முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த சில வருடங்களாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பேரிடர் காரணமாகக் கடந்தாண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இணையவழியில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்திலும், சில தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் முழுமையான கட்டணம் செலுத்த வற்புறுத்தப்பட்டது. பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாது வருமானம் இழந்த பலரால் இந்த கட்டணத்தைச் செலுத்த இயலவில்லை. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இந்த காரணம் ஒருபுறமிருக்க, மருத்துவப் பிரிவில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு போன்ற வேறு சில காரணங்களும் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமானது.
அரசுப் பள்ளிகளில் கடந்த 2018-19 கல்வியாண்டில் 8,000 மாணவர்கள் அதிகமாக சேர்ந்திருந்த நிலையில், 2019-20 கல்வியாண்டில் 10,000 மாணவர்கள் அதிகமாக சேர்ந்திருந்தார்கள். 2020-21-ம் ஆண்டில் 1,00,000-திற்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருந்தார்கள். இந்த சேர்க்கை விகிதம் வரும் 2021-22 கல்வியாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிடுவது வரவேற்கத்தக்கதுதான். மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதற்குத் தகுந்தாற்போல் அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு இருக்கிறதா? போதிய அளவில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா? இந்த சூழலுக்கு அரசு தயார் நிலையில் இருக்கிறதா என்பது போன்ற உண்மையான களநிலவரம் என்ன என்பதை பல்வேறு தரப்பினரிடம் விசாரித்தோம்.
தனியார்ப் பள்ளியில் படித்த தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்த ஆரணியைச் சேர்ந்த சுதாலட்சுமியிடம் பேசினோம். ``என்னுடைய இரண்டு குழந்தைகளுமே தனியார் பள்ளியில்தான் படித்தார்கள். இந்த கொரோனா பிரச்னை எல்லாம் ஆரம்பிப்பதற்கு முதல் வருடம் என் முதல் குழந்தையை ஐந்தாம் வகுப்பிலிருந்து, ஆறாம் வகுப்பிற்கு அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். தனியார் பள்ளியில் நல்ல ஆங்கிலம் சொல்லித்தரப்படும், உடை அணிவது முதல் உணவு வரை நல்ல பழக்கங்கள் சொல்லித்தரப்படும் என்றும் எண்ணியிருந்தேன். அரசுப் பள்ளியில் என்ன நடக்குமோ என்ற ஒருவித தயக்கத்தோடு தான் சேர்த்து விட்டேன். ஆனால், அவன் சேர்ந்து ஒரு வருடம் முடிந்த பிறகு தான் உணர்ந்தேன். தனியார் பள்ளியைவிட அரசுப் பள்ளியில் அவனுக்குச் சிறப்பான கல்வி கிடைக்கிறது" என்றார்.
மேலும், ``அதனால்தான் என்னுடைய இரண்டாவது மகனையும் அரசுப் பள்ளியிலேயே சேர்த்துவிட்டேன். என் குழந்தைகளை அரசுப் பள்ளியில் மாற்றியதுமே என்னைச் சுற்றியிருந்த பலரும், `என்ன போயும் போயும் கவர்ன்மென்ட் ஸ்கூலுல பசங்களை சேர்த்துவிட்டுருக்க, நீங்க ரெண்டு பேருமே வேளைக்கு போறீங்க தானே பசங்களை நல்ல பிரைவேட் ஸ்கூலுல சேர்த்துவிடுங்க' என்று நம்மை மிகவும் ஏளனமாகப் பேசினார்கள். இந்தக் காரணம் தான் பெற்றோர்கள் தங்களுக்கு ஆசை இருந்தாலும், தங்களால் முடியவில்லை என்றாலும் கடன் வாங்கியாவது தங்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கான காரணம்" என்று கூறினார்.
கல்வி சார்ந்த பல்வேறு பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் நேரத்தில் அரசு செய்ய வேண்டிய விஷயம் என்ன என்று கேள்வியெழுப்பினோம், ``பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மற்றும் அந்த துறை செயலாளர் அவர்களின் பிள்ளைகளை ஒரு பள்ளியில் சேர்க்கும்போது அந்த பள்ளியில் எந்த மாதிரியான கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த கட்டமைப்பு அனைத்து பள்ளிகளும் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்வேன் என்றுதான் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். அதன் படி அனைவருக்கும் சமமான கல்வியைக் கொடுக்கவேண்டும். கற்றல் செயல்பாடுகளையும், ஒரு சிறந்த கல்வியையும் அரசாங்கத்தைவிட வேறு யாரால் தரமுடியும்?'' என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``ஒவ்வொரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், ஒரு பாடத்திற்குத் தனித் தனி ஆசிரியர், ஒவ்வொரு பள்ளிக்கும் ஆசிரியர் இல்லாத அலுவக ஊழியர்கள், பள்ளிகளுக்கென்று ஒரு தூய்மை தொழிலாளி இந்த வசதியை அரசு செய்து கொடுக்க முடியாதா? இதற்கு அரசிடம் பணம் இல்லையா? இல்லை என்றால் அதை அரசு வெளிப்படையாகக் கூறவேண்டும் மக்கள் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். பணம் இல்லை என்று அரசுப் பள்ளிகளைப் பெற்றோர்கள் நாடுகிறார்கள் என்பது ஒரு கருத்து மட்டுமே. நடைமுறையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்ற ஒருவரை அரசு மருத்துவமனை காப்பாற்றியது. நன்றாகச் சென்ற ஒருவரைத் தனியார் மருத்துவமனை உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. இதுபோன்ற நிகழ்வுகளை வாழ்வியல் அனுபவமாகப் பெற்ற பெற்றோர்கள் அரசாங்கத்தினால் தான் நல்ல மருத்துவத்தையும், கல்வியையும் தரமுடியும் என்று உணர்ந்து தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். அவர்களின் அவர்களின் உணர்வுக்கு மரியாதையைக் கொடுத்து அந்த குழந்தைகளுக்கு நியாயமான கல்வியைக் கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை" என்று கூறினார்.
சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஒருவரிடம் பேசினோம், ``தற்போது பலரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துவருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படி அரசுப் பள்ளி நோக்கி வருவோர்களை இங்கேயே தக்க வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அடிப்படைத் தேவையான, கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளைச் செய்யவேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் இல்லாது, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு துப்புரவு தொழிலாளியை நியமிக்க வேண்டும். தற்போதைய கணக்கின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே அளவிலான மாணவர்கள் தான் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 80,000-க்கும் அதிகமான ஆசிரியர்களும் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் 2.6 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்'' எனக்கூறினார்.
மேலும், ``எண்ணிக்கையில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் போலத் தெரிந்தாலும், உண்மை அது அல்ல. ஒரு சில பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளில் தேவைக்கும் மிகக் குறைவான அளவே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அங்கு அலுவலக வேலைகள் தொடங்கி அனைத்தையும் ஆசிரியர்கள்தான் பார்க்க வேண்டும். இது எப்படிச் சரியாக இருக்கும்? இந்த நிலையை அரசு முதலில் சரி செய்யவேண்டும். ஆங்கிலவழிக் கல்வியை அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால், அதற்கென்று தனி ஆசிரியர்களை நியமிப்பது கிடையாது. தற்போது உள்ள மற்ற பிரிவு ஆசிரியர்களை அவர்களுக்குப் பாடம் நடத்தக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். அப்படியென்றால் அந்த மாணவர்களுக்கு எப்படித் தரமான கல்வி சென்றடையும்? அரசுப் பள்ளிகளை நம்பி வந்துள்ள மாணவர்களுக்குச் சிறந்த கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
தனியார்ப் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்கிறது போன்ற பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாகத் தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே. ஆர். நந்தகுமாரிடம் பேசினோம். ``எங்கள் சங்கத்தில் கிட்டத்தட்ட 10,000 பள்ளிகள் உள்ளன. உண்மையில் இந்த பள்ளிகள் எதிலும் அதிக கட்டணங்கள் வசூல் செய்வது கிடையாது. இந்த பேரிடர் காலத்திலும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் முதல் தேர்வுகள் வரை நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. பள்ளி பராமரிப்பு, மின் கட்டணம், வரி, ஆசிரியர்கள் சம்பளம், போன்ற போன்ற பல்வேறு செலவுகள் எங்களுக்கும் உள்ளது. இவையனைத்துமே மாணவர்களிடம் கட்டணம் வாங்கினால் தானே நாங்கள் கொடுக்க முடியும். இந்த பேரிடர் காலத்திலும் மின் கட்டணம் தள்ளுபடி, வரிச் சலுகை என்று எதுவுமே தனியார் பள்ளிகளுக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதுவும் தமிழகத்தில் வழங்கப்படவில்லை. அரசு தற்போது அரசுப் பள்ளிகளில் டி.சி இல்லாது மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. பல பள்ளிகளில் மூன்று வருடம் வரை கட்டணம் செலுத்தாது இருப்பவர்கள் உள்ளனர். அவர்கள் இந்த கட்டணத்தைச் செலுத்தாது தற்போது அரசுப் பள்ளிகளுக்குச் சென்றுவிடுவார்கள். இது தனியார் பள்ளிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று பேசினார்.
தொடர்ந்து பேசியவர், ``தனியார் பள்ளி அனைத்துமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுபவை கிடையாது என்பதை உணரவேண்டும். தமிழகத்தில் உள்ள பெரிய கார்ப்ரேட் பள்ளிகள் மட்டுமே முழுக் கட்டணம் செலுத்த வற்புறுத்துவது, டொனேஷன் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இந்த சில நூறு பள்ளிகள் செய்யும் செயலால் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யும் எந்த தனியார் பள்ளியின் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளலாம். எங்கள் சங்கத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்துமே அரசு நிர்ணயம் செய்யும் தொகையைக் கட்டணமாகப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறோம். பெரிய சிறிய பள்ளிகள் என்று இல்லாது அரசு தான் ஒரு நியாயமான தொகையை தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாக நிர்ணயம் செய்யவேண்டும். மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றால், எங்களின் ஆசிரியர்களுக்கு எப்படி நாங்கள் சம்பளம் தருவது? அவர்கள் கட்டணம் செலுத்தும் வரை ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கும் தான். அரசு எங்களின் சிரமங்களையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவுக்கு எடுக்கவேண்டும்"
அரசு விரைவாகத் தகுந்த முன்னேற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை மீண்டும் மற்ற பள்ளிகளுக்கு செல்லாதவண்ணம் தக்கவைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/education/increasing-enrollment-of-students-in-government-schools-are-our-government-schools-ready-for-this
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக