Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

கொரோனா காலத்திலும் கொடிகட்டிப் பறக்கும் வங்கித்துறை; பங்குகளில் முதலீடு செய்யலாமா?

2020-2021-ம் நிதி ஆண்டு அனைத்து தொழில் துறைக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஆண்டு. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், தொழில் சார்ந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த ஆண்டில் இந்திய பங்குச்சந்தைகள் உட்பட, பெரும்பாலான உலக வர்த்தக சந்தைகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தன.

ஆனால், இத்தகைய நெருக்கடியான நிலையிலும் வங்கித்துறை வரலாறு காணாத லாபத்தை ஈட்டியுள்ளது. 2018-19 நிதி ஆண்டில் வங்கித்துறை ரூ.5,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்த நிலையில், 2020-21ம் நிதி ஆண்டில் ரூ.1,02,252 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் லிமிடெட்

தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி மற்றும் பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ ஆகிய இரண்டு வங்கிகளின் நிகர லாபம் மட்டுமே மொத்த வங்கித் துறையின் லாபத்தில் 50 சதவிகிதத்துக்கும் மேலாகப் பதிவாகியுள்ளது. அதாவது, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிகர லாபம் ரூ.31,116 கோடி ஆகும். முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் இது 18% அதிகம்.

அதே போல, எஸ்.பி.ஐ ரூ.20,410 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 20% அதிகம். இதற்கு அடுத்தபடியாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.16,192 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு வளர்ச்சி ஆகும்.

தற்போதுள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகள் மட்டுமே நஷ்டம் அடைந்துள்ளன. தனியார் வங்கிகளில் யெஸ் பேங்க் மட்டும் ரூ.3,642 நிகர இழப்பை சந்தித்துள்ளது. இழப்பை சந்தித்துள்ள வங்கிகளும் முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் இந்த நிதி ஆண்டில் கண்டுள்ள இழப்பு குறைவாகவே உள்ளது.

கடன்

வாராக்கடன் காரணமாக கொரோனா காலகட்டத்தில், பொதுத்துறை வங்கிகள் தொழில்சார்ந்த கடன்கள் வழங்குவதைக் குறைத்து, பாதுகாப்பான வீட்டுக் கடன் மற்றும் தங்க நகைக்கடன்களின் பக்கம் அதிகம் கவனம் செலுத்தின. இதன் காரணமாக, தனியார் வங்கிகள் அதிக லாபம் ஈட்டியிருப்பதாகத் தெரிகிறது.

Also Read: பெருந்தொற்றுக் காலம்... சிறு கடன்களை இப்போது வாங்கலாமா? கடன் வாங்கும் முன் கவனிக்க...

வங்கித்துறை ஈட்டியுள்ள ரூ.1,02,252 கோடி லாபத்தில், பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.31,817 கோடியாகவும், தனியார் வங்கிகளின் லாபம் ரூ.70,435 கோடியாகவும் பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டான 2019-2020-ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.26,015 கோடி நிகர இழப்பையும், தனியார் வங்கிகள் ரூ.21,078 கோடி நிகர லாபத்தையும் சம்பாதித்திருந்தன.

அதே போல 2018-2019-ம் நிதி ஆண்டிலும் பொதுத்துறை வங்கிகள் ரூ.66,608 கோடி நிகர இழப்பையும், தனியார் வங்கிகள் ரூ.28,703 கோடி நிகர லாபத்தையும் பதிவு செய்திருந்தன. இதன்படி பார்க்கும் போது, கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாகப் பொதுத்துறை வங்கிகள் நிகர லாபத்தை ஈட்டியிருப்பது தெளிவாகிறது.

நெருக்கடியான கொரோனா காலகட்டத்திலும், வங்கித்துறை சிறப்பாகச் செயலாற்றியிருப்பது பற்றியும், கவனிக்க வேண்டிய வங்கிப் பங்குகள் என்ன என்பது பற்றியும் பங்குச்சந்தை நிபுணர் ஏ.கே.பிராபகரிடம் பேசினோம்.

ஏ.கே.பிரபாகர்

``கொரோனா நோய்த்தொற்றுப் பரவலில், ஓய்வில்லாமல் இயங்கிய துறைகளில் வங்கித்துறையும் ஒன்று. கொரோனா ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில், வங்கித்துறை சார்ந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 66-வது ஏ.டி.எம் கூட்டத்தில், வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா பேசும் போது, `56 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வளர்ச்சி விகிதத்தை எஸ்.பி.ஐ பதிவு செய்திருப்பதாக'க் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியிருக்கும் தரவுகளின்படி, வங்கிகள் கொரோனா காலத்தில் அதிக லாபத்தை ஈட்டியிருந்தாலும், ஒரு சில வங்கிகளின் கிரெடிட் குரோத் மட்டுமே சிறப்பாக இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், பெரிய அளவில் கடன் வாங்கிய நிறுவனங்கள், அதைத் திருப்பிச் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.

உதாரணத்துக்கு ஸ்டீல் நிறுவனங்களை எடுத்துக்கொள்ளலாம். டாடா ஸ்டீல் நிறுவனம் மட்டுமே வங்கிகளில் வாங்கிய கடன்களில் சுமார் 28,000 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தியிருக்கிறது. அதே போல ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், செயில் போன்ற நிறுவனங்களும் கடன்களை திருப்பிச் செலுத்தியிருக்கின்றன.

ஸ்டீல் நிறுவனங்களைப் போல அதிக கடன்களைக் கொண்ட சுகர் நிறுவனங்களும் வங்கிக் கடன்களை கட்ட ஆரம்பித்திருக்கின்றன. தற்போதைய நிலையில், வங்கிகளிடமிருந்து கடன்களை வாங்கிக் கொண்டிருப்பது ரீடெய்ல் துறை சார்ந்த நிறுவனங்கள்தான். ஏனெனில், இன்னும் அவர்கள் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீளவில்லை.

Steel Manufacturing

பெரும்பாலான வங்கிகள் பாதுகாப்பான தங்க நகைக் கடன் மற்றும் வீட்டுக் கடன்களை அதிகம் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக ஃபெடரல் பேங்க், சி.எஸ்.பி ஆகிய வங்கிகள் அதிகம் தங்க நகைக்கடன்களை வழங்குகின்றன. அதே போல ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எஸ்.பி.ஐ வங்கிகள் வீட்டுக்கடன்களை அதிகம் வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன.

இந்த நேரத்தில் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், தொழில்நுட்ப கட்டமைப்பு எந்த வங்கியில் சிறப்பாக இருக்கிறதோ, எந்த வங்கியால் தொழில்நுட்ப கட்டமைப்பை சிறப்பாகக் கொண்டு வர முடியுமோ, எந்த வங்கி வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கிறதோ அந்த வங்கிகளைக் கவனித்து, அதில் முதலீடு செய்வது நல்லது.

Share Market (Representational Image)

Also Read: ₹1.5 லட்சம் கோடி கூடுதல் கடன், PF மானியம், இலவச விசா; நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தவை என்னென்ன?

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகள்தான் மேலே குறிப்பிட்ட விஷயங்களில் தற்போது முன்னணியில் இருக்கக் கூடிய வங்கிகள். ஐந்தாவதாக ஒரு வங்கியை குறிப்பிட வேண்டுமென்றால் ஓரளவுக்கு ஃபெடர்டல் பேங்கைச் சொல்லலாம்.

தற்போதைய நிலையில் இந்த ஐந்து வங்கிகளின் பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம். மற்ற வங்கிப் பங்குகளின் விலையில் கரெக்‌ஷன் ஏற்படும்போது, அதை வாங்கலாமா வேண்டாமா என்பதை அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்றார் தெளிவாக.



source https://www.vikatan.com/business/investment/banking-sector-books-record-profit-during-pandemic-is-it-right-time-to-invest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக