Ad

புதன், 30 ஜூன், 2021

அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி; பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுமா இந்தக் கண்டுபிடிப்பு?

2003-ம் ஆண்டு சார்ஸ் பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் மீண்டுமோர் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் எப்போது, எந்த வகை கொரோனா வைரஸ் மக்களிடையே இதுபோன்ற பெருந்தொற்றுப் பரவலை உண்டாக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆகையால், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களுக்கு எதிரானதொரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது அந்த முயற்சியில் வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை எலிகளின் மீது பரிசோதித்தபோது, கோவிட்-19 மீது மட்டுமல்ல, மற்ற வகை கொரோனா வைரஸ்களின் மீதும் செயலாற்றி, கொரோனா வேரியன்ட்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலைச் செயல்பட வைத்துள்ளது.

Protection (Representational Image)

2003-ம் ஆண்டு பெருவெடிப்பை ஏற்படுத்திய சார்ஸ் தொற்று நோய்க்கு காரணமாக இருந்ததும் கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ்தான். இப்போது கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடருக்கும் அதே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்தான் காரணம். இந்நிலையில், கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஏதாவதொரு வைரஸ் தொற்றுநோயை மனிதர்களிடையே உண்டாக்கி, அதன்மூலம் மீண்டுமொரு பேரிடர் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், அனைத்து வகையான கொரோனா வைரஸ்களுக்கும் எதிராகச் செயலாற்றக்கூடிய வகையில் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்களுடைய ஆய்வில் வெற்றியும் கிடைத்துள்ளது.

2019-ம் ஆண்டு டிசம்பரில் கோவிட் பரவல் தொடங்கியதிலிருந்து தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்களா, இந்தப் பேரிடருக்கும் அதன் விளைவாகச் சந்திக்கும் இழப்புகளுக்கும் ஒரு முடிவு கிடைக்குமா என்று உலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இப்போது கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும்கூட, கொரோனா வைரஸின் புதிய புதிய வேரியன்ட்டுகள் பரவத் தொடங்கி, புதிய சிக்கல்களை உருவாக்குகின்றன. எதிர்காலத்தில் இன்னும் பல கொரோனா வைரஸ் வகைகள் மக்களிடையே பரவலாம் என்ற அச்சுறுத்தலும் நம்மிடையே காத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Moderna COVID-19 vaccine

மாடர்னா, ஃபைஸர் - பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள், மனித அணுக்களில் ஆர்.என்.ஏ இழையைக் கொடுப்பதன் மூலம், வைரஸுக்கு எதிராகச் செயலாற்றுகின்றன. இந்த ஆர்.என்.ஏ இழைகள், கொரோனா வைரஸில் (SARS-CoV-2) நிகழும் ஸ்பைக் புரோட்டீன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஸ்பைக் புரோட்டீன் தன்னிச்சையாக இருக்கையில் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் திறனைக் கொண்டிருப்பதில்லை.

ஆனால், மனித உடலைத் தாக்கும்போது, அதற்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும் நோய் எதிர்ப்பாற்றலைச் சிதைத்துவிடுகிறது. அதுவே, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரின் உடல் கொரோனா வைரஸை (SARS-CoV-2) எதிர்கொண்டால், அவருடைய உடலில் இந்தத் தடுப்பூசியின் மூலம் உருவாக்கப்பட்ட ஆர்.என்.ஏ இழைகள், கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கி, வைரஸ் பெருக்கத்தை எதிர்ப்பதற்குத் தயாராக இருக்கும்.

இதை அடிப்படையாக வைத்து, பல வகையான கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் ஆன்டிபாடிகளை உருவாக்கக்கூடிய தடுப்பூசியைத் தயாரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மார்டினெஸ் மற்றும் அவருடைய சகாக்கள் திட்டமிட்டனர். கோவிட்-19 தொற்றின் ஸ்பைக் புரோட்டீனை வைத்து அதற்கு எதிரான தடுப்பூசியில் செயலாற்றும் எம்.ஆர்.என்.ஏ (mRNA) இழைகள் உருவாக்கப்பட்டன.

அதேபோல், நான்கு வகையான எம்.ஆர்.என்.ஏ இழைகளை மார்டினெஸ் குழு உருவாக்கியது. அதில், ஒவ்வொரு எம்.ஆர்.என்.ஏ இழையிலும் மூன்று வகையான கொரோனா வைரஸ்களின் ஸ்பைக் புரோட்டீன்கள் இடம்பெற்றிருந்தன.

Pfizer-BioNTech COVID-19 vaccine

Also Read: காட்டூர்: 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி... நிகழ்ந்தது எப்படி?

அதில் ஒன்று, 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் வகையினுடையது. இரண்டாவது, 2019 முதல் தற்போது பேரிடரை உண்டாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வகையுடையது. அதுபோக, வௌவால்களில் காணப்படும், மனித அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இதுவரை பெரியளவிலான பெருந்தொற்றுக்குக் காரணமாக உருவாகாமல் இருக்கும் இரண்டு வகையான கொரோனா வைரஸ்களும் இருந்தன.

அதாவது, ஒரு பொம்மையின் கால்கள் கேப்டன் அமெரிக்காவுடையவை, உடல் ஸ்பைடர்மேனுடையது. தலை அயர்ன் மேனுடையதாக இருந்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரே எம்.ஆர்.என்.ஏ வைரஸில் மூன்று வகையான கொரோனா வைரஸ்களின் ஸ்பைக் புரோட்டீன் இடம் பெற்றிருக்கும். இப்படியான ஒரு கலவையாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பூசி இருந்தாலும்கூட, அதை எலிகளின் உடலில் பரிசோதித்தபோது, அதன் நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம், இப்படிக் கலவையாக இருக்கும் புரோட்டீன்களைக் கண்டுகொண்டது.

மேலும், அதன் உடலில் தடுப்பூசியிலுள்ள ஒவ்வொரு வகையான ஸ்பைக் புரோட்டீனுக்கும் எதிரான ஆன்டிபாடிகள் உருவாகின. அதன்மூலம், அந்தத் தடுப்பூசியில் எந்தெந்த கொரோனா வைரஸ்களின் ஸ்பைக் புரோட்டீன்கள் இருந்தனவோ, அந்தந்த வைரஸ்களிடமிருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட எலி பாதுகாக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்தத் தடுப்பூசி தற்போது பீட்டா வேரியன்ட் என்று குறிப்பிடப்படும் இன்னொரு கோவிட்-19 வேரியன்ட் வைரஸுக்கு எதிராகவும் செயலாற்றியுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்தது.

எலிகளுக்குப் போடப்பட்ட இந்தத் தடுப்பூசி அவற்றை அனைத்து வகையான கொரோனா வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பதில்லை. இருப்பினும், Sarbecovirus என்ற துணைக் குழுவைச் சேர்ந்த வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கின்றன. அந்தத் துணைக் குழுவின் கீழ்தான் சார்ஸ் மற்றும் இப்போது நம்மைத் தாக்கும் கோவிட்-19 அனைத்தும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்தத் தடுப்பூசி எலிகளின் உடலில் கொரோனாவுக்கு தூரத்துச் சொந்தமாக அறியப்படும் மெர்ஸ் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளையும் உருவாக்குவது தெரியவந்துள்ளது.

corona virus

Also Read: `இலவச பீர், குலுக்கல் பரிசு, மாஸ்க் தேவையில்லை!’ - அமெரிக்காவில் தடுப்பூசி நிலவரம் பகிரும் தமிழர்கள்

மாடர்னா மற்றும் ஃபைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்ட எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தையே மார்டினெஸ் குழுவும் பயன்படுத்தியுள்ளது. விரைவில், எலிகளுக்கு அடுத்தபடியாக பெரிய விலங்குகளில் இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டுக்குள் மனிதர்களிடையே பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தத் தடுப்பூசி முன்னேற்றம் கண்டுவிடும் என்று மார்டினெஸ் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர். நாமும் நம்பிக்கையோடு காத்திருப்போம்.

மனிதர்களிடையே தொற்றுப் பரவலை உண்டாக்கும் அனைத்து வகையான கொரோனா வைரஸ் வகைகளிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள ஒரே தடுப்பூசி கிடைத்தால், இந்தப் பெருந்தொற்றுப் பேரிடருக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்த ஆய்வின் மூலம் துளிர்விடத் தொடங்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/healthy/scientists-developing-universal-vaccine-against-all-coronavirus-variants

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக