Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

மதுரை : திமுக ஆட்சியில் பல்லாயிரம் கோடி அரசுக்கு இழப்பு; விவாதிக்கத் தயாரா? - ஆர்.பி.உதயகுமார் சவால்

"திமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வெளியிடப்பட்ட மத்திய தணிக்கை அறிக்கை பற்றி விவாதம் நடத்த தி.மு.க தயாரா?" ‌‌ என்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்திருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்

மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் பயிற்சி முகாம் டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``நீட் தேர்வு, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்கு மறைமுகமாக ஆதரவு தந்தது தி.மு.க. நீட் தேர்வை ரத்து செய்ய ஜெயலலிதா கடுமையாக போராடினார். அதன்பின் எடப்பாடியார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர்,குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வரை கடுமையாக வாதாடிய வழக்கறிஞர்கள், தங்களால் முடிந்தளவு அத்தனை முயற்சிகளையும் எடுத்தோம் என்றார்கள்.

அதற்கு மாற்றாக நீட் தேர்வு பயிற்சி மையத்தையும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டையும் எடப்பாடியார் உருவாக்கினர். இதன் மூலம் 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த இடஒதுக்கீடு இருக்கிறதா என்பதைக்கூட தற்போதைய அரசு தெளிவுபடுத்தவில்லை.

Also Read: மின் வாரியம்: பல்லாயிரம் கோடி சூறையாடல்; ஒரு லட்சம் கோடி கடன்! இந்தநிலைக்கு என்ன காரணம்?

தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி, அப்பாவி மாணவர்களிடம் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்ற தி.மு.க, நீட் ரத்து பற்றி சட்டசபையில் கூறவில்லை.

மருத்துவம் படிக்க மாணவர்கள் தயாராக உள்ள நிலையில் நீட் தேர்வு உள்ளதா இல்லையா என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். ஆனால், இதுவரை எந்த பதிலையும் அரசு கூறவில்லை. ஆனால், நீட் தேர்வுக்கு அனைவரும் தயாராக இருங்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பெட்ரோல்-டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் சட்டசபையில் இது பற்றி எதுவும் கூறவில்லை.

எங்கள் ஆட்சியில் மின்சாரத்துறையில் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கை தெரிவிப்பதாக தி.மு.க-வினர் கூறுகின்றனர். தி.மு.க ஆட்சிகாலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த தணிக்கை அறிக்கை சம்பந்தமாக விவாதம் செய்ய தி.மு.க தயாரா? நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க ஆட்சிக்காலத்தில் மிகக் கடுமையான மின்வெட்டு இருந்தது அதையெல்லாம் சரி செய்து மின் கட்டணத்தை உயர்த்தாமல் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கமாக கூறியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி செங்கல்லை மட்டும் காண்பித்து எந்த பணியும் நடைபெறவில்லை என்று கூறினார்கள். ஆனால், பிரதமரை ஸ்டாலின் சந்தத்தபோது எய்ம்ஸ்க்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அ.தி.மு.க ஆட்சியில் இடம் கொடுக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார்.

தடுப்பூசி செலுத்துவதில், தமிழகம் பின்தங்கியுள்ளது. தி.மு.க செய்யும் தவறுகளை திசைதிருப்பும் வகையில் எங்கள் மீது சேற்றை வாரி இறைத்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்" என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் தி.மு.க அமைச்சர்களிடம் தொடர்ந்து சவால் விட்டு வருவதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.



source https://www.vikatan.com/news/politics/rb-udhayakumar-challenges-dmk-on-cag-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக