Ad

ஞாயிறு, 27 ஜூன், 2021

'வாக்குறுதி கொடுத்த தி.மு.க., அது பற்றிப் பேசாமல் இருப்பது ஏன்?' - வானதி சீனிவாசன் கேள்வி!

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மக்களிடம் எதையெல்லாம் வாக்குறுதியாகக் கொடுத்தார்களோ, அதைப் பற்றியெல்லாம் மேம்போக்காக முயல்கிறோம் என சொல்லித்தான் சட்டசபை முதல் கூட்டத் தொடர் முடிந்துள்ளது.

வானதி சீனிவாசன்

Also Read: 'புதிதாக எதையும் செய்யவில்லை' - அறநிலைத்துறை நடவடிக்கைகளுக்கு வானதி சீனிவாசன் பதில்

`டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்’ என்றனர். அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட கவர்னர் உரையில் இல்லை. கோவை மக்களின் எதிர்பார்ப்பான மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் முதல்வர் ஆக்கபூர்வமான வாக்குறுதியை கொடுக்காதது ஏமாற்றமாக இருக்கிறது.

குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.15,000 கோடி கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்திருந்தனர். அது குறித்தும் எதுவும் கூறவில்லை. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டதாகச் செய்திகளில் பார்த்தேன். மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரிதான் பெட்ரோல், டீசல் கொடுக்கின்றனர். மாநில அரசின் வரி எவ்வளவு,

வானதி சீனிவாசன்

அதைக் குறைக்க இவர்கள் என்ன செய்யப்போகின்றனர் என்பது குறித்தும் அறிவிப்பு இல்லை. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் குறித்துத் தவறான தகவல்களைச் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். மாநில அரசாங்க வரியில் விலையைக் குறைக்கிறோம் என்றுதான் வாக்குறுதி கொடுத்தனர்.

வாக்குறுதி கொடுத்து வென்றுவிட்டு, இப்போது அது பற்றி பேசாதது ஏன்? 'ஜெய்ஹிந்த்' வார்த்தை இல்லாமல் இருப்பது பெருமை என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியுள்ளார். 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை சட்டசபையில் இல்லாத நிலை உருவாகும் என்றால், தங்கள் உயிர்களைத் துறந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இந்த சட்டசபை என்ன சொல்லப் போகிறது?

வானதி சீனிவாசன்

சட்டசபைக்கு என்று மரபு, விதிகள் உள்ளன. அமைச்சர்கள் உள்ளிட்ட அங்கு ஒரு சிலரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசக் கையை உயர்த்தினேன். அப்போது சபாநாயகர் நேரம் கொடுக்கவில்லை. அதனால், எங்கள் கருத்துகளை ஊடகங்களிடம் கூறுகிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/vanathi-srinivasan-press-meet-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக