Ad

திங்கள், 28 ஜூன், 2021

அச்சுறுத்தும் 'டெல்டா பிளஸ் வைரஸ்!' என்ன செய்யப்போகின்றன மத்திய, மாநில அரசுகள்?

இந்தியாவில் கொரோனா பேரிடர் பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இந்தியாவில் முதல் அலையின் தாக்கம் குறைத்ததுமே அதிகப்படியான தளர்வுகளும், மக்களின் அலட்சியமும் தான் இரண்டாம் அலைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. அதே வேளையில் இந்தியா முழுவதும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

டெல்டா ப்ளஸ் கொரோனா

பரவும் டெல்டா பிளஸ்:

உயிர் வாழ்வதற்குத் தன்னை உருமாற்றிக்கொண்டிருப்பது தான் வைரஸின் இயல்பு. இந்தியாவில் இரண்டாம் அலையில் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு உருமாறிய டெல்டா வகை வைரஸ் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது, டெல்டா வகை வைரஸில் இருந்து உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ‘டெல்டா பிளஸ்' வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் சமீபத்தில் தான் பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த வகை உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியா மட்டுமில்லாது சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருக்குலைத்து உடலுக்குள் நுழையும் திறன் படைத்தது என்றும் பரவும் தன்மை 30 முதல் 60 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றும். அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி

முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களிடம் நடத்திய ஆய்வில் டெல்டா வைரசுக்கு எதிரான எதிர்ப்புத் திறன் 33 விழுக்காடாக மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படுவது உறுதி என்று கூறப்படும் நிலையில், இந்த வகை வைரஸினால் ஏற்பட்டால் அதன் பாதிப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. காரணம், உடலில் டெல்டா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த வகை வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாது தற்போது கொரோனா சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் மருந்துகளுக்கும் டெல்டா பிளஸ் வகை வைரஸுக்கு பெரும் பலனை அளிக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த வகை வைரஸ்கள் குறித்த முழுமையான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

டெல்டா வகை வைரஸ் பரவலில் இந்தியா செய்யவேண்டிய முன்னெடுப்பு என்னென்ன என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``முதல் அலையில் நாம் கற்ற பாடத்தை வைத்துச் சரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருந்தது தான் இந்தியா இரண்டாம் அலையில் கடுமையான சேதத்தை சந்தித்ததற்கு முக்கிய காரணம். முதல் அலையின் போதே, இந்தியாவில் அதிகமான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்பட்டது. அதை இன்னும் விரைந்து செய்திருந்தால் பெரும் தட்டுப்பாடு தடுக்கப்பட்டிருக்கும்' என்று கூறினார்.

கொரோனா வைரஸ்

தொடர்ந்து பேசியவர், ``டெல்டா பிளஸ் பரவும் சூழலில் அடுத்தடுத்த தளர்வுகள் மோசமான சூழலைத் தான் ஏற்படுத்தும். மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் டெல்டா பிளஸ் வகை வைரஸை கண்டறிய அதிகப்படியான மூலக்கூறு ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றவேண்டும். இந்த வகை ஆய்வுகள் மட்டுமே முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும். இந்த வகை வைரஸில் VEC (Vaccination, Enhanced testing, Containment zone) அதிகப்படியான தடுப்பூசிகளைச் செலுத்துவது, கிராமங்கள் முதல் நோய் கட்டுப்பட்டு பகுதிகள் வரை அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளுவது மற்றும், கட்டுப்பட்டு பகுதிகளை அதிகப்படுத்துவது போன்ற செயல்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்" என்று பேசினார்.

Also Read: கொரோனா ஊரடங்கு: பொதுமக்களாகிய நமது கடமை என்ன?

டெல்டா பிளஸ் வகை வைரஸ் பரவல் குறித்து மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம், `` இந்தியாவில் தற்சமயம் டெல்டா பிளஸ்(AY 1- லைசின் அமினோ அமிலம் அஸ்பாரேஜின் அமினோ அமிலமாக உருமாறியுள்ளது.) தவிர்த்து P2 வகை உருமாற்றம்(B.1.128.2),மற்றும் AY 2-(அமினோ அமிலம் அலானின் அமினோ அமிலம் வேலினாக உருமாறியுள்ளது). மகாராஷ்டிராவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 மாதிரிகளைப் பரிசோதனைகளுக்கு அனுப்புகிறது. அதே போன்ற செயல் தமிழகத்திலும் நடைபெறவேண்டும். எய்ம்ஸ் இயக்குநர் திரு.ரந்தீப் குலேரியா 'இந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ் தடுப்பூசிக்கும் சரியாகக் கட்டுப்படுவது இல்லை என்றே இதுவரை ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது. எனவே, அதிகப்படியான மாதிரிகளை மூலக்கூறு ஆய்விற்கு அனுப்பி, அதன் முடிவுகள் அடிப்படையில் தளர்வுகளை அறிவிப்பது சிறப்பாக இருக்கும்' என்று கூறியுள்ளார்" என்றார்.

மருத்துவர் புகழேந்தி

மேலும், ``தமிழகத்தில் சில பகுதிகளைத் தவிர்த்து பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக அரசு பேருந்துகளில் 50 சதவிகித பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பேருந்துகளில் அதிகப்படியான மக்களே பயணிக்கிறார்கள். இதுபோன்று பல்வேறு உதாரணங்கள் கூறலாம். தளர்வுகளை அறிவித்தால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை- 4, திருவள்ளூர்- 3, காஞ்சிபுரம்- 1, மதுரை- 1. இங்கேயெல்லாம் தளர்வுகள் அறிவித்திருப்பது குறித்து மறுபரிசீலனை செய்தால் நல்லது. இவை வெளித்தெரியும் பனிக்கட்டியின் முனையாக(Tip of the iceberg)இருக்கலாம். உண்மையில் கூடுதல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது" என்று பேசினார்.

பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. இந்த தளர்வுகளைச் சரியான வகையில் மக்கள் பயன்படுத்தினால் தொற்று பரவாது கட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது. முகக்கவசம் அணிவது, சரியான தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்ற செயல்களைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். தொற்று கட்டுக்குள் இருப்பதும் அதிகரித்துச் செல்வதும் மக்களாகிய நம் கையில் மட்டுமே உள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/politics/what-are-the-precautions-central-and-state-governments-will-going-to-do-for-delta-plus-virus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக