Ad

சனி, 26 ஜூன், 2021

பாவ் பாஜி | டோக்ளா | தால் வடா | ரகடா பாட்டீஸ் - ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

என்னதான் ஸ்டார் ஹோட்டல் விருந்தே ஆனாலும், மல்டிகுசின் ரெஸ்ட்டாரன்ட்டுகளில் சாப்பிட்டாலும் தெருவோரக் கடைகளில், கையேந்தி பவன்களில் சாப்பிடுகிற உணவுகளுக்கு ஈடாகுமா? அதிலும் சில அயிட்டங்களைத் தெருவோரக் கடைகளில் மட்டும்தான் ருசிக்க வேண்டும். பத்து மடங்கு விலைகொடுத்தாலும் அந்தச் சுவை பெரிய ஹோட்டல்களில் கிடைக்காது. தெருவோரத்து குட்டிக் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் கிடைக்கும் ஸ்ட்ரீட் ஃபுட் சிலவற்றை அதே சுவையில் வீட்டில் தயாரித்து ருசிக்க ஆசையா..? வீக் எண்டில் உங்கள் வீட்டில் ஸ்ட்ரீட் ஃபுட் ஃபெஸ்டிவல் நடத்தி அசத்துங்கள்...

தேவையானவை:

பாவ் பன் - 4
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

பாஜி செய்ய:


வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்.
வேகவைத்த காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி) - கால் கப்.
குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்).
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்).
தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்).
பாவ் பாஜி மசாலா - 3 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் விழுது - 2 டீஸ்பூன் (காய்ந்த மிளகாயை 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்).
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பாவ் பாஜி

செய்முறை:

காய்கறிக் கலவையை மசிக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் மசித்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பாவ் பாஜி மசாலா, காய்ந்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றி நன்கு கிரேவி பதத்துக்கு வரும்போது ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்கவும். தவாவில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, பாவ் பன்களைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். பாவ் பாஜி மசாலாவுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, வெங்காயம் தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பன்களுடன் சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை:

கடலைமாவு - ஒரு கப்.
ரவை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.
இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
சர்க்கரை - 3 டீஸ்பூன்.
எலுமிச்சைப்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
ஃப்ரூட் சால்ட் - 2 டீஸ்பூன்.
சர்க்கரை - 2 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்.
கடுகு, வெள்ளை எள் - தலா அரை டீஸ்பூன்.
கறிவேப்பிலை - சிறிதளவு.
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்).

அலங்கரிக்க:

கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
தேங்காய்த் துருவல் - சிறிதளவு.

டோக்ளா

செய்முறை:

சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். கடலை மாவு, ரவை, மஞ்சள்தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவவும். கரைத்த மாவுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கலந்து தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும் (ஃப்ரூட் சால்ட் கலந்த உடனே மாவை வேகவிட வேண்டும்). பிறகு, சதுர வடிவில் துண்டுகளாக்கவும். இதுதான் டோக்ளா. தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளித்து, டோக்ளா மீது ஊற்றவும். அதன் மேலே சர்க்கரைக் கரைசல், கொத்த மல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப்.
பச்சை மிளகாய் - 4.
தோல் சீவிய இஞ்சி - அரை இன்ச் துண்டு.
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்.
மிளகு - ஒரு டீஸ்பூன்.
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தால் வடா

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடியவிடவும். அதனுடன் மல்லி, மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு, உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாகக் கிள்ளி போட்டுப் பொரித்தெடுக்கவும். பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.

தேவையானவை - பாட்டீஸ் செய்ய:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்.
பிரெட் தூள் - கால் கப்.
பச்சை மிளகாய் - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டேபிள்ஸ்பூன்.
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்.
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ரகடா செய்ய:

காய்ந்த வெள்ளைப் பட்டாணி - முக்கால் கப்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்.
பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப்.
பச்சை மிளகாய் - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்.
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்.
மஞ்சள்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டேபிள்ஸ்பூன்.
மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - ஒரு டீஸ்பூன்.
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்.
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அலங்கரிக்க:

கிரீன் சட்னி - 4 டேபிள்ஸ்பூன்.
இனிப்புச் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்.
நறுக்கிய வெங்காயம் - கால் கப்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
சேவ் - அரை கப்.
சாட் மசாலாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்.
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

ரகடா பாட்டீஸ்

செய்முறை:

உருளைக்கிழங்குடன் உப்பு, பிரெட் தூள், பச்சை மிளகாய் - பூண்டு விழுது, மஞ்சள்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி சற்றுக் கனமாகத் தட்டவும். இதுதான் பாட்டீஸ். தோசைக்கல்லைக் காயவைத்து பாட்டீஸ்களை அடுக்கி சுற்றிலும் எண்ணெய்விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

பட்டாணியை 10 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கிப் பச்சை மிளகாய் - பூண்டு விழுது சேர்த்து வதக்கி வெங்காயம், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு, தேவையான தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். அதனுடன் வேகவைத்த பட்டாணியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுவே ரகடா. தட்டில் 2, 3 பாட்டீஸ்களை அடுக்கி, அதன்மீது ரகடாவை ஊற்றவும். பிறகு, அதன்மீது கிரீன் சட்னி, இனிப்புச் சட்னி ஊற்றி, வெங்காயம், கொத்தமல்லித்தழையைத் தூவவும். இறுதியாக மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், சேவ் தூவிப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/pav-bhaji-dhokla-dal-vada-ragada-patties-weekend-street-food-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக