Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

புதுக்கோட்டை: துணி வியாபாரியை கட்டிவைத்து அடித்த கொடூரம்! - ஊராட்சி மன்றத் தலைவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நாகுடி பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். நாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல். இருவருக்குமிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த் தகராறு முற்றியதில், ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், கண்ணாடி பாட்டிலை எடுத்து வெங்கடேஷின் தலையில் கடுமையாகத் தாக்கியதில் வெங்கடேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், மீண்டும் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேஷ் பொதுவெளியில் வைத்து ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேலைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், ஆத்திரமடைந்த ஊராட்சிமன்றத் தலைவர் சக்திவேல் அவரது ஆதரவாளர்கள் 10 பேரைத் திரட்டி வெங்கடேஷ் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தவர்கள் அதிகாலை கைலியுடன் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷைத் தாக்கியதோடு, அப்படியே குண்டுக்கட்டாக தூக்கி வந்து நாகுடி கடை வீதியில் போட்டுள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல்

தொடர்ந்து, அங்கிருந்த கடை ஒன்றின் மரத்தில் வெங்கடேஷைக் கயிற்றால் கட்டிப் போட்டு 10 பேரும் மாறி, மாறித் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவெளியில் அதே ஊராட்சியைச் சேர்ந்த ஒருவரை, ஊராட்சி மன்றத் தலைவர் கட்டி வைத்து அடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை அங்கு நேரில் பார்த்த சிலர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டனர். அதோடு, நாகுடி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க, அங்கு வந்த போலீஸார் கயிற்றை அவிழ்க்கக் கோரினர். இதையடுத்து கட்டியவர்களே வெங்கடேஷை விடுவித்தனர். இந்தத் தகவல் மற்றும் வீடியோ வேகமாகப் பரவிய நிலையில் ஊராட்சி மன்றத் தலைவரின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த மணிகண்டன், காசி நாத் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். சாலையில் பொதுவெளியில் ஊராட்சிமன்றத் தலைவரே கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/panchayat-leader-arrested-for-attacking-a-man

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக