Ad

செவ்வாய், 29 ஜூன், 2021

`பெண்கள் பல மணம் புரியலாம்' - தென் ஆப்பிரிக்காவின் புதிய சட்ட முன் மொழிவு

தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டபூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து அந்தநாட்டின் உள்துறை அமைச்சகம் பச்சை அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த விஷயம் தொடர்பான பொது விவாதத்துக்கான அழைப்புதான் இந்த பச்சை அறிக்கை.

ஏற்கெனவே, அங்கு ஆண்கள் பலதாரம் புரிவது சட்டபூர்வமானதுதான் என்றாலும், தற்போது பெண்கள் பல கணவர்களைக் கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவு பல எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள தற்போதைய திருமணச் சட்டம் பாலினப் பாகுபாட்டுடன் உள்ளது. எனவே, அதில் சமத்துவத்தைக் கொண்டு வர சட்டத்தைச் சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் முன்மொழிந்தனர்.

இருப்பினும், `பெண்கள் பல கணவர்களைக் கொண்டிருக்கலாம்’ என்ற இந்த முன்மொழிவை கன்சர்வேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பழைமைவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மத தலைவர்கள் ஆகியோர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மணம்

தென் ஆப்பிரிக்காவில் இதைப் பெரிதும் எதிர்ப்பவர்களில் அந்நாட்டின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் முசா செலேகுவும் ஒருவர். ஆண்கள் பலரும் இது குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, இவரின் எதிர்ப்பு மட்டும் பெரிதாகப் பேசப்படுவதற்குக் காரணம், செலேகு நான்கு திருமணம் செய்தவர் என்பதுதான். ஆம், இது ஒரு நகைமுரண்.

செலேகு தொலைக்காட்சியில் பிரபலமானதும், அவருக்கு நான்கு மனைவிகள் இருக்கும் காரணத்தால்தான். அவரின் குடும்பம் குறித்த அந்த நிகழ்ச்சியால்தான் நட்சத்திரமானார் செலேகு.

தனது யூடியூப் வீடியோவில், தான் சமத்துவத்தை எதிர்ப்பவன் இல்லை என்று தெரிவிக்கும் அவர், பெண்கள் பலதாரம் புரிந்தால் அவர்களின் குழந்தைகளின் நிலை குறித்துப் பெரிதும் கவலைப்படுவதாகத் தெரிவித்தார். எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பெண்நல ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அரசின் இந்த முடிவை பெண் ஆர்வலர்கள் பலர் ஒரு மைல்கல்லாகத்தான் பார்க்கின்றனர்.

மே மாதம் திருமணச் சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டு வரவிருப்பதாக அரசு தெரிவித்தபோது, இது குறித்துச் சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துகள் எழுந்தன. தென் ஆப்பிரிக்க ஊடகங்களிலும் இது குறித்த பல செய்திகள் வெளியாகின. விவாதங்களும் நடந்தன. பல மீம்களும் குவிந்தன.

இதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள், இது ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒரு முடிவு என்றனர். பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. எனவே, பல கணவர்களைக் கொண்டிருப்பது ஒரு தேர்வாக இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிவித்தனர். இதை எதிர்ப்பவர்கள் பலரும் கலாசாரத்தின் பக்கம் கைகாட்டினர்.

திருமணச் சட்டத்தில், குழந்தைகள் திருமணங்களைத் தடுக்கும் வகையில் திருமணத்துக்கான குறிப்பிட்ட வயது, பல்வேறு பாலினத்தவர்கள், மதங்களைச் சார்ந்தவர்கள், கலாசார நம்பிக்கை கொண்டவர்களின் திருமணங்களைச் சட்டரீதியாக்குவது போன்ற மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில் இந்து, யூத, முஸ்லிம், ரஸ்டாஃபாரியன் திருமணங்கள் சட்டபூர்வமானதாக கருதப்படுவதில்லை. அதே போன்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சட்டமாகவும் அது இல்லை. எனவேதான் இந்த மாற்றங்களை அதிபர் சிரில் ராம்ஃபோசாவின் அமைச்சரவை முன்மொழிந்துள்ளது. ஜூன் மாத இறுதிவரை தென் ஆப்பிரிக்க மக்கள் இது குறித்த தங்களின் கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

திருமணம்

ஆர்வலர்கள், பாரம்பர்யக் குழுக்கள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், LGBTQ ஆர்வலர்கள் மற்றும் இருபால் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்கப்பட்டுத்தான் இந்தப் பச்சை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தற்போது உள்ள திருமணச் சட்டம் என்பது 1961-ம் ஆண்டு கறுப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு மேலோங்கி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி கிறித்தவ முறைத் திருமணங்கள் மட்டுமே சட்டபடியாகச் செல்லும். 1994-ம் ஆண்டுக்குப் பிறகு திருமணச் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அது அனைவருக்குமானதாக இல்லை என்றும், போதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் இந்தச் சட்ட முன்மொழிவின்போது உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

- திலகவதி



source https://www.vikatan.com/government-and-politics/international/south-africa-is-considering-letting-women-have-multiple-husbands

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக