Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

`தலைக்குமேல் தொங்கும் காலநிலை மாற்றம் எனும் கத்தி!' - இனியாவது சூரிய ஆற்றலை ஊக்குவிக்குமா அரசு?

கொரோனா பேரிடர் உலகம் முழுவதையும் வாட்டிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம், காடு மற்றும் காட்டுயிர் அழிப்பு, காலநிலை மாற்றத்தைத் துரிதப்படுத்துதல் போன்ற மனித நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்னொருபுறம், அதைப் போன்ற இன்னும் பல அபாயங்களை நாம் எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்த அபாயங்களைத் தணிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் உலக நாடுகள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. புவியின் வெப்பநிலை அதிகரிப்பதால் துருவங்களில் உருகும் பனிப்பாறைகள் இன்னும் பல நோய்களை மனித சமூகத்திடையே கொண்டு வரும் என்று ஆய்வாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

Also Read: சூரிய சக்தியில் இஸ்திரி பெட்டி... ஸ்வீடன் நாட்டு விருது பெற்ற தமிழக மாணவி!

இதுபோன்ற அபாயங்களைத் துரிதப்படுத்துவதில் போக்குவரத்து, காடழிப்பு, அதீத தொழிற்சாலை உற்பத்தி, மின்சார உற்பத்தி என்று பல்வேறு துறைகள் பங்கு வகிக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க பங்கு மின்சார உற்பத்திக்கு உண்டு. புதுப்பிக்க முடியாத வகையிலான வளங்களைப் பயன்படுத்தும் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள், அணுமின் நிலையங்கள் போன்றவற்றின் மீதுள்ள கவனத்தை, சூரிய மின் சக்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பக்கமாகத் திருப்ப வேண்டியது அவசியம். இதையுணர்ந்து உலக அளவிலான மின் உற்பத்தி நிறுவனங்கள், அதன்மீதான கவனத்தையும் அதிகரித்து வருகின்றன.

புதுப்பிக்க முடியாத ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பேசிய சூரிய மின் சக்தி ஆய்வாளரான முனைவர்.பழனியப்பன், ``புவி வெப்பமடைவதால் 2018-ம் ஆண்டில் மட்டும் சுமார் 315 இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டன. அதில் 7 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதோடு ரூ.9,68,00,400 கோடி இழப்பு ஏற்பட்டது. புயல்கள், வெள்ளப்பெருக்கு, வறட்சி, காட்டுத்தீ, பனிப்பாறைகள் உருகுதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரிக்க இதுவே முதன்மைக் காரணம் என்பது நாம் அறிந்ததே.

நிலக்கரி சுரங்கம்

எரிபொருள்களான நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பயன்பாடு மனித இனத்தின் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது. இருப்பினும், அவை ஏற்படுத்தும் எதிர்வினைகள் அதே மனித இனம் எதிர்கொள்ள இயலாததாக இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் இந்த நிலத்தடி கச்சா எண்ணெய் இருப்பு முற்றிலும் தீர்ந்து போகக்கூடிய அபாயம் உள்ளதால் மனித குல மேம்பாட்டுக்கு நாம் வாழும் இயற்கையைப் பாதிக்காத, வற்றாத ஆற்றல் நிறைந்த மாற்று ஆற்றல்களைத் தேட வேண்டியது அவசியம். அதற்கு 2011-ம் ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான இடை அரசுக் குழு, புவி வெப்பமயமாதலைக் குறைப்பதற்கு இரண்டு முக்கிய வழிமுறைகளைக் குறிப்பிட்டது. அதில் ஒன்று, நாம் ஏற்கெனவே பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் பல்வேறு இயந்திரங்களின் ஆற்றல் திறனை விரயமின்றி நெறிமுறைப்படுத்துவது. இரண்டாவது, சூரிய மின் ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது" என்று கூறினார்.

மேலும், ``சூரிய ஆற்றலின் மூலம் உண்டாகக்கூடிய மின்சாரம், சுடு நீர், சுடு காற்று போன்ற பல வித ஆற்றல்களை நாம் பயன்படுத்தும்போது பூமி வெப்பமடைவதைக் குறைக்க முடியும்.

உதாரணத்துக்கு, நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 2 கிலோவாட் மின்சாரம், 1.7 கிலோ கரிம வாயுவை வெளியேற்றுகிறது. இதன்மூலம் ஓராண்டுக்கு, அனல் மின் நிலையத்திலிருந்து 2,550 கிலோ கரிம வாயு வெளியாகிறது. அதே 2 கிலோவாட் மின்சாரத்தை சூரிய மின் கூரை மூலம் உற்பத்தி செய்யும்போது, கரிம வாயு வளிமண்டலத்தில் வெளியாவது தவிர்க்கப்படுகிறது .

சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன்மூலம் மற்றொரு நன்மையும் உண்டு. ஒரு ஏக்கர் காட்டிலுள்ள பெரிய மரங்கள் 2,500 கிலோ கரிம வாயுவை கிரகித்துக்கொள்கிறது. அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்வதைவிட சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும்போது, ஒரு ஏக்கர் காடு கிரகிக்கும் அளவுக்கு நிகரான கரிம வாயுவை வளிமண்டலத்தில் வெளியீடுவதே தவிர்க்கப்படுகிறது" என்று கூறினார்.

சூரிய ஒளி மின்தகடுகள்

Also Read: புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம்... பின் ஏன் அணுசக்தி? #MustRead

இந்த நன்மைகளைப் பெறுவதற்கு நாம் சூரிய மின்சாரம் மற்றும் சூரிய சுடுநீர், சுடு காற்று போன்ற பல கருவிகளை நிறுவ வேண்டியது அவசியம். முக்கியமாக, புவிவெப்பமடைவதைத் தவிர்ப்பதில், மிக விரைவான பலன்களை சூரிய ஆற்றல் உற்பத்தியின் மூலம் நம்மால் அடைய முடியும் என்று புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும், சூரிய மின்சார உற்பத்திக்கு ஆகும் செலவு மின்சார வாரியத்தின் மின் கட்டணத்தைவிட குறைவாக இருப்பதால், இதில் அரசாங்கமும் சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடும் மக்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதன் மூலம் அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

தமிழ்நாட்டில் இதுவரை சூரிய மின் உற்பத்தி மக்களிடையே பெருமளவில் ஊக்குவிக்கப்படவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்படும் என்ற கணிப்பின் காரணமாக சூரிய மின்சார உற்பத்தியில் மின் வாரியம் அதிகக் கவனம் செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தமிழ்நாட்டில் கரிம வாயு வெளியிடக்கூடிய வகையிலான மின் உற்பத்தியைக் குறைப்பதிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் பெரும் தடையாக உள்ளதென்று புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சூரிய மின் கூரை உற்பத்தியாளர்கள் சிலரிடம் பேசியபோது, ``அண்டை மாநிலமான கேரளாவில்கூட 1000 கிலோவாட் வரை பயன்படுத்துவோருக்கு லாபகரமான நெட் மீட்டர் முறையை அமல்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இந்த நெட் மீட்டர் முறை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. சூரிய மின் கூரை அமைப்பதற்கு அனுமதி வாங்குவதே சிரமமாக உள்ளது. அதிகளவில் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்துவதை மக்களிடையே ஊக்குவிப்பதற்காக, அந்தந்த மாவட்ட மின்சார வாரியத்திடம் மட்டும் அனுமதி பெற்று 1000 கிலோவாட் வரை நெட் மீட்டர் முறையில் பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்.

Electric Grid

பொதுமக்களிடையே சூரிய மின்சாரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, 3 ஆண்டுகளுக்கு முன்னர் 30 சதவிகித மானியத்துடன் வீடுகளில் சூரிய மின் கூரை அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தைப் பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாட்டில் அது இன்னும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை" என்று கூறினர்.

சூரிய ஆற்றல் பயன்பாட்டில் இருக்கின்ற இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்து, சூரிய ஆற்றலின் மூலம் தமிழ்நாட்டில் அதிகளவில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை புதிய அரசு உருவாக்க வேண்டும் என்பதே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறையைச் சேர்ந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது. இது சாத்தியமானால், புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகவும் இருக்கும்.



source https://www.vikatan.com/news/environment/why-tamilnadu-govt-should-focus-more-on-solar-energy-an-analysis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக