Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

`தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி நான்!' - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

2014-ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோ மூலமாக 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். இது அவரின் 78-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த இந்திய மூத்த தடகள வீரர் மில்கா சிங்குக்கு இரங்கல் தெரிவித்த படி நிகழ்ச்சியை மோடி துவக்கினார்.

பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசியவற்றை குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்:-

* மில்கா சிங்:-

``ஒலிம்பிக்ஸ் பற்றிய பேச்சு வரும்போது, மில்கா சிங் என்ற தடகள ஜாம்பவானை யாரால் மறந்து விட முடியும் சொல்லுங்கள். சில நாள்கள் முன்பாக, கொரோனா நோய்த்தொற்று அவரை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவரோடு பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நீங்கள் 1964-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கெடுத்துக் கொண்டீர்கள், ஆகையால் இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கெடுத்துச் செல்லும்போது , நீங்கள் நமது வீரர்களின் மனோபலத்தை அதிகப்படுத்த வேண்டும், உங்கள் செய்தியால் அவர்களுக்கு உத்வேகமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர் விளையாட்டில் எத்தனை அர்ப்பணிப்பு உள்ளவர் எத்தனை உணர்வுமயமானவர் என்றால் நோய் பாதிப்பு இருந்ததையும் தாண்டி, உடனடியாகத் தனது சம்மதத்தை தெரிவித்தார். ஆனால், விதியின் முடிவு வேறு விதமாக இருந்தது. 2014-ம் ஆண்டு அவர் சூரத் வந்திருந்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. நாங்கள் இரவு மாரத்தான் போட்டி ஒன்றைத் தொடங்கி வைத்தோம். அப்போது அவரோடு நான் கலந்து பேசிய பொழுது, விளையாட்டுகள் பற்றிப் பேசினோம், அது எனக்கு மிகுந்த கருத்தூக்கமாக அமைந்தது. மில்கா சிங் அவர்களின் குடும்பம் முழுவதுமே விளையாட்டில் அர்ப்பணிப்பு உடையது. பாரதத்திற்குப் பெருமை சேர்ப்பது என்பதை நாமறிவோம்" என்றார்.

மில்கா சிங்

* டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி:-

"திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் நேர்மைப் பண்பு என எல்லாம் ஒருசேர இணையும் போது, ஒரு சாம்பியன் உருவாகிறார். நம்முடைய தேசத்தில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், சின்னச்சின்ன நகரங்கள், கிரமங்களில் இருந்துஉருவாகி வந்திருக்கிறார்கள். டோக்கியோ செல்லவிருக்கும் நமது ஒலிம்பிக் அணியிலும் கூட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நமக்கு ஊக்கமும், உத்வேகமும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வில்வித்தை வீரரான பிரவீன் ஜாதவ் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர். வில்வித்தையில் அற்புதமான வீரர். இவருடைய பெற்றோர்கள் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். பெண்கள் ஹாக்கி அணியை சேர்ந்த நேஹா கோயலின் தாயும், சகோதரிகளும் சைக்கில் தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வில்வித்தை வீராங்கணை தீபிகா குமாரி வாழ்க்கை பயணம் மேடு பள்ளம் என கரடு முரடானது. அவரது தந்தை ரிக்‌ஷா ஓட்டுகிறார். தாய் செவிலியர்.

சென்னையில் வசிக்கும் பவானி தேவி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய வால்சண்டை வீராங்கனை. பவானி தேவி தனது பயிற்சியை தொடர வேண்டும் என்பதற்காக இவரது தயார் தனது நகைகளைக் அடகு வைத்தார் என்பதை நான் அறிந்தேன். இவர்களை போன்று நிறைய பேர் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரியங்கா. பனாரஸை சேர்ந்த ஷிவ்பால் சிங் இப்படி அநேகம் பேர் இருக்கின்றனர். ஆனால், இங்கே என்னால் ஒரு சில பெயர்களை மட்டுமே குறிப்பிட முடிந்தது. டோக்கியோ செல்லவிருக்கும் நமது வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த இடத்துக்கு போராடி வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்காக மட்டும் செல்லவில்லை. தேசத்திற்காக செல்கிறார்கள். எனவே, நாம் அனைவரும் திறந்த மனதோடு அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும்.” என்றார்.

சென்னை வீராங்கனை பவானி தேவி

* தடுப்பூசி விவகாரத்தில் தயக்கம் கூடாது:-

"தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்ட வேண்டாம். என்னுடைய தாயாருக்கு 100 வயது நெருங்கி விட்டது. அவருமே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள். நானும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். எனவே யாரும் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்" என்றார்.

* மருத்துவர்களுக்கு நன்றி:-

கொரோனா இரண்டாம் அலையின் போது மருத்துவர்கள் அளித்த பெரும் பங்களிப்பிற்கு இந்திய மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கூறி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி

* தமிழ் மொழி:-

சென்னையை சேர்ந்த குருபிரசாத் என்பவர் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழகம் குறித்தும், தமிழ் குறித்தும் பேசிய உரை குறிப்புகளை E-Book-ஆக மத்திய அரசின் MY GOVT- செயலியில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அவரின் குறிப்புகள் குறித்து பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர், "திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும், தமிழ் குறித்தும் தமிழக மக்களின் சாதனைகள் குறித்தும் நான் பேசியதை குருபிரசாத் அந்த E-BOOK-ல் குறிப்பிட்டிருந்தார். உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. அந்த மொழி நம்முடையது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைய வேண்டும், நான் தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி, தமிழ் மொழி குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். குருபிரசாத்தின் கோரிக்கையின் படியே தமிழகம் குறித்த என்னுடைய உரை குறிப்புகள் நிறைந்த அந்த E-Book Namo செயலியில் சேர்க்கப் படும். தமிழ் மொழி மீதான அன்பும், அக்கறையும் ஒருபோதும் குறையாது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-speech-on-tamil-in-mann-ki-baat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக