"அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணில் கண்டுபிடிப்பால் நான் தப்பித்தேன். அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கரும், நோபலும் வழங்க வேண்டும்" என செல்லூர் ராஜூ கலாய்த்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இன்று நடந்த மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "மாணவர் சமுதயத்தை ஏமாற்றி திமுக அரசு அமைந்துள்ளது.
திமுகவின் இளைய சூரியனாக காட்சியளிக்கும் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்து இளைய சமுதாயத்தினரை ஏமாற்றியுள்ளனர். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மருத்துவக்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பலனை அளித்துள்ளது.
அதேபோல அதிமுக அரசு கொண்டு வந்த விலையில்லா மடிக்கணினி, சத்தான உணவு, 16 வகையான பொருட்கள் வழங்கும் திட்டம் போன்றவை தொடருமா என கேள்வி எழுந்துள்ளது." என்றார்
'மின் தடைக்கு அணிலும் ஒரு காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது' பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு,
"முதலில் நான் தப்பித்தேன். ஊடகங்கள் மற்றும் வலைதளங்களின் கிண்டலிலிருந்து தப்பித்தேன். திமுகவினர் என்னை விஞ்ஞானி என கிண்டல் செய்வார்கள். தற்போது மின்சாரத்துறை அமைச்சர் புதிய கண்டுபிடிப்பாக அணிலை கண்டுபிடித்துள்ளார். அவர் தான் உண்மையான விஞ்ஞானி. எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்சார கம்பிகளில் செல்கிறது. அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கார் விருதும், நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என சொன்னார்கள். மதுரையைச் சேர்ந்த நிதியமைசர் புதுசு புதுசா பேசுறாரே தவிர எதுவும் மக்களின் சுமையை குறைத்ததாக தெரியவில்லை. இப்போது பெட்ரோல் விலையை எப்போது குறைப்போம் என்று சொன்னோம் என கேட்கிறார். திமுகவை உண்மையான மான் என நினைத்து மக்கள் பொய் மானை கண்டுள்ளனர்.
கொரானா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என தெரியவில்லை. கொரானாவை ஒழித்தோம் என அவர்களை அவர்களே பாராட்டிக்கொள்கின்றனர். தோழமை கட்சிகளும் பாராட்டுகின்றனர்.
கொரானா தீவிரமாக பரவியபோதும் முதல்வர் எடப்பாடி மாவட்டம்தோறும் ஆய்வு செய்தார். மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றவேண்டும் என பிரதமரால் பாராட்டப்பெற்றவர்.திமுக அரசு வீண் பெருமை பேசாமல் கொரானா மூன்றாம் அலைக்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்" என்றார்.
திமுகவினரால் முன்பு விடாமல் கிண்டல் செய்யப்பட்ட செல்லூர் ராஜூ, இப்போது வந்துள்ள 'அணில்' வாய்ப்பை பயன்படுத்தி திமுகவை விட்டு விளாசுகிறார்.
source https://www.vikatan.com/news/politics/former-minister-sellur-raju-press-meet-about-power-cut-issue-in-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக