Ad

திங்கள், 28 ஜூன், 2021

மேற்கு வங்கம்: `ஊழல்வாதி’ என சாடிய மம்தா! - உச்சக்கட்டத்தில் முதல்வர், ஆளுநர் மோதல்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று எதிர்பார்த்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் கொல்கத்தாவில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து ஆளுநர், மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் ஆளுநர் ஜெக்தீப் தன்கர் இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதையடுத்து ஆளுநரை திரும்ப பெறும்படி மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திரமோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க சட்டமன்றம் வரும் ஜூலை 2-ம் தேதி கூடுகிறது. இதில் உரையாற்றுவதற்காக ஆளுநருக்கு மாநில அரசு தயாரித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்து மம்தா பானர்ஜியுடன் விவாதிக்கவேண்டும் என்று ஆளுநர் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஜெக்தீப் தன்கர்

இது தொடர்பாக ஆளுநர், ``அரசு எழுதிக்கொடுக்கும் அனைத்தையும் ஆளுநர் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசியல் சாசனத்திற்கு எதிராக இருந்தால் அதனை நான் வாசிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் மம்தா பானர்ஜி வெகுண்டெழுந்துள்ளார். ஆளுநர் தன்கர் ஒரு ஊழல்வாதி என்று காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

``1996-ம் ஆண்டு நடந்த ஜெயின் ஹவாலா லஞ்ச ஊழல் வழக்கில் தன்கர் பெயர் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் கோர்ட்டுக்கு சென்று நிரபராதி என்று கூறி அதில் இருந்து வெளியில் வந்துவிட்டார். ஆனால் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சொல்வதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு ஊழல்வாதி. ஏன் இது போன்ற ஊழல்வாதிகளை மத்திய அரசு ஆளுநராக அனுமதிக்கிறது.

குற்றப்பத்திரிக்கையை எடுத்து பாருங்கள். அவரது பெயர் இருக்கிறதா இல்லையா தெரிந்து கொள்வீர்கள். ஆளுநர் வடக்கு வங்கம் பகுதிக்கு சென்றது வெறும் அரசியல் நாடகம். அவர் அங்கு பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை மட்டுமே சந்தித்து பேசினார். வடக்கு வங்கத்தை தனி மாநிலமாக பிரிக்க சதி நடக்கிறது. ஆளுநரை திரும்ப பெறும்படி பல முறை கடிதம் எழுதியிருக்கிறேன். எனது கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் தன்கர், ``மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. எனது பெயர் எந்த குற்றப்பத்திரிக்கையிலும் இடம் பெறவில்லை. அது போன்ற ஒரு ஆவணம் இல்லை. இது உண்மைக்கு மாறானது. முற்றிலும் தவறான தகவல். அனுபவமுள்ள அரசியல்வாதியிடமிருந்து இது போன்ற ஒரு குற்றச்சாட்டை எதிர்பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநராக தன்கர் பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிறது. ஆளுநராக தன்கர் நியமிக்கப்பட்டது முதல் மம்தா பானர்ஜிக்கும் தன்கருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.



source https://www.vikatan.com/news/politics/west-bengal-chief-minister-governor-clash-mamata-accuses-governor-of-corrupt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக