந்த ஆறுமுகம், நாகராஜன், புதுக்கோட்டையை சேர்ந்த சிவசுப்பிரமணியன் ஆகிய 5 பேரிடம் இருந்து 5.170 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் தங்கம்

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் 11.401 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரத்து 380 ரூபாய் என மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த 5 பயணிகளிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கம் கடத்தி வந்ததாக சந்தேகப்படும் 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் தங்கம் கடத்தலுக்கு திருச்சியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் கண்டறியப்பட்டது.

தங்கம் கடத்தல் விவகாரம்... விசாரணை வளையத்தில் சுங்க அதிகாரிகள்

இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஜெயப்பிரகாஷ் திருச்சியில் உள்ள சுங்கத்துறை தலைமை இடத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். மேலும், திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை ஆய்வாளர்கள் 3 பேருக்கு சுங்கத்துறை இணை ஆணையர் நேரில் அழைத்து கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் சுங்கத்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி விமானநிலையத்திற்குள் என்ன நடக்கிறது மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட பொருளாளரும் வழக்கறிஞருமான கிஷோரிடம் பேசினோம், "கொரோனா ஊரடங்கு நேரத்தில் அதிகமான கடத்தல் தங்கம், திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் எங்கேயோ ஓட்டை இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

வழக்கறிஞர் கிஷோர்

விமானத்தில் தங்கம் கொண்டுவரும் நபர்களைக் ‘குருவிகள்’ என்றும், கடத்திவரப்படும் தங்கத்தைப் பெறுவதற்காக வெளியே இருக்கும் நபர்களைக் ‘ மீன்கள்,கொக்குகள்’ என்றும் ஒவ்வொரு நெட்வொர்க்கிற்குத் தகுந்தார் போல் பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள். மும்பை, சென்னை, மங்களூர், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, விமான நிலையங்களின் வழியாகவே அதிக கடத்தல்கள் நடப்பதாகவும் புள்ளிவிவரங்கள் சொல்கிறார்கள்.

விமானம்

திருச்சி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தங்கக் கடத்தலுக்கான ஏஜென்ட்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள். தற்போது சென்னையைவிடத் திருச்சியிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் சுலபமாகச் சென்றுவிடலாம் என்பதாலும் அதிக கெடுபிடி இல்லாத காரணத்தால் தான் சர்வதேச கடத்தல்காரர்கள் திருச்சியைத் தேர்வு செய்கிறார்கள்.

ஒவ்வொரு விமான நிலையத்திலும் அதிநுட்பமான ஸ்கேனர் இருக்கிறது. அது மனித உடலில் உள்ள நரம்புகள் வரையிலும் ஸ்கேன் செய்யும் வல்லமை கொண்டது. ஆனால் இங்கு கிலோ கணக்கில் தங்கம் சர்வ சாதாரணமாக வெளியே வருகிறது என்றால் எப்படி? கஸ்டம்ஸ் அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் வெளியில் வரவாய்ப்பே இல்லை.இலங்கை மற்றும் அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் வறுமையில் வாடும் பெண்கள் மற்றும் முதியோர்களையும் தங்கக் கடத்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள். பாஸ்போர்ட் வைத்துள்ள சில நபர்களையும், தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகள் போல தங்கத்தைக் கடத்தி வரும் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி விமான நிலைய வளாகத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்ட மீன்கள்,எனும் தங்கக்கடத்தல் தரகர்கள் வலம்வருகிறார்கள். அவர்கள், விமானநிலைய ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளில் சிலருடன் தொடர்பில் இருப்பார்கள். தங்கத்தைக் கடத்தி வருவதற்கு திருச்சியில் பெரிய நெட்வொர்க் உள்ளது. அது எப்படி செயல்படுகிறது, இதில் யார்,யார் பிண்ணனியில் செயல்படுகிறார்கள் என்கிற தகவல் போலீஸாருக்கு நன்கு தெரியும். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தவறுகள் குறையும் இல்லையேல் அரசுக்குதான் நஷ்டம்” என்றார் காட்டமாக. இதுகுறித்து விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளிடம் பேசினோம், " இந்தக் கடத்தல் குறித்து நாங்களும் தொடர்ச்சியாக விசாரித்து வருகிறோம். மேலும் அதிகாரிகள் முறையாக செயல்படுவதால் தான் கடத்தல் தங்கம் பிடிபடுகிறது. தங்கம் கடத்தலுக்கு இதில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டையொட்டி எங்கள் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டுதான் உள்ளனர். இந்த கடத்தல் நெட்வோர்க் குறித்தும் பல கட்ட விசாரணைகள் நடக்கின்றன. கூடியவிரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்றார் உறுதியாக.



source https://www.vikatan.com/news/crime/11-kgs-gold-seized-in-two-days-smuggling-network-targeting-trichy-airport

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக