வடசென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் தாய் ஒருவர், நியாயவிலைக் கடை ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். அவருக்கும், மாதவரம் துணை கமிஷனர் தனிப்படையில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒன்றாக இருந்ததை அந்தப் பெண்ணின் மகள் பார்த்தாகச் சொல்லப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, தன்னுடைய தந்தையிடம் இதைச் சொல்லப்போவதாகக் கூறியிருக்கிறார். அதனால், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரும், சிறுமியின் தாயும் சிறுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
Also Read: சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் - போலீஸ் தீவிர விசாரணை!
இந்தநிலையில், சதீஷ்குமார் குறித்த தகவல் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்ததும், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து மாதவரம் காவல் சரக மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``துணை கமிஷனரின் தனிப்படையில் சப் இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றிவந்தார். இவர் பல குற்றவழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறார். அதற்காக சென்னை போலீஸ் கமிஷனர்கள், உயரதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெற்றியிருக்கிறார். சதீஷ்குமார் மீது பாலியல் தொல்லை குறித்த புகார் வந்ததும் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்டது 15 வயது சிறுமி என்றதும், மாதவரம் அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியிடமும், அவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணை அடிப்படையில் சதீஷ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்திருக்கிறோம். இந்த வழக்கில் சிறுமியின் தாய், அவரின் அக்காவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவர்களையும் கைதுசெய்திருக்கிறோம். கைதுசெய்யப்பட்ட சதீஷ்குமார் திருவள்ளூர் மாவட்டம், வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்குத் திருமணமாகிவிட்டது. தமிழக காவல்துறையில் நேரடியாக சப் இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தார். பணியில் சிறப்பாகச் செயல்பட்டவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். சதீஷ்குமார், இன்ஜினீயரிங் படித்தவர்.
சதீஷ்குமார், சிறுமியின் தாய் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்த போது இருவரும் அடிக்கடி பேசியது தெரியவந்திருக்கிறது. மேலும் சிறுமியின் தாய்க்கும், சிறுமிக்கும் பரிசாக விலை உயர்ந்த ஐபோனை சதீஷ்குமார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சிறுமியை அவரின் தாய், பெரியம்மா ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமாருடன் பழகவைத்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால் சிறுமிக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் சதீஷ்குமார், துப்பாக்கிமுனையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மறுத்திருக்கிறார். விசாரணை மற்றும் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சிறுமியின் அம்மா, பெரியம்மா ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம்’’ என்றார்.
இந்த வழக்கில் கைதுசெய்யப்படுவதற்கு முன் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய். சிறுமிக்குத் துப்பாக்கிமுனையில் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை' என்று கூறியிருக்கிறார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒருசிலரின் இது போன்ற செயல்கள், ஓட்டுமொத்த காவல்துறையினருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவருகின்றன.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-sub-inspector-arrested-in-pocso-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக