தற்போதைய கொரோனா காலகட்டம், அனைவருக்கும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு என செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால், வருமானம் குறைந்துகொண்டே வருகிறது; அல்லது இன்னும் அதே நிலையில்தான் வருகிறது. கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு சம்பளக் குறைப்பு செய்தன. அவற்றில் சில, இந்த ஆண்டுதான் முழு சம்பளத்தை வழங்கத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் சம்பளக் குறைப்பிலிருந்து மீண்டும் பழைய சம்பளத்தை வழங்க தொடங்கவில்லை.
Also Read: `நகைக்கடன் தள்ளுபடி அடகுக் கடைக்காரர்களுக்குத்தான் நற்செய்தி... ஏன்?' - விவசாயிகள் சொல்லும் காரணம்
இதன் காரணமாக மக்களின் பொருளாதாரச் சூழல் கவலைக்கிடமாக உள்ளது. வேலையிழப்பை சந்தித்தவர்களுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. தொழில்கள் கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல் இன்னும் சீராகவில்லை. இது போன்ற பல்வேறு காரணங்களாகத் தமிழகத்தில் நகைகளை அடமானம் வைத்து, கடன் பெறுவது அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களைவிட, அடகுக் கடைகளை அதிகம் நாடுகிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.
அதாவது, தமிழகத்தில் தங்க நகைக்கடன் சந்தையானது ரூ.6 லட்சம் கோடி அளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் அடகுக் கடைகளின் பங்கு ரூ.5 லட்சம் கோடியாகவும், வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் பங்கு ரூ.1 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. இது சரியான போக்கு கிடையாது என்கின்றனர் இத்துறைச் சார்ந்த நிபுணர்கள்.
அடகுக் கடைகளை மக்கள் நாடுவதற்கு என்ன காரணம்?
வட்டிக் கடைகள் மற்றும் அடமானக் கடைகளில், தங்க நகைக்கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 25%-ஆக இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் வழங்கும் கடன் தொகை, வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை விட அதிகம். அதாவது வங்கிகள் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75% தொகையை வழங்கினால், அடகுக் கடைகளில் 75% - 90% வரை கடன் தொகையை வழங்குகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், வங்கிகளில் பணத்தை கொடுக்க ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரைகூட காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால், அடகுக் கடைகளில் 10 நிமிடங்களில் பணம் கையில் கிடைத்துவிடுகிறது. இதுவும் மக்கள் அதிகம் அடகுக் கடையை நாடுவதற்கு காரணமாக இருக்கிறது.
ரிஸ்க் அதிகம்!
மக்களுக்கு இன்றைய தேவை பணம் என்பதால், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தை அவர்கள் நாடுகிறார்கள். ஆனால், அடகுக் கடைகளைப் பொறுத்தவரை வட்டி அதிகம் என்பதைத் தாண்டி, நீங்கள் அடமானமாக வைக்கும் நகைகளுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. நகைக்கடைகளைத் தாண்டி, அதிகம் தங்க நகைகள் திருடு போவது அடகுக் கடைகளில்தான் அல்லது நகைகள் அதிகம் சேர்ந்த பிறகு, அடகுக்கடை நடத்துபவர் கடையை காலி செய்துவிடுவார். இப்படியான செய்திகளைத்தான் நாம் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால், வங்கிகளில் தங்க நகை காணாமால் போய்விட்டது அல்லது கொள்ளையடிக்கப்பட்டது என்கிற செய்திகள் வருவது மிக மிகக் குறைவு.
Also Read: தங்க நகைக்கடன் வாங்கும் முன் இந்த 8 விஷயங்களைக் கவனிங்க! #GoldLoan
ஏனெனில், வங்கிகள் முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அங்கிருக்கும் நகைகளுக்கு பெரும் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், நகை அடமானக் கடைகள் அல்லது தனியார் நிறுவனங்கள் ஆர்.பி.ஐ-யின் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. அங்கு அடகு வைக்கப்பட்ட நகைகள் திருடு போனாலோ, அந்த அடகு கடைக்காரர்கள் நகைகளை சுருட்டிக்கொன்டு எஸ்கேப் ஆகிவிட்டாலோ பாதிப்பு உங்களுக்குத்தான்.
வங்கிகளும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும்!
தமிழகத்தில் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என 10,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன. தங்க நகைக்கடனுக்கு பொதுத்துறை வங்கிகள் சுமார் 7.35% முதல் 8.5% வரையிலும், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் துறை வங்கிகள் 8.5% முதல் 12% வரையிலான ஆண்டு வட்டியில் கடன் வழங்குகின்றன. கூட்டுறவு வங்கிகளில் 5- 9% வட்டியிலும் நகைக்கடன் வழங்குகின்றன. மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 11% முதல் 24% வரை நகைக்கடனுக்கு வட்டி வசூலிக்கின்றன.
தனியார் வங்கிகளைவிட பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைக் கடனுக்கு வட்டி விகிதம் குறைவு. அதனால் தங்க நகைகளை அடமானம் வைப்பவர்கள் பொதுத்துறை வங்கிகளை பரிசீலிக்கலாம். தற்போதைய நிலையில் கனரா வங்கி, மற்ற பொதுத்துறை வங்கியைவிட குறைவான வட்டி விகிதத்தில் தங்க நகைக் கடன்களை வழங்கி வருகிறது. வட்டி விகிதம் 7.35%. அடுத்ததாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) - 7.50%; ஆந்திரா பேங்க் - 7.60%; பெடரல் பேங்க் - 8.50%; பஞ்சாப் நேஷனல் பேங்க் - 8.75% என்கிற வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வருகின்றன.
ஆகையால், தங்க நகைகளை அடமானம் வைப்பதற்காக அடகுக் கடைகளை மற்றும் தனியார் நிறுவனங்களை பரிசீலிப்பவர்கள் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.
source https://www.vikatan.com/business/news/things-you-should-know-about-getting-gold-loan-from-pawnbrokers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக