வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் என்பவரை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டன் மூலம் கொலை செய்ய முயன்றதாக பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ஆர். வெங்கட்ராமன் (42) என்பவர் கைது செய்யப்பட்டு முசிறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பா.ம.க வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள மருத்துவக் குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் வன்னியர் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது தம்பி ம.க.ராஜா என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில்,சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமரூதுரைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டன் உள்ளிட்டோர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து லாலி மணிகண்டன் ஜாமினில் வெளியே வந்து கார் மூலம் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் போது ம.க.ஸ்டாலின் தரப்பினர் வழி மறித்து மூன்று பேரைக் கொலை செய்தனர். இதில் லாலி மணிகண்டன் மற்றும் அவரது அண்ணன் மகேஷ் ஆகியோர் தப்பி விட்டனர். இந்த வழக்கில் ம.க.ஸ்டாலின் கோவை மத்திய சிறையிலிருந்ததும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில் லாலி மணிகண்டனுக்கும், ம.க.ஸ்டாலினுக்குமான பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. சேலம் மத்திய சிறையிலிருந்த லாலி மணிகண்டன் பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமன் உதவியுடன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சதித்திட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் இதனை தடுக்க திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகன், இன்ஸ்பெக்டர் அனந்த கிருஷ்ணன், தனிப்படை எஸ்.ஐ கண்ணன் உள்ளிட்ட போலீஸார் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
மேலும் இதற்கான விசாரணை எஸ்.பியின் நேரடி கண் காணிப்பில் நடைபெற்று வந்தது. ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம் சிறையில் இருந்த லாலி மணிகண்டனை இரண்டு தினங்களுக்கு முன் அழைத்து வந்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி விசாரித்தனர். இதற்காக நீதிமன்றம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் லாலிமணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் இதில் வெங்கட்ராமனுக்கு தொடர்பிருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வெங்கட்ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் முசிறி சிறையில் அடைத்தனர். மேலும் லாலி மணிகண்டனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணையினை தொடர்ந்து வருகின்றனர். எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் போலீஸ் டீம் துரிதமாக செயல்பட்டு அரங்கேற இருந்த கொலையை தடுத்துள்ளனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சிலரிடம் விசாரித்தோம், `` தன் தம்பி ராஜா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழியாக ம.க.ஸ்டாலின் தரப்பினர் லாலி மணிகண்டன் தரப்பில் மூன்று பேரை கோவையில் பட்டப்பகலில் கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து வெங்கட்ராமன் உள்ளிட்டவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கே சென்று ராமதாஸை சந்தித்து, ` கொலை வழக்கில் சிக்கியுள்ளார் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் அவரால் கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது' என ம.க.ஸ்டாலின் குறித்து புகார் கூறி கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றனர்.
பின்னர் ம.க.ஸ்டாலின் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார். வெங்கட்ராமன் தன்னை செல்வாக்கு மிக்க ஆளாக வளர்த்து கொள்கிறார். அன்புமணி ராமதாஸ் ஆதரவும் வெங்கட்ராமனுக்கு உதவியாக இருந்தது. இந்நிலையில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ம.க.ஸ்டாலின் `மது விலக்கு,கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' உள்ளிட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இதில் அவரின் செல்வாக்கு உயரத் தொடங்கியதுடன் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவராகவும் ராமதாஸால் அறிவிக்கப்படுகிறார். இளைஞர்களும் அவர் பின்னால் அணிவகுக்கத் தொடங்கினர்.
ம.க.ஸ்டாலின் கட்சிக்குள் இருந்தால் தான் தனித்துவமிக்க நபராக வளர முடியாது என வெங்கட்ராமன் யோசிக்க தொடங்கினார். இந்நிலையில் சிறையிலிருக்கும் லாலி மணிகண்டன் ஜாமினில் வெளியே வருவதற்கான பண உதவியை தன் அண்ணன் மகேஷ் மூலமாக வெங்கட்ராமனிடம் கேட்டுள்ளார். அப்போது லாலிமணிகண்டனிடம் போனில் பேசிய வெங்கட்ராமன், `நீ ஜாக்ரதையா இரு ம.க.ஸ்டாலின் தரப்பால் உன் உயிருக்கு ஆபத்து இருக்கு' என்றுள்ளார். இதனைக் கேட்ட லாலி, `நான் முதலில் முந்திக் கொண்டு ம.க.ஸ்டாலினை கொலை செய்து விடுகிறேன். எனக்கு நீங்க உதவி செய்யுங்க' என கேட்டுள்ளார்.
வெங்கட்ராமன் உதவி செய்ய, சிறைக்குள் இருந்தே லாலி மணிகண்டன் கொலைக்கான சதித்திட்டத்தை தீட்டியிருக்கிறார். இந்த தகவல் எப்படியே கசிந்து போலீஸ் தரப்பிற்கு தெரிய வர அதிரடியாக களத்தில் இறங்கி அரங்கேற இருந்த கொலை சம்பவத்தை தடுத்துடன் வெங்கட்ராமனையும் கைது செய்துள்ளனர்." என்றனர்.
போலீஸ் தரப்பில் பேசினோம்,லாலி மணிகண்டனுக்கும், ம.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், `` ம.க.ஸ்டாலின் உன்னை கொலை செய்யப்போவதாக" வெங்கட்ராமன் லாலியிடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து லாலி மணிகண்டன் சிறையிலிருந்து ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்காக லாலிக்கு வெங்கட்ராமன் ரூ 40,000 பணம் கொடுத்துள்ளார். மேலும் போன் மூலம் சிறையிலிருக்கும் லாலியிடம் பேசியுள்ளார்.
அந்த உரையாடலில், `என்னால ஓட முடியல நான் வெளியே வந்ததும் பா.ம.கவில் எனக்கு பொறுப்பு வாங்கி கொடுங்க. ஒரு இடத்துல இருந்து நான் அரசியல் பண்றேன்' என கேட்க வெங்கட்ராமனும் செய்து தருவதாக உறுதி கூறியதுடன் கொலை செய்வதற்கான உதவியையும் செய்கிறார். இதற்காக லாலி முதல் கட்டமாக வெங்கட்ராமனிடம் ரூ 1 லட்சம் கேட்டுள்ளான் அவரும் தருவதாக கூறிய நிலையில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடி ஆக்ஷனில் இறங்கி நடத்திய விசாரணையில் செல்போன் உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது உண்மையென தெரிய வந்தது.
வெங்கட்ராமன், லாலி என்னை மிரட்டினார் அந்த பயத்தில் நான் உதவி செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால் லாலி நான் மிரட்டவில்லை என கூறியிருக்கிறார். தற்போது வெங்கட்ராமன் முசிறி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாலி மணிகண்டனிடன் விசாரணை தொடர்கிறது" என தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/politics/pmk-deputy-general-secretary-kr-venkatraman-arrested-for-trying-to-kill-vanniyar-sangam-maka-stalin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக