Ad

புதன், 30 ஜூன், 2021

சேலம்: `15 நாள்ல கொரோனாவை அழிச்சுக் காட்டுறேன்!’ - 200 அடி டவரில் ஏறிய நபரால் பரபரப்பு

சேலம் அண்ணா பூங்கா அருகே சுமார் 200 அடி உயரம் கொண்ட எஃப்.எம் டவர் ஒன்று இருக்கிறது. நேற்று காலை இந்த டவரில் 100 அடி உயரத்துக்கு ஏறிய நபர் ஒருவர், ‘என்னைத் தவிர கொரோனாவை ஒழிக்க யாராலயும் முடியாது. 15 நாள் டைம் கொடுத்துப் பாருங்க’ எனக் கத்திக் கூச்சல் போட்டு கையிலிருந்த நோட்டீஸை அள்ளி வீசியிருக்கிறார். அந்தவழியே சென்ற பொதுமக்கள் இதனைப்பார்த்து பதறிப்போய் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

செந்தில்

சம்பவ இடத்துக்கு வந்த செவ்வாய்பேட்டை போலீஸார், மைக் மூலமாக அந்த வாலிபரிடம் பேச்சுக் கொடுத்து கீழே இறங்கிவரச் சொல்லியுள்ளனர். ‘கொரோனாவுக்கு மருந்து என்கிட்ட மட்டும் தான் இருக்கு. என்னோட கோரிக்கைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கணும். போலீஸ் என் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என அந்த வாலிபர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். ‘சரி கீழ இறங்கி வாப்பா... உன்னோட கோரிக்கையை அரசாங்கத்துக்கிட்ட சொல்லி நாங்க நிறைவேத்துறோம்’ என போலீஸார் சொல்ல, அந்த இளைஞர் சரசரவென டவரிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார். உடனே போலீஸார் அந்த வாலிபரை செவ்வாய்பேட்டை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

டவரில் ஏறி நிற்கும் செந்தில்

விசாரணையில் அந்த நபர் பூசாரிப்பட்டி அருகிலுள்ள வண்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் செந்தில் என்பதும் தெரிந்திருக்கிறது. சொந்தமாக லாரி வைத்து ஓட்டிக்கொண்டிருந்த செந்திலுக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கிறார். சரியாக வேலைக்குப் போகாமலும், அளவுக்கதிமான குடியாலும் செந்திலுடைய மனைவியும் அவரைப் பிரிந்து பெங்களூருவில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கேட்டுவந்த செந்தில், யாரிடமோ சொல்லி கைப்பட முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றை எழுதிவாங்கியிருக்கிறார்.

அதில், `கொரோனாவால் நாட்டு மக்கள் பசியும் பட்டினியுமாக இருக்கிறார்கள். எவ்வளவு ஊரடங்கு போட்டாலும் கொரோனாவை யாராலும் அழிக்க முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல நம்முடைய இந்திய தேசத்தையுமே என்னால் தான் காப்பாற்ற முடியும். 15 நாள் மட்டும் எனக்கு டைம் கொடுங்கள். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அதனை அழித்துக் காட்டுகிறேன்’ என எழுதியுள்ளார். இந்த மனுவைத் தான் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு டவரில் ஏறி நின்று சாலையில் வீசியிருக்கிறார் செந்தில் என்னும் ரஜினி செந்தில் (அந்த மனுவில் அப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறார்).

செந்திலை விசாரிக்கும் போலீஸார்

இந்த விவகாரம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “செந்தில் என்னும் அந்த நபர் அதிகாலை 5 மணிக்கே அந்த டவரில் ஏறியுள்ளார். ஆனால், மக்கள் நடமாட்டம் வந்தபிறகு கத்திக் கூச்சல் போட்ட பிறகுதான் விஷயம் தெரிந்திருக்கிறது. ‘சரி கொரோனாவை எப்படி ஒழிப்பீங்க!’ எனக் கேட்டதற்கு ‘எனக்கு 15 நாள் டைம் கொடுங்க சார்.. நான் ஒழிச்சுக் காட்டுறேன். இந்தியாவையே காப்பாத்துறேன்’ எனச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். ஏற்கனவே இதுமாதிரி ஒருமுறை டவரில் ஏறியிருக்கிறேன் எனச் சொன்னார். கடைசியில் செந்திலுடைய சகோதரரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து அறிவுரை சொல்லி அவருடன் அனுப்பி வைத்தோம்” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/the-young-man-climbed-the-200-foot-tower-in-salem-says-he-will-cure-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக