எங்கள் குடும்பம் கிராமத்தில் வாழும் குடும்பம். அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, நான் என மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது வீட்டில். அப்பாவும், அம்மாவும் விவசாயக் கூலி வேலை செய்கிறார்கள். அக்காவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துவிட்டது.
நான் மூன்று வருடங்களுக்கு முன் ப்ளஸ் டூ முடித்தேன். அந்த விடுமுறைக்கு, பக்கத்து ஊரில் இருக்கும் என் சித்தப்பா வீட்டுக்குச் சென்றிருந்தேன். சித்தப்பாவுக்கு ஒரே பெண். அவளும் நானும் ஒரே வயது. அவளும் அப்போது ப்ளஸ் டூ முடித்திருந்தாள். இருவரும் சந்தோஷமாக விடுமுறையைக் கழித்தோம்.
ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபோது, எங்கள் வீட்டின் வறுமையின் காரணமாக, என்னைப் படிக்கவைக்கும் பொறுப்பை சித்தப்பா ஏற்றுக்கொண்டார். சித்தப்பா அரசு வேலையில் உயர் பொறுப்பில் இருந்தார். நல்ல சம்பளம். அவர் வீட்டிலேயே என்னைத் தங்கவைத்து, அந்த ஊரில் இருந்த கலைக் கல்லூரி ஒன்றில் என்னைச் சேர்த்தார். சித்தப்பாவின் மகள், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள்.
சித்தப்பா பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பேசி வைத்திருந்தனர். சித்தியின் தம்பிதான் அந்த மாப்பிள்ளை. அவள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள். ஆனால், அந்தத் திருமண முடிவில் தனக்கு விருப்பம் இல்லை என அடிக்கடி தங்கை என்னிடம் சொல்லிவந்தாள். இந்நிலையில், நாங்கள் இருவரும் இரண்டாம் வருடம் படித்தபோது, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சித்தப்பா பெண், வீட்டை விட்டுச் சென்று காதல் திருமணம் செய்துகொண்டாள். அவள் காதலித்த விஷயம்கூட வீட்டில் யாருக்குமே அதுவரை தெரியாது. வீடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
சித்தப்பா பெண்ணுக்காகப் பேசிவைத்திருந்த மாப்பிள்ளை வீட்டில், அதாவது சித்தியின் அம்மா வீட்டில், இதை தங்களுக்கு நேர்ந்த பெரும் அவமானமாக நினைத்தனர். எனவே, சித்தப்பா வீட்டுடன் பிரச்னை செய்தபடியே இருந்தனர். மகள் காதல் திருமணம் செய்துகொண்ட ஏமாற்றம் ஒரு பக்கம், சித்தி வீட்டினர் தரும் அவமானம் ஒரு பக்கம் என சித்தப்பா மிகவும் மனம் ஒடிந்துபோனார். அதற்குப் பிறகு அவர் எடுத்த முடிவுதான், என் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது.
என் அப்பாவிடம் பேசிய என் சித்தப்பாவும் சித்தியும், என்னை அவர்களின் மகளாகத் தத்தெடுத்துக்கொள்வதாகவும், தங்கைக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்து வைத்திருந்த சித்தியின் தம்பிக்கு என்னைத் திருமணம் செய்துவைப்பதாகவும் சொல்லி, என் அப்பா, அம்மாவிடம் அனுமதி கேட்டனர். இனி, காதல் திருமணம் செய்துகொண்ட தங்கள் மகளை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், நான்தான் அவர்களுக்கு மகளாக கடைசிவரை அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், திருமணத்துக்கான செய்முறைகளில் இருந்து, அவர்களுடைய சொத்துவரை இனி எல்லாமே எனக்குத்தான் என்று கூறினார்கள். நாங்கள் இருந்த வறுமை சூழலில், இது எனக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாழ்க்கை என்று நினைத்து, என் பெற்றோரும் இதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
Also Read: கணவரின் அண்ணன் செய்யும் துரோகம், கண்டுகொள்ளாத மாமனார்... உரிமையை மீட்பது எப்படி? #PennDiary
எனக்கு இந்தத் திருமணத்தில் சம்மதம் என்றும் சொல்ல முடியவில்லை, சம்மதம் இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. தங்கையின் மேல் உள்ள கோபத்தில், அவளால் ஏற்பட்ட அவமானத்துக்கு அவளைப் பழிவாங்குவதாக நினைத்தும், பிடிவாதத்திலும், வறட்டு கௌரவத்திலும்தான் சித்தப்பாவும், சித்தியும் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. இன்னொரு பக்கம், `நீயும் முடியாதுனு சொல்லி எங்களை இன்னும் அவமானத்துக்கு உள்ளாக்கிடாத' என்று என்னிடம் கெஞ்சிய அவர்களின் கோரிக்கையையும் என்னால் மறுக்க முடியவில்லை. சித்தி வீட்டினரும், தங்கள் பையனை வேண்டாம் என்று சொல்லிப்போன என் தங்கைக்கு இந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், என்னை சித்தப்பா அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதன் மூலம், அவர்களின் அவமானம் நீங்கும் என்றும் நினைத்தனர். அவசர அவசரமாக, என் படிப்பைகூட முடிக்காமல் என் திருமணம் முடிந்தது.
இப்போது எனக்குத் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. என் கணவருக்கு என் மீது பெரிதாக அன்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தத் திருமணம் ஒரு விபத்து என்ற எண்ணத்தில் இருந்து அவர் இன்னும் மீண்டு வரவில்லை. கணவர் வீட்டினரும் அந்த மனநிலையிலேயே உள்ளனர். என் சித்தி, சித்தப்பாவுக்கு, காயம்பட்ட அவர்களின் வறட்டு கௌரவத்துக்கு மருந்தாக இந்தத் திருமணம் நடந்திருந்தாலும், அவர்களிடமும் பழைய சந்தோஷம், நிம்மதி எதுவும் இல்லை. என் மீது அவர்களால் மனப்பூர்வமாக அன்பு செலுத்த முடியவில்லை. இன்னொரு பக்கம், என் அப்பா, அம்மாவுக்கும் என் வாழ்வு இப்படி அந்தரத்தில் இருப்பதில் கவலையே மிஞ்சியிருக்குறது.
என் தங்கை எடுத்த ஒற்றை முடிவால், இப்படி எல்லோரின் வாழ்வும் மாறிவிட்டது. அவள் கொஞ்சம் பொறுமையாக இருந்து, படிப்பை முடித்தவுடன் சித்தி, சித்தப்பாவிடம் தன் காதலைச் சொல்லி, அனுமதி கேட்டு, அவர்கள் மறுத்து, அதற்குப் பிறகு அவள் இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் இப்படி அவசரப்பட்டு அவள் எடுத்த முடிவு, இன்று மூன்று குடும்பங்களின் சந்தோஷத்தை திருப்பிப்போட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் எனக்கு முதன்முறையாக போன் செய்த என் தங்கை, என்னிடம் மிகவும் வெறுப்புடன் பேசினாள். நான் சந்தர்ப்பவாதி எனவும், அவள் பெற்றோருக்கு அவள் மீது இருந்த கோபத்தை நான் பயன்படுத்தி, அவள் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டதாகவும் குற்றம் சுமத்தினாள். `நீ எடுத்த அவசர முடிவால்தான் எல்லோரின் வாழ்க்கையும் இப்படி மாறிக் கிடக்கிறது, என் படிப்பும் உன் படிப்பும் பறிபோய்விட்டது...' என்று நானும் கோபமாகப் பேசினேன். விரைவில் அவள் தன் பெற்றோரிடம் எப்படியும் சேர்ந்துவிடுவாள் என்றும், அதன் பிறகு என் நிலைமை பரிதாபமாகும் என்றும் சவால்விடுவது போல பேசினாள்.
Also Read: வீணாய்ப்போன தம்பி, திருமணம் தள்ளிப்போகும் நான்; காரணம் வளர்ப்பு அண்ணனின் சுயநலம்! #PennDiary - 20
என்னைப் பொறுத்தவரை, என் தங்கை மீண்டும் சித்தி, சித்தப்பாவிடம் சேர்வது குறித்து எனக்கு முழு சந்தோஷமே. காலம் சித்தப்பாவின் பிடிவாதத்தை தளர்த்தி, அதை விரைவில் நிகழ்த்த வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். அவர்கள் சொத்து மேல் எல்லாம் எனக்கு எந்த ஆசையும் இல்லை. சித்தப்பா, சித்திக்கு மீண்டும் பழைய சந்தோஷம் திரும்பினால் போதும். இதை என் கணவரிடம் சொன்னபோது, அவர் அப்படி நடப்பதை விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன். `அப்படி அவ திரும்பி வந்து, இவங்களும் ஏத்துக்கிட்டா, நாம அவங்களோட பேச வேண்டாம், பேசக் கூடாது' என்கிறார் ஈகோவுடன்.
தங்கையின் அவசர முடிவு, சித்தப்பாவின் வீம்பு, கணவர் வீட்டினரின் ஈகோ, என் பெற்றோரின் வறுமை... இவையெல்லாம் சேர்ந்து என் வாழ்க்கையை இப்படி ஆக்கிவிட்டிருக்கிறது. இத்தனை உறவுச் சிக்கல்களுடன், எந்தப் பக்கமும் சந்தோஷமும் நிம்மதியும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.
source https://www.vikatan.com/lifestyle/women/a-woman-shares-about-her-unexpected-marriage-and-its-problems
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக