Ad

திங்கள், 28 ஜூன், 2021

புத்தம் புது காலை : அன்பை இழந்து, தூக்கம் தொலைத்து, ஆரோக்கியம் மறந்து... எதைத் தேடுகிறார்கள் ஆண்கள்?

''தான் எப்போதுமே நேசிக்கப்பட வேண்டும்.

தான் எப்போதுமே மதிக்கப்பட வேண்டும்.

தான் எப்போதுமே பாராட்டப்பட வேண்டும்.

தான் எப்போதுமே ஆராதிக்கப்பட வேண்டும்... இப்படி இன்னும் பற்பல 'வேண்டும்'கள், ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்க்கும் விஷயங்களாக இருக்க, ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எதை எதிர்பார்க்கிறான் என்றால்... சினிமா பார்க்க அனுமதி... அதுவும் நண்பர்களுடன்... அல்லது வாரம் இரண்டு பீர், அதுவும் மனைவியில்லாத தனிமையில்!''

இதுபோன்ற ஜோக்குகளை எத்தனையோ முறை, எத்தனையோ வடிவங்களில் படித்திருப்போம், கேட்டிருப்போம்... என்றாலும், உண்மையில் ஒவ்வொரு ஆணுக்கும் முக்கியமான தேவைதான் என்ன?

பத்திரிகைகளில் பெண்களின் பிரச்னைகள் பற்றி எத்தனையோ கட்டுரைகள் படித்திருப்போம். ஆனால், ஆண்களின் பிரச்னைகளைப் பற்றி சமீபத்தில் ஏதாவது படித்த ஞாபகம் நமக்கு இருக்கிறதா? சோஷியல் மீடியாக்களில் பெண்கள் பிரச்னையை விவாதித்து தீர்வுகளைச் சொல்வதில் எப்போதும் ஆண்களின் பங்கு பெரிதாக இருக்கும். ஆனால் எப்போதாவது தங்களது பிரச்னைகளை ஆண்கள் பேசியிருக்கிறார்களா... இல்லை பெண்கள் தான் அவற்றை அறிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார்களா?

"ஆம்பளைங்களுக்கு என்ன பிரச்னையாம்?" என்று எப்போதும் கிண்டலுடன் ஒதுக்கிவிடும் ஆண்கள் பிரச்சினைகள் பற்றி அதிர்ச்சிதரும் சில புள்ளிவிவரங்களை முதலில் தெரிந்து கொள்வோம்.


* ஐந்து ஆண்களில் ஒருவர், தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட முடிவதில்லை... அதற்கு முன்பே மரணித்து விடுகிறார்.


* சராசரியாக பெண்களைக் காட்டிலும் ஐந்து வருடங்களுக்கு முன்னரே ஆண்கள் இறந்துவிடுகின்றனர்.

* ஆண்களில் 67 சதவிகிதத்தினருக்கு உடற்பருமன் காணப்படுகிறது.


* மிடில் ஏஜ் என்று கூறப்படும் 35 வயதைத் தாண்டிய பின், பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இருமடங்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இரத்த அழுத்தமோ 52% அதிகமாக இருக்கிறது!


* இளவயதில் ஏற்படும் மாரடைப்பு நோயும், அதனை ஒட்டிய மரணங்களும் பெருமளவு ஆண்களில்தான் காணப்படுகிறது.

* குழந்தைப்பேறின்மைக்கான ஆணின் காரணங்களான விந்து குறைபாடுகள் மற்றும் ED (erectile dysfunction) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


* ஆண்களின் புகைப்பிடித்தல், மது அருந்துதல், உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக கல்லீரல் நோய் இருமடங்கு அதிகம் காணப்படுகிறது.


* பெண்களின் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் அளவிற்கு அதிகம் காணப்படும் ஆண்களின் நுரையீரல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வும் இருப்பதில்லை.

* ஆண்களில் 50 சதவிகித்திற்கும் அதிகமானவர்கள், உடற்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வதில்லை.


இவையனைத்துக்கும் மேலாக, ஆண்களின் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக இருப்பது இருதய நோயோ, புற்றுநோயோ அல்ல... தற்கொலைதான்! தற்கொலை செய்து கொள்பவர்களில் ஐந்தில் நான்கு பேர் ஆண்களாக இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றும் அதிகளவில் ஆண்களையே பாதித்திருக்கிறது என்கிறது CDC என்ற சர்வதேச நோய்தடுப்பு மையம்.

ஆண்களுக்கு ஏன் இவ்வளவு பாதிப்புகள் என்ற கேள்விக்கு பதில், இந்த சமூக அமைப்பில் தான் காணப்படுகிறது. ஒரு பெண் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படிச் சொல்கிறதோ, அதைப்போலவே ஒரு ஆணின் மீதும் சில எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது இந்தச் சமூகம்.

உண்மையில் மனைவியுடன் தனியே வாழும் ஆணுக்கு ஓரளவிற்கு அழுத்தம் இருக்கிறது என்றால், மனைவி, தாய், தங்கை குழந்தைகள் என கூட்டுக்குடும்பத்தில்வாழும் ஆணுக்கு பொறுப்பும், அழுத்தமும் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். அவ்வளவு அழுத்தம் இருக்கும் போதிலும் பெண்ணைப் போல புலம்புவதோ, வாய்விட்டு அழுவதோ ஆணுக்கு அழகல்ல என்று சொல்லி வளர்க்கப்பட்ட சமூகத்தில், அழவும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது ஒரு ஆணுக்கு!

மன அழுத்தம் மற்றும் மனப்பிறழ்வுகளுக்கு, சமுதாயம் தருகின்ற மோசமான மரியாதை, ஒரு ஆணை தனக்கு டிப்ரஷன் என்று வெளிப்படுத்திக் கொள்ளவும், அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும் தடுக்கிறது. ஆக, இன்னும் அதிக மனச்சிதைவுக்கு ஆளாகிறான் ஆண்.

இதுபோன்ற அழுத்தங்கள், குடும்பச்சுமைகள் எதுவும் இல்லாத ஒரு சராசரி ஆணும் கூட, இந்த நவீன அதிவிரைவு வாழ்க்கைமுறையில் தனது பணிக்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் தருமளவிற்கு தனது ஆரோக்கியத்துக்கும், எதிர்காலத்துக்கும் தருவதில்லை என்பது கசப்பான உண்மை!


புகை, மது, உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை போன்ற பொதுவான காரணங்களையெல்லாம் தாண்டி, நோய் அறிகுறிகளை எளிதாக உதாசீனப்படுத்துவது, மருத்துவரிடம் செல்ல தாமதிப்பது, தனது மன அழுத்தங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது போன்ற தனிப்பட்ட காரணங்களாலும் ஆண்களிடையே அதிகளவு நோய்களும், மரணங்களும் காணப்படுகின்றன.


ஆண்களே.... உங்களது உணவில் கவனம் செலுத்துங்கள், உறக்கத்தை சரிசெய்யுங்கள், உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். மதுவை மறந்து, புகைப்பிடித்தலை முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள். வருடத்திற்கு ஒருமுறையாவது தக்க உடல் பரிசோதனைகள் மூலமாக உங்களது ஆரோக்கியத்தை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இவையனைத்திற்கும் மேலாக, உங்களது பிரச்னைகளை உங்களுக்குள்ளேயே வைத்திருக்காமல் வெளிப்படுத்துங்கள். மன அழுத்தங்களைக் கொட்டித் தீர்த்திடுங்கள்... அழுவது அசிங்கம் அல்ல!


பெண்களே... ஆண்களைக் கொஞ்சம் கவனியுங்கள். தந்தையாக, கணவனாக, மகனான, நல்லாசானாக, ஓர் ஆண்மகனாக குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக, சமுதாயத்தில் உங்களைக் காப்பவனாகவும் உங்கள் அருகில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அவனுக்குள் பாவப்பட்ட ஜீவன் ஒன்றும் இருப்பதை உணர்ந்து ஆதரவு அளியுங்கள்.


The Protectors and The Providers என அழைக்கப்படும் ஒவ்வொரு ஆணுக்கும்,அவனது உடல் ஆரோக்கியமும், மனநலமும்தான் மிகமிக முக்கியத் தேவை என்பதை உணர்ந்திடுங்கள்!


#Men'sHealthMonth



source https://www.vikatan.com/health/healthy/why-mens-health-is-very-important-and-what-we-should-know-about-men

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக