நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமயிலான கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆறு இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க, சபாநாயகர், துணை முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த ரங்கசாமி ஒருகட்டத்தில், சபாநாயகரையும், இரண்டு அமைச்சர் பதவிகளையும் பா.ஜ.கவுக்கு தாரை வார்த்தார். அதனால் 50 நாட்களைக் கடந்து அந்த இழுபறி முடிவுக்கு வந்து, பா.ஜ.கவின் முதல் சபாநாயகராக மணவெளி தொகுதியின் எம்.எல்.ஏ செல்வம் பதவி ஏற்றார். அதேபோல முதல் முறையாக அமைச்சரவையிலும் இடம்பெற இருக்கிறது அக்கட்சி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார் முதல்வர் ரங்கசாமி. அதையடுத்து புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின் வரும் 27-ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குடியரசுத் தலைவர் அனுமதி அளித்திருக்கும் அந்த பட்டியலில் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணக்குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதன்மூலம் பா.ஜ.க தரப்பில் நமச்சிவாயம், சாய் சரவண குமார் ஆகியோரும், என்.ஆர் காங்கிரசில் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் முக்கிய அம்சமாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்.எல்.ஏ ஒருவருக்கு புதுவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார். அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
Also Read: ``முரண்டு பிடிக்கும் பா.ஜ.க, அமைதி காக்கும் ரங்கசாமி!” என்ன நடக்கிறது புதுச்சேரி அரசியலில்?
இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். இவர் இரண்டாவது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க சார்பில இடம்பெற்றுள்ள நமச்சிவாயம் வில்லியனூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தவர், இந்த சட்டப்பேரவை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றுள்ளார். தற்போது நான்காவது முறையாக மீண்டும் அமைச்சராகிறார். அதே போல் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார் ஆகியோர் இரண்டாவது முறையாக அமைச்சர்கள் ஆகின்றனர். அதேபோல பா.ஜ.க தரப்பில் சாய் சரவணகுமார் முதல் முறை வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/after-41-years-woman-candidate-appointed-as-a-minister-in-puducherry-assembly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக