Ad

புதன், 30 ஜூன், 2021

மதுரை: போலி கொரோனா இறப்பு சான்றிதழ் மூலம் குழந்தை விற்பனை! -காப்பகத்துக்கு சீல்; நிர்வாகி தலைமறைவு

மதுரையில் சட்டவிரோதமாக ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை மீட்டு சமூக ஆரவலர் என்ற பெயரில் மதுரை மாவட்ட நிர்வாகத்தில் செல்வாக்கை பெற்ற காப்பக நிர்வாகியை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.

காப்பகத்தில் இருந்த ஆதரவற்றோர்

மதுரை அருகே சேக்கிப்பட்டியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் பாதித்த இளம்பெண், கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசாருதீன், 4 மாதங்களுக்கு முன்பு மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் சிவக்குமார் நடத்தி வரும் இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஒரு வயதான ஆண் குழந்தைக்கு கடந்த 13-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காப்பக நிர்வாகி சேர்த்துவிட்ட அசாரூதீனுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்

இந்நிலையில் நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்ததாகவும் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறி அதற்கான ஆவணங்கள், புதைக்கப்பட்ட படத்தையும் அசாருதீனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அனுப்பிய ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதால் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அசாரூதீன் புகார் செய்தார். உடனே விரைந்து செயல்பட்ட காவல்துறையினருடன் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள், சமூக நலத்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

காப்பகத்தில் இருந்த ஆதரவற்றோர்

குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினார்கள். தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ரசீது எண் போலியானதாக இருந்துள்ளதும், அதே எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75 வயது நிரம்பிய முதியவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து தத்தனேரி மயான ஊழியர்கள் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போலியான ஆவணங்களை உருவாக்கி குழந்தையை புதைத்தது போல ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக தத்தனேரி மின்மயானம் சுகாதார ஆய்வாளர், நரிமேடு நகர்புற மருத்துவமனை அலுவலர் தரப்பில் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் அளிக்கப்பட்டது.

மூடப்பட்ட காப்பகம்

மேலும் தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் விசாரணை நடத்தியபோது இரு நாட்களுக்கு முன்பு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை இக்குழந்தையை அடக்கம் செய்ததாக காட்டியுள்ளது தெரிய வந்தது.

காப்பகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல் 2 வயது பெண் குழந்தையை சில நாட்களுக்கு முன் காப்பக நிர்வாகி சிவகுமார் தூக்கி சென்றதாகவும் அதன் பின் குழந்தையை திருப்பி தரவில்லை என்று அங்கு தங்கியிருந்த மற்றொரு பெண் கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காப்பக நிர்வாகி

இதைத்தொடர்ந்து காப்பக பணியாளர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆண் குழந்தையை இஸ்மாயில்புரத்தில் வசிக்கும் கண்ணன் தம்பதியிடம் 5 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தையை கருப்பாயூரணி சாதிக் தம்பதியிடம் விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. அதை தொடர்ந்து உடனே குழந்தைகள் மீடகப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட அந்த காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் அரசு காப்ப்கங்களுக்கு மாற்றப்பட்டார்கள். தலைமறைவாகியுள்ள காப்பக நிர்வாகி சிவக்குமாரை காவல்துறை தேடி வருகிறது.

புகாருக்குள்ளாகியுள்ள சிவக்குமார், கலெக்டர் அலுவலகம், காவல்துறை அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குடன் இருந்துள்ளார். அதனால் இவருக்கு நன்கொடைகள் அதிகம் கிடைத்துள்ளது. ஆனாலும், அனுமதியில்லாமல் காப்பகம் நடத்த சமூக நலத்துறையினர் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வியை மதுரை மக்கள் எழுப்பியுள்ளார்கள்.

மீட்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்

சிவக்குமாரை பிடித்து விசாரிக்கும்போதுதான் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள். மதுரையில் சில காலம் இல்லாமல் இருந்த குழந்தைகள் விற்பனை விவகாரம் மக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/children-sold-with-the-help-of-fake-documents-from-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக