இன்று, ஜூலை 1... தேசிய மருத்துவர்கள் தினம்!
"தங்களது உயிரை துச்சமாகக் கருதி, அனைவரது உயிரையும் காக்கும் உன்னதப் பணியை இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் மேற்கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி!"
"நேரம் காலம் பார்க்காமல் நேயப் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி!"
"தன்னலம் பாராது பிறர்நலம் காக்கும் மகத்தான மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவ தின நல்வாழ்த்துகள்!"
- என நேற்றிலிருந்தே தங்களது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்த நண்பர்கள், உறவினர்கள், நோயாளிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும், அனைத்து மருத்துவர்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன், "ஏன் உயிர் மீட்பர்களை கொஞ்சம் மீட்க வேண்டும்?" என்பதை அனைத்து மருத்துவர்களின் சார்பாக உங்கள் அனைவருக்கும் சொல்லவும் விரும்புகிறேன்.
நகரத்திற்கும் சேராத, ஆனால் கிராமமும் அல்லாத அந்த ஊரில் 15 பெட் மற்றும் அவசர சிகிச்சை வசதியுடன் இருக்கும் மருத்துவமனை அது. அதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து, அந்த ஊரில் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர் அந்த பொது மருத்துவர்.
மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருந்து, தினமும் காலையிலும், மாலையிலும் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்ததவர் அந்த மருத்துவர். மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக வருபவர்களை உடனடியாக கவனித்து, தேவையென்றால் அவர்களை நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு அனுப்புவதுடன், அதன்பின்னும் நகர மருத்துவர்களுடன் தொடர்புகொண்டு, follow-up செய்து, அவர்கள் நலனை கவனித்தவர். பலருக்கும் குடும்ப மருத்துவர் என்பதையும் தாண்டி நண்பராகவும் இருந்த நல்ல மருத்துவர் அவர்!
ஆனால், அவையனைத்தும் ஒரேநாளில் மாறிப்போனது.
தீவிர டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஐந்து நாட்கள் காய்ச்சலுடன் ஆபத்தான நிலையில் அதிகாலையில் அழைத்து வரப்பட்டிருக்கிறது பதினோரு வயதுக்குழந்தை. மிகவும் மோசமான நிலையில் குழந்தை இருப்பதைப் பார்த்தவுடன், "குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது" என்று தெரிவித்துவிட்டு ஆரம்பித்த சிகிச்சைக்கு சலைன் செலுத்தும்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிட்டது. எவ்வளவு முயன்றும் பலனின்றி அடுத்த ஒரு மணிநேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.
அதற்குப்பின் நிகழ்ந்தவைதான் வலி மிகுந்தவை, வேதனையானவை.
"டாக்டர் சரியான சிகிச்சை கொடுக்காததால் தான் குழந்தை இறந்துவிட்டது" என்றும், "தவறான ஊசி போட்டதால்தான் குழந்தை இறந்துவிட்டது" என்றும் கொந்தளித்த அக்குழந்தையின் உறவினர்கள், மருத்துவரை மோசமாகத் தாக்கியதுடன், தடுக்கமுயன்ற செவிலியர்களையும் தாக்கி, போலீஸ் வரும்வரை மருத்துவமனையையும், மருத்துவ உபகரணங்களையும் உடைத்து, பெரும் சேதத்தை உண்டாக்கிவிட்டார்கள்.
அத்துடன் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் தாக்கப்பட்ட வீடியோ, அனைத்து ஊடகங்களிலும் பகிரப்பட, அன்றைய தினத்தின் பரபரப்பான செய்தியாகிப் போனது அந்த மருத்துவமனை.
உண்மையில் இந்த மூத்த மருத்துவர் என்பவர் நாளை நானாகவும் இருக்கலாம், என்னைப் போல் ஆயிரக்கணக்கான மருத்துவர்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஆனால், அதற்குப்பின் நடந்த சம்பவங்கள் நம் அனைவருக்குமானவை!
குழந்தையை ஐந்து நாட்கள் தாமதமாகக் கொண்டுவந்தது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், மருத்துவரைத் தாக்கி மருத்துவமனைக்கு சேதம் விளைவித்த அந்தக்குழந்தையின் உறவினர்கள் நான்கு பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழக அரசின் சட்டம் 48/2008-ன் படி ஐந்தாண்டுகள் சிறை தண்டனை, நான்கு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
ஆனால், மருத்துவரை அடித்தபோது பரபரப்பாக்கிய ஊடகங்கள், அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதை ஒரு செய்தியாகக் கூட கண்டுகொள்ளவில்லை. அதேசமயம் அந்த சம்பவத்தால் மனமுடைந்த மூத்த மருத்துவர், தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.
"அந்த ஊருக்குப் போனா அடிப்பாங்க" என்று அந்த மருத்துவமனைக்கு புதிய மருத்துவர்களும் வரத் தயங்கி, இன்று தங்களது ஒவ்வொரு மருத்துவத் தேவைக்கும் வேறு ஊரின் மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள், அன்று மருத்துவரை அடித்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள்.
எங்கேயும் சில புல்லுருவிகள் இருப்பதைப் போல மருத்துவத்திலும் இருக்கலாம். அவர்கள்மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை மனதார வரவேற்கும் நாங்கள், இதுபோல உண்மையாக சேவைசெய்யும் மருத்துவர்கள் மீது தாக்குதல்கள் நடக்கும்போது நடுங்கிப் போவதுடன் மனம் கலங்கி, தொழிலையே விட்டுவிடும் முடிவுக்கே தள்ளப்படுகிறோம்!
இதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் பற்றிப் பேசும் முன்னர் இந்திய அளவிலான சில புள்ளிவிவரங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
* அடித்துத் தாக்கப்படும் physical assault (10%) ஒருபக்கம் இருக்க, வார்த்தைப் பிரயோகங்கள், வாக்குவாதங்கள் எனப்படும் verbal abuse (85%) என இந்தியாவில் 75% மருத்துவர்கள், பணியிட வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
* ஆண் மருத்துவர்கள், அதிலும் இரவு நேரங்களில் வெகு எளிதாக வன்முறைக்கு ஆளாகின்றனர் என்றாலும், இதில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் மிகவும் சாஃப்ட் டார்கெட்களான மகப்பேறு மருத்துவர்களே (40%). இதற்கு அடுத்தநிலையில் இருப்பவர்கள் அறுவைசிகிச்சை நிபுணர்கள் (30%).
* கடந்த பத்தாண்டுகளில், இந்த வன்முறைகள் 15% அதிகரித்துள்ளது. இந்த கோவிட் காலத்தில், அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே அசாம், மேற்கு வங்கம், பீகார், டெல்லி, கர்நாடகா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவர்களின் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.
* இந்த வன்முறைகளால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் முன்னெப்போதைக் காட்டிலும் (43%) கூடியிருக்கிறது.
* சாதாரண பொதுமக்களின் வாழ்நாளைக் காட்டிலும் மருத்துவர்களின் வாழ்நாள் 10 வருடங்கள் குறைவு என்கிறது இந்திய மருத்துவ சங்கத்தின் ஆய்வு ஒன்று. அதாவது சராசரி இந்தியர்களின் வாழ்நாள் 69-72 வருடங்கள் என்றால், இந்திய மருத்துவர்களின் வாழ்நாள் 55-59 மட்டுமே.
* மருத்துவர்களின் தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, உடற்பருமன், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை இதற்குக் காரணம் என்றாலும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
இந்த வன்முறைகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை இந்தியாவின் பல மாநிலங்கள் எடுத்து வருகிறது என்பதுடன் அதில் தமிழ்நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பது ஒரு நிம்மதியான செய்தி. தமிழக அரசின் சட்டம் 48/2008 என்பது மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் காக்கும் முக்கிய சட்டம் என்பதுடன் இதில் பத்தாண்டு வரை கடுங்காவல் சிறைத்தண்டனையுடன், இந்த வகை குற்றங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று மருத்துவர்களுக்குப் பாதுகாப்பளிக்கிறது மாநில அரசு.
இது ஒருபுறமிருக்க, இந்த மருத்துவரை தாக்கும் மனநிலை இந்தியாவில் மட்டுமல்ல. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது என்றும், அதுவும் ஆசிய நாடுகளில், முக்கியமாக சீனா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தானில் இன்னும் அதிகம் காணப்படுகிறது என்கிறது புள்ளிவிவரம்.
எந்த வினைக்கும் எதிர்வினை ஒன்று இருக்குமல்லவா? அது மருத்துவத்திலும் நிகழத் தொடங்கியிருக்கிறது. உலகெங்கும் மருத்துவர்கள் மீது நிகழும் வன்முறைகள், நமது புதிய தலைமுறை மருத்துவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் இந்த மாற்றம் நம்மிடையே வருத்தத்தைத்தான் அளிக்கிறது.
இன்றைய இளம் மருத்துவர்கள், சமீபமாக 'Dermatology' போன்ற அவசர சிகிச்சை தேவைப்படாத சில துறைகளை அதிகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதுமட்டுமன்றி, Radio Diagnosis, Pathology போன்று நோயாளிகளை நேரடியாகத் தொட்டுப் பார்க்கக்கூடத் தேவையில்லாத துறைகளையே தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் எனும் மனநிலைதான் இங்கு கவலையளிக்கிறது.
அதாவது, கையில் ஒரு பெட்டியுடன் வீட்டிற்கு வந்து சிகிச்சையளித்து, குடும்பத்தில் ஒருவராகத் திகழ்ந்த 'ஃபேமிலி டாக்டர்' என்ற கான்செப்ட்டை மருத்துவ ஸ்பெஷாலிட்டிகளும், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும் இல்லாமல் செய்திவிட்டது. இதனால் மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் இடையேயான புரிதல்கள் குறைந்து இடைவெளி அதிகரித்தது. அடுத்து மருத்துவர்கள் மீதான இதுபோன்ற வன்முறைகளை பெரிதாக்கும் ஊடகங்கள், வன்முறைக்கு வித்திட்டவர்கள் தண்டனை பெறுவதைச் செய்தியாக்காமல் போகும்போது, தங்களுக்குப் பாதுகாப்பில்லையென்று கருதும் அடுத்த தலைமுறை மருத்துவர்களை அது சுலபமான வழிகளைத் தேட வைக்கிறது.
ஆம்... நேற்று உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து, இன்று நீங்கள் அடித்தபோது குனிந்து அடிவாங்கிய ஒரு தலைமுறை, நாளை அதிலிருந்து முற்றிலும் விலகியிருக்கத் தீர்மானித்துவிட்டது உண்மையிலேயே அனைவரும் கவலைப்பட வேண்டிய செய்தி இது.
இவையனைத்திற்கும் காரணங்களைத் தேடுவதைக் காட்டிலும், இனி உங்கள் மீட்பர்களை இந்த மனநிலையிலிருந்து மீட்க, மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை பற்றி யோசிப்போம்.
* மக்களுக்கு மருத்துவர்கள் மீது நம்பிக்கையும், மருத்துவர்களுக்கு மக்கள் மீதான பயத்தையும் போக்க ஒரே வழி தகவல் தொடர்பு(Communication). Acknowledge, Listen, Explain, Review ஆகிய மந்திரச் சொற்கள் இருபக்கத்தினருக்குமான புரிதலை, நம்பிக்கையை உண்டாக்கவேண்டும்.
* உலகில் பெரிதும் மதிக்கப்படும் மருத்துவத் தொழிலையும், அதனை ஏற்று நடத்தும் மருத்துவர்களையும், அவர்களின் தியாகத்தையும் போற்றிப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. பொத்தாம்பொதுவாக எதிர்மறையாக சினிமாக்களிலும், கதைகளிலும் சித்தரிப்பதை முதலில் நிறுத்தவேண்டும்.
* பரபரப்பான செய்திகளுக்கு மட்டுமே ஊடகங்கள் அல்ல... குற்றங்களைச் சொல்வதோடு அது மீண்டும் நடக்காமல் தடுப்பதிலும் அவர்களது பங்கு பெரிதும் உள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் செயல்படவேண்டும்.
* பிரச்னைகள் வரும்போது மட்டுமே விழித்தெழுந்து வெறும் கண்டனம் கருத்து தெரிவித்தல் மட்டுமில்லாமல், மற்ற சமயங்களிலும் மருத்துவ சமுதாயம் பற்றி மக்களிடையே புரிதல்களை ஏற்படுத்த விளைய வேண்டும்.
ஆக, மக்களிடமிருந்து விலகி நிற்க முடிவெடுத்துள்ள ஒரு தலைமுறையினரை மீண்டும் நம்முடன் சேர்த்தணைத்து, நமது எதிர்காலத்தை பாதுகாப்பாக்கிக் கொள்வது நம் அனைவரின் கைகளிலும்தான் உள்ளது!
மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின நல்வாழ்த்துகள்!
source https://www.vikatan.com/health/healthy/why-we-should-protect-our-doctor-community
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக